ஓயாத நடை - சிபி

ஒருவருக்குக் கிடைத்த சாதாரண விருதைக் கூட அவர் சட்டகத்திலிட்டு சுவரில் மாட்டுவதும், ஷோகேஸ்களில் அலங்கரிப்பதும், வீட்டிற்கு வருவோர்களுக்கு காட்டி மகிழ்வதும் இன்றைய சாதாரண நடைமுறைகளில் ஒன்று. அதிலிருந்து அசாதாரணமான ஆளுமைகள் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்று சிவராஜ் அண்ணா ஒருமுறை எங்களிடம் சொல்லியிருந்தார். அவர் ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களைப் பார்த்துவிட்டு கிளம்பும் பொழுது அம்மா அவரை ஒரு நிமிடம் இருக்கச் சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே சென்று ஒரு நீளமான ஏட்டை எடுத்து வந்தாராம். அதற்குள் வைத்திருந்த அவர் பெற்ற விருதினை எடுத்து "சிவராஜூ நீ ஏதேதோ ஊருக்கெல்லாம் போரியே. இத காட்டுனா டோல் கேட்ல எல்லாம் காசில்லாம போலம்னு சொல்றாங்க. இந்தா இத நீ வெச்சுக்கோ" என்று சொல்லி சிவராஜ் அண்ணாவிடம் நீட்டியுள்ளார். அதை கேட்டு சிவராஜ் அண்ணா அதிர்ந்த அதே அளவு அவர் எங்களிடம் சொல்லும் போது நாங்களும் அதிர்ந்தோம். 

அவர் அன்று கிருஷ்ணம்மாள் பாட்டியை பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கூடிய விரைவில் பாட்டியை பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். சக மாணவர்களிடம் கேட்ட போது இறுதியாக என்னோடு சேர்த்து 13 மாணவர்கள் பாட்டியை பார்ப்பதென்று முடிவெடுத்து கடந்த அக்டோபர் 23 காந்தி கிராமம் சென்று இரு நாட்கள் பாட்டியுடன் இருந்துவிட்டு வந்தோம். 

செம்பட்டியில் இருந்து சின்னாளப்பட்டி பேருந்தில் செல்லும் போது ஒரு பாட்டி இரு பெரிய மூட்டைகளை பேருந்தில் ஏற்றினார். அப்போது ஸ்டெப்னியில் அமர்ந்திருந்த ஒருவரை இன்னொரு பெண்மணி "ஏய் மூட்டை ஏத்தறது தெரியல நீவாட்டுக்கு உக்காந்துட்டுருக்க எந்திறியா மொத" என்றார். அதை கேட்டவுடன் அவர் கோபத்தின் உச்சத்திற்கே சென்று திருப்பி வசைபாடுகிறார். மூட்டையை ஏற்றிய பாட்டி ஒருபுறம் அவரை கண்டபடி வார்த்தைகளில் பேசுகிறார். இருவரும் அடிப்பதற்கு கையினை ஒங்கிக்கொண்டு மோதுகின்றனர். நடத்துநர் தடுத்திருக்காவிடில் ரத்தக்களறி தான். இவ்வாறு தான் ஒரு தொண்ணூற்று எட்டு வயது அகிம்சாவாதியை பார்க்கச் சென்றோம். 

எங்களை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்துச் செல்ல ஸ்டாலின் அண்ணா, முத்து அண்ணா மற்றும் சிவகுரு அண்ணா ஆகியோர் காத்திருந்தனர். இவர்கள் வந்திருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. முத்து அண்ணா இறுகக்கட்டி தழுவினார். என்னை யாரென்றே தெரியாமல் குக்கூவில் முதல்முறை பார்த்த போதே அவ்வாறு தான் இறுகக் கட்டிக் கொண்டார். அவர் அனைவரையும் அவ்வாறு தான் கட்டித்தழுவி அன்பை பகிர்வார். 

காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் எல்லைச் சுவரிற்கு முன்பு ரயில் பாதைக்கு இந்த பக்கம் ஒரு நினைவுச் சின்னம் போன்ற அமைப்பு நிறுவப்பட்டிருந்தது. காந்தி ஒருமுறை மதுரைக்கு செல்லும் போது மக்கள் திரளாக வந்து ரயிலை நிறுத்தி காந்தியை தங்களிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், காந்தி அது சட்டவிரோதம். நான் மதுரையில் தான் பேசுவேன் என்று சொல்லியுள்ளார். அப்போது அனைவரும் வேண்டி கேட்டதனால் ரயிலில் இருந்து இறங்கி நின்று கையசைத்து விட்டு சென்றுள்ளார். அவர் இறங்கி நின்ற இடம் தான் அந்த நினைவுச்சின்னம். அவர் இறங்கியதனால் உருவானது தான் இந்த 1800 ஏக்கர் காந்தி கிராமம் என்று சிவகுரு அண்ணா சொன்னார். ஒரு மனிதரின் குரலை ஒட்டுமொத்த நாடும் கேட்டிருக்கிறது. அவர் செய்யச் சொல்லும் செயல்களை உடைமை, உறவு என எதையும் துறந்து நிகழ்த்திக் காட்ட தயாராகி இருந்திருக்கிறார்கள். காந்தி எவ்வளவு பெரிய ஆளுமை என்று அடிக்கடி நினைவுகூர வேண்டியுள்ளது. அவரைப்பற்றி இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. 

காந்தி கிராமத்தில் ஊழியரகம் என்னும் இடத்தில் தான் பாட்டி உள்ளார்கள். நாங்கள் அங்கு சென்றவுடன் முதலில் ஜெகந்நாதன் அவர்களின் சமாதி முன் கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அதன் பின் சாப்பிடுவதற்கு தண்ணீர் எடுக்க நான் பாட்டி இருக்கும் வீட்டிற்கு சென்றேன். லண்டனில் இருந்து வந்த ஒருவருடன் பாட்டி ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டு இருந்தார். அவர் இங்கு கிருஷ்ணம்மாள் பாட்டியை பார்க்க வர இரண்டரை லட்சம் செலவு செய்து வந்துள்ளாராம். பாட்டியின் மகன் பூமி குமார் அவர்களுக்கு அவர் ஆசிரியராம். பாட்டி என்னைப் பார்த்ததும் "வாங்க பா.. சாப்டீங்களா?" என்று கேட்டார். நான் இவ்வளவு தெளிவான குரலை எதிர்பார்த்திருக்கவில்லை. லண்டனில் இருந்து வந்திருந்தவர் பெயர் கார்மி. அவர் "who are they?" என்று கேட்டார். பாட்டி "They are students" என்றார். அவர் ஆச்சரியத்துடன் என்னிடம் " Are you a student? " என்று கேட்டார். நான் "yeah!" என்று சொல்லி ஏதோ ஒரு தயக்கம் காரணமாக தண்ணீரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். 

சாப்பிட்டுவிட்டு சாணக்குவியலை வெட்டி மண்புழு உரம் தயாரிக்க கொட்டி வைத்தோம். பின் செடி நடுவதற்கு வயலிற்கு செடிகளை எடுத்துச் சென்றோம். பாட்டியின் வீட்டில் இருந்து செடி நடும் இடம் குறைந்தது 500 முதல் 600 மீட்டர் இருக்கும். செல்லும் வழியில் முற்களும், செடிகளும் இருந்தன. ஆனால் பாட்டி அதை எதையும் பொருட்படுத்தவில்லை. "நீங்கலாம் அங்க வேல செய்யீல என்ன மட்டும் இங்க சும்மா இருக்க சொல்றீயா" என்று சொல்லி தானும் செடி நடும் இடத்திற்கு வருவேன் என்று ஒற்றைக்காலில் நின்று வந்து விட்டார். நான் தான் பாட்டியின் கையினை பிடித்து அழைத்து வந்தேன். 

