ஓயாத நடை - சிபி

ஒருவருக்குக் கிடைத்த சாதாரண விருதைக் கூட அவர் சட்டகத்திலிட்டு சுவரில் மாட்டுவதும், ஷோகேஸ்களில் அலங்கரிப்பதும், வீட்டிற்கு வருவோர்களுக்கு காட்டி மகிழ்வதும் இன்றைய சாதாரண நடைமுறைகளில் ஒன்று. அதிலிருந்து அசாதாரணமான ஆளுமைகள் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்று சிவராஜ் அண்ணா ஒருமுறை எங்களிடம் சொல்லியிருந்தார். அவர் ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களைப் பார்த்துவிட்டு கிளம்பும் பொழுது அம்மா அவரை ஒரு நிமிடம் இருக்கச் சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே சென்று ஒரு நீளமான ஏட்டை எடுத்து வந்தாராம். அதற்குள் வைத்திருந்த அவர் பெற்ற விருதினை எடுத்து "சிவராஜூ நீ ஏதேதோ ஊருக்கெல்லாம் போரியே. இத காட்டுனா டோல் கேட்ல எல்லாம் காசில்லாம போலம்னு சொல்றாங்க. இந்தா இத நீ வெச்சுக்கோ" என்று சொல்லி சிவராஜ் அண்ணாவிடம் நீட்டியுள்ளார். அதை கேட்டு சிவராஜ் அண்ணா அதிர்ந்த அதே அளவு அவர் எங்களிடம் சொல்லும் போது நாங்களும் அதிர்ந்தோம். அவர் அன்று கிருஷ்ணம்மாள் பாட்டியை பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கூடிய விரைவில் பாட்டியை பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். சக மாணவர்களிடம் கேட்ட போது இறுதியா...