"இந்த குழிய தோண்ட இங்க ஆளே இல்ல பா. கடைசீல பொக்களீன் வுட்டு தா தோண்டுனோ" என்றார் என்னிடம். 

அங்கு வந்து நாற்காலியில் அமர்ந்து நாங்கள் செடி நடுவதை பார்த்துக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஐம்பது குழிகள் தோண்டப்பட்டிருந்தது. பாதிச் செடிகளை நட்டு முடிக்கும் போதே கதிரவன் மறையத் தொடங்கி விட்டது. மங்கிய வெளிச்சம். அடர் ஆரஞ்சு நிறத்தில் சூரியன். சுற்றிலும் செடிகளும் மரங்களும் சூழ்ந்து ஒரு ரம்மியமான சூழல். சிவராஜ் அண்ணா எங்கள் அனைவரையும் அழைத்தார். "மீதி செடிகள நாளைக்கு கூட நட்டுக்கலா இப்போ சூழல் நல்லா இருக்கு வாங்க பாட்டி கூட உக்காந்து பேசலா " என்றார். 

நாங்கள் அனைவரும் பாட்டியை சூழ்ந்து அமர்ந்து கொண்டோம். பாட்டி பேசத் தொடங்கினார். "நீங்களாம் எந்த ஊரு?" எனக் கேட்டார். "ஈரோடு பாட்டி" என்றோம். 

"ஈரோடா.. ஈரோடுனு சொன்னாலே ஒரு சந்தோஷம். வினோபா பூமிதான இயக்கம் ஆரம்பிக்கும் போது ஈரோட்டுல ரயில்வே லைன் கிட்ட மன்றாடியார் எடத்து பக்கத்துல தான் மொத மொதல்ல ஆபீஸ் போட்டோம் தமிழ்நாட்டுக்கே. ஒரு ஒரு ஊருக்கும் ஒவ்வொருத்தர இந்த போராட்டத்த பாத்துக்கச் சொல்லி கொடுத்தாங்க. தமிழ்நாட்டுக்கு பாத்துக்கச் சொல்லி நம்ம அப்பா கிட்ட கொடுத்தாங்க. நம்ம அப்பானா நம்ம அப்பா ஜெகந்நாதன். அப்போ அவரு என்கிட்ட இப்படி தமிழ்நாட்டுக்கே என்ன பாத்துக்கச் சொல்லி பொறுப்பு கொடுத்துருக்காங்க என்னால குடும்போ கொழந்தைனு வெச்சிட்டு இத சரியா பண்ண முடியாது. நீ என்ன பண்ணுவியோ தெரியாது இந்த ரெண்டு புள்ளையும் எங்காச்சு ஒரு ஊருல கொண்டு போய் வுட்டுட்டு வா அப்படீனாரு. நானும் என்ன பண்ணறதுனே தெரியாம இப்படி கொண்டுபோய் வுட்டுட்டு வரச் சொல்லீட்டாங்களேனு அழுதுட்டே திருச்சி ரயில்வே ஸ்டேஷன் வந்துட்ட. அங்க வந்தா சத்தியாவுக்கு ஒரே காச்சலு. எனக்கு என்ன பண்றது யாருகிட்ட கேக்கறதுன்னே தெரியல. மருந்து கடையும் ஒன்னுமே இல்ல. இவள இங்க வுட்டுட்டு போனா யாராவது தூக்கீட்டு போய்டுவாங்களோனு பயம். மூனாங் கிளாஸ் படிக்குது. நா அப்போ தா வீட்டல்லா வுட்டு வெளிய வந்து பழவற. அப்பறம் ஒரு யோசன, இந்த டிக்கட் வாங்குன அம்மாடையே கேட்டா என்னனு அங்க போய் கேட்டே. அந்த அம்மா ஏதோ மாத்தர வெச்சிருந்து கொடுத்துச்சு அத போட்டதும் சரியா போச்சு. அப்பறம்தா ஈரோட்ல கலைமகள் கல்வி நிலையத்துல கொண்டாந்து சேத்து வுட்டுட்டு போன. அங்க இருந்த ஹெச்.எம் க்கு எல்லாம் ஒரே சந்தோஷம். நம்ம நாட்டுக்காக போராடுறவங்க பொண்ணு நம்ம ஸ்கூல்ல படிக்குதுன்னு. அங்க இருந்த டீச்சரெல்லாம் சேந்து தா சத்தியாக்காவ படிக்க வெச்சாங்க. அப்பறம் ஒரு நாள் சத்தியாக்கா எனக்கு போன் பண்ணி அம்மா இது மாதிரி என்ன அமெரிக்காவுக்கு படிக்க அனுப்பறாங்கமானு சொல்லுச்சு. அப்போத்தா நா போற. என்கிட்ட எப்பவுமே காசு இருக்காது. பயணத்துக்கு போறவங்களுக்கு பத்து பைசாவாச்சும் கொடுக்கனுமுல அது கூட என்கிட்ட இல்ல. அப்பறம் ஊருக்கெல்லாம் போனதுக்கு அப்பறம் சத்தியா போன் பண்ணி அம்மா என்ன இங்க எல்லாரும் லக்கி கேர்ல்னு  சொல்ராங்கமா. எனக்கு இங்க ஸ்வீடன்ல இருந்து ஃபிப்டீன் தௌசண்ட் டாலர்ஸ் ஸ்காலர்ஷிப் வந்துருக்குமா ஆனா அவ்வளோ காசையும் நானே செலவு பண்ணல இங்க என்னோட ரூம்ல ஒரு பொண்ணு இருக்கு." 

"அது என்ன பொண்ணு.. இந்த மார்டின் லூதர் கிங் கூட சேந்தது." என்று யோசித்தார். சிவராஜ் அண்ணா 

"நீ க்ரோ. கறுப்பினப் பொண்ணு" என்று சொன்னார். உடனே பாட்டி "ம்ம்.. கறுப்பின பொண்ணு அவளோட படிப்புக்கு செலவு பண்ற பாதிய அப்படீனா. நா நீ எப்படியோ செலவு பண்ணி படிச்சிட்டு வந்தா போதும்னு சொன்ன. அந்த பொண்ணு ஒருதடவ எனக்கு லெட்டர் எழுதிருந்துச்சு இப்படி நா படிச்சு முடிச்சதும் நா அங்க வந்துருவ தமிழ்நாட்டுக்குனு. அப்படியே வந்துருச்சு. சத்தியா இருந்துட்டு நான் செலவு பண்ண பணமெல்லா எனக்கு வேண்டா அதுக்கு பதிலா இன்னொரு கறுப்புப் பொண்ண நீ படிக்க வெய்யினு சொல்லீருச்சு. சத்தியாக்கு எப்படி ஃபிப்டீன் தௌசண்ட் டாலர்ஸ் கெடச்சிதோ அது மாதிரி நீங்களாம் இங்க வந்தது எனக்கு ஹண்ரட் தௌசண்ட் டாலர்ஸ் கெடச்சது மாதிரி. உங்கள எல்லாம் பாத்ததுல எனக்கு அவ்வளோ சந்தோஷம். உங்க எல்லாரு வீட்டுக்கும் வந்து உங்க அம்மா கையால இவ்வளவு இவ்வளவு சாப்பாடு சாப்பிட்டு வந்தன்னா ரொம்ப சந்தோஷம். என்ன உங்க வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போவிங்கள்ல.. இந்த காசு, பணம், தோட்டம் தொரவு அதெல்லாம் ஒன்னுமே இல்ல" அனுஸ்ரீ யின் கையை பற்றிக்கொண்டு "இப்படி ஒருத்தர ஒருத்தர் புடிச்சுக்கறமே இந்த மனித உறவுக்கு ஈடு எதுவுமே இல்ல." என்றார். சத்தியா அக்கா அம்மாவின் அருகில் வந்து "அம்மா இன்னைக்கு ஆயுத பூஜை நாமெல்லாம் போய் சாமி கும்புட்டுட்டு அப்பறமா பேசலாமா" என்றார். எங்கள் ஊர் ஈரோடு என்று சொன்னவுடன் ஈரோட்டைப் பற்றி அவர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பாட்டி இந்தியாவில் நாங்கள் எந்த மூலையில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொல்லியிருந்தாலும் அங்கு நிச்சயம் பாட்டிக்கு சொல்லத்தகுந்த அனுபவம் ஏதோ ஒன்று இருக்கும் என்றே நினைக்கிறேன். 

பாட்டி "என்ன இப்போ கைய புடுச்சு கூட்டிட்டு போறது யாரு?" என்று கேட்டார்.  பாட்டியை பிடித்து அழைத்து வருவதை யாருக்கும் விட்டுத்தர மனமில்லாமல் நானே அவசரமாக போய் பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டேன். அவருடன் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வருவதில் தான் எத்தனை ஆனந்தம். "இந்த செடியெல்லாம் நாளைக்கு நட்டீருங்க பா நீங்க இல்லன்னா நாங்க எங்க போய் ஆள் கூட்டியாந்து நடறது" என்றார். "நட்டீறோம் பாட்டி" என்றேன். என்னோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். "இந்த முருங்கச்செடியெல்லாம் நான் தா நட்டுன. இந்த எடத்துல வெங்காய செடி போட்ட இப்போ புடுங்கீட்டு மறுபடியும் போடனும். இங்க தக்காளி போட்ருக்கே" அப்படினு பேசிக்கொண்டே வந்தார். அவர்களுக்கு தொண்ணூற்று எட்டு வயது என்று சொன்னால் நம்பவே இயலாது. என் கையை மிக இறுக்கமாக பிடித்திருந்தார். "இந்த வெங்காயம் எல்லாம் இப்போ புடுங்கீரலாம். இப்படி கொத்து கொத்தா வரும்" அப்படினு கையை இறுக்கி பிடுங்குவது போல் காட்டினார். எவ்வளவு இறுக்கமாக, பலமாக கையை மடக்கிக் காட்டினார். விட்டால் இறங்கி பிடுங்கி விடுவார் போல் தான் இருந்தது. 

பாட்டியை வீட்டிற்கு அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தோம். "முருகா" என்று அங்கு சமையல் வேலை பார்ப்பவரை பாட்டி அழைக்கையில் என்ன ஒரு பூரிப்பு. நாற்காலியில் அவர் அமர்ந்தவுடன் மீண்டும் அவரைச் சுற்றி ஒரு வட்டம் உருவாயிற்று. நாற்காலி இருக்கும் போது நாங்கள் கீழே அமர்வதை பாசத்துடன் கண்டித்தார். வேணுகோபால் அண்ணாவின் மகன் கார்த்தி கீழே அமர்ந்தவுடன் "டேய் மேல உக்காரு எந்திரி அடிப்பே நானு" என்று அதட்டினார். அனைவரும் அமர்ந்தபின் மீண்டும் பேசத் துவங்கினார். "நா ரொம்பவே கொடுத்து வெச்சவ தா. மொதல்ல காந்தியோட இருக்க வாய்ப்பு கெடச்சுது. அப்பறம் அவர் முன்னாடி நா பாட வாய்ப்பு கெடச்சுது. அப்பறம் வினோபா கூட பயணிக்க வாய்ப்பு கெடச்சுது. வினோபா சின்ன சின்னதா பதினெட்டு குவளைல பால ஊத்தி அதுல பெறை போட்டு வெச்சுப்பாரு. பகவத் கீதைல மொத்தம் பதினெட்டு சேப்டர். ஒவ்வொரு சேப்டர் முடிக்கும் போதும் ஒரு ஒரு குவளை தயிர எடுத்து சாப்புடுவாரு. நாங்களாம் அவரு அந்த ஒரு குவளை தயிர சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள அந்த சேப்டர உக்காந்து மனப்பாடம் பண்ணுவோம். காலைல அவரு எந்திரிச்ச ஒடனே நடக்க ஆரம்பிச்சுருவாரு. யாரு எந்திரிச்சா யாரு கூட வரா அதெல்லாம் எதுமே பாக்க மாட்டாரு. அவரு பாட்டுக்கு நடந்து போய்டே இருப்பாரு. நானும் அவரு கூட நடந்து போய்டே இருப்பே. காலைல எந்திரிச்ச ஒடனே ஒம்போது கிலோ மீட்டர் நடந்ததுக்கு அப்பறம் தா எங்களுக்கு சாப்பாடே. அதுவும் அப்போ யாராச்சு இருந்து குடுத்தா சாப்புடுவோ இல்லன்னா இல்ல. உங்களுக்கு எல்லாம் திருவாரூர் தெரியுமா? அங்க கீழ்வெண்மணி அப்படிங்கர ஊருல கூலி அதிகமா கேட்டாங்கனு 44 பேர பெட்ரோல் ஊத்தி கொளுத்தீட்டாங்க. அத கேட்டுட்டு எப்படி பா இங்க சும்மா இருக்க முடியும். நா நேரா அங்க போயிட்ட. போனா மொழங்கால் வரைக்கும் பொதபொதனு உள்ள போர மாதிரி எல்லாம் எரிஞ்சு சாம்பலா கெடக்குது. கூலி எச்சா கேட்டதுக்கு இப்படி போட்டு எரிப்பானா? அப்பறம்தா நா அங்கயே இருந்து அந்த ஊரு மக்களுக்கு வேல செய்யறதுனு முடிவு பண்ண. ஆனா அதுக்கு அந்த ஊரு மக்களே முன்னாடி வந்து வேல செய்ய, எங்களுக்கு உதவ தயாரா இல்ல. அப்ப எல்லாம் வெறும் நீராகாரம் தா. தண்ணிய குடிச்சுட்டே இருந்த. அப்பறம் நாலு பழம் வாங்கி வெச்சுகுவ. தண்ணிய குடிச்சுட்டு அந்த பழத்த திண்ணுடே கொஞ்ச நாள் இருந்த. அப்பறம் அந்த ஊரு பொம்பளைங்க வயல் வேல செய்யும் போது அப்படியே போய் அவங்க கிட்ட பேசின. ஏம்மா உங்க ஊருல எல்லாம் சாயங்கால நேரம் வெளக்கேத்தவே மாட்டிங்களானு கேட்ட. அவங்க அதெல்லாம் ஏத்துவமே. ஏன் ஏத்த மாட்டோம் அப்படினாங்க. உடனே நா இருந்துட்டு அப்படினா நாம எல்லாம் ஒன்னா சேந்து ஒரு கோவில்ல வெளக்கு ஏத்தலாமானு கேட்ட. எல்லாரும் சேரி ஏத்தலாம்னு கோவிலுக்கு வந்துடாங்க. நா அவங்க கிட்ட இங்க பாத்தியா கோவில்ல வெளக்கு ஏத்துனா எவ்வளோ அழகா இருக்கு நாம பக்கத்துல இருக்கற கோவில்ல எல்லாம் வெளக்கு ஏத்தி வைக்கலாமானு கேட்ட. ஊரு பொம்பளைங்க எல்லாம் சாயங்கால நேரம் வெளக்கு ஏத்த கோவில்ல கூட ஆரம்பிச்சாங்க. அப்போ அவங்க கிட்ட மெதுவா பேச ஆரம்பிச்ச. ஒரு நாள் ஒரு நிலத்துக்காரர் என்ன வரச்சொல்லி ஏதோ கோவிலுக்கு ஜனங்கள கூப்புட்டுட்டு இருக்கனு பாத்தா இப்போ ஏதோ நெலத்த பத்தி எல்லா பேசிட்டு இருக்கியாமா. ஒழுங்கா ஊருக்கு போயிரு மறுபடியும் இது மாதிரி பேசிட்டு இருக்கீனு தெரிஞ்சுது தல தப்பாது பாத்துக்க அப்படினு மெரட்டுனாங்க. நா நேர கலெக்டர் கிட்ட போய் இது மாதிரி மெரட்ராங்கனு சொன்ன. அவரு உடனே அவங்கள எல்லாம் கூப்டாரு. அவங்க கிட்ட இந்த பொம்பள ஏதோ நெலத்த கொடுங்கனு சொல்லிட்டு இருக்குது என்னய்யா விசியோ? அப்படீனு கேட்டாரு. அவங்க எல்லாம் அய்யா எங்க கிட்ட ஏதுங்கய்ய நெலம். அந்த அம்மா சொல்ற அளவுக்கு எல்லாம் எங்க கிட்ட நெலமே இல்லீங்க. நாங்க எங்க போய் கொடுக்கிறது அப்படீனாங்க. உடனே நா இருந்துட்டு அதெல்லாம் இல்லீங்க உங்க கிட்ட இல்லன்னா பரவாயில்ல நா வந்து காட்டி கொடுக்கற நெலத்த அந்த மக்களுக்கு போற மாதிரி பண்ணி தாங்க அப்படீனு சொன்ன. அந்த கோயிலுக்கு எல்லாம் சுத்தி 500 ஏக்கரா 600 ஏக்கரானு எழுதி வெச்சிருக்காங்க. அதல்லாம் அந்த மக்களுக்கு போற மாதிரி பண்ணி குடுங்கனு கேட்ட. அதே மாதிரி தா ஒரு தடவ புத்த கயாவுல ஒரு சாமியார் கிட்ட 30,000 ஏக்கர் நெலம் இருந்துச்சு. நம்ம ஊருல ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பக்கத்துல இருந்து தா சீனிவாசன் அப்படினு ஒரு மாஜிஸ்திரேட் அப்போ அங்க இருந்தாரு. அவரு கிட்ட போயி இது மாதிரி 30,000 ஏக்கர் நெலம் இங்க ஒருத்தர் கையில இருக்கு அத பிரிச்சு அங்க நெலத்துல எறங்கி வேல செய்யறவங்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் பிரிச்சு குடுத்தா அவங்க எல்லாம் கொஞ்சம் நல்ல நெலமைக்கு வந்துருவாங்க அப்படினு சொன்ன. அவரு அங்க இருந்த சாமியாரு அவங்க இவங்கனு எல்லாரையும் கூப்பிட்டு பேசுனாரு. நான் அந்த நெலத்த பத்தி எல்லாம் நெறையா தகவல்கள சேத்தி நெறையா பேப்பர் ரெடி பண்ணி வெச்சிருந்த. அதெல்லாம் கொண்டு போய் கொடுத்து அந்த மக்களுக்கு நெலமெல்லாம் வாங்கி கொடுத்த." என்று பாட்டி சொல்லிக்கொண்டே இருக்கும் போது சாமி கும்பிட அழைத்தனர். 

ஜெகந்நாதன் அய்யா அவர்களின் சமாதியில் தான் சரஸ்வதி பூஜை நடந்தது. கடவுள்களின் படங்கள் எதுவும் அங்கு இல்லை. உருவ வழிபாடுகள் ஏதும் இல்லை. ஒரேயொரு தீபம் மட்டுமே ஏற்றப்பட்டிருந்தது. ஒரு சமாதியே இங்கு சாமி.

 "நல்ல ஆத்மா" என்றார்கள் பாட்டி. எப்போதோ ஒரு முறை நம் வீட்டில் இறப்பவர் நமக்கு கடவுள், பக்கத்து வீட்டுக்காரருக்கு பூதம் என்று யாரோ பேச்சுவாக்கில் விளையாட்டுத்தனமாக சொல்லி கேட்டிருக்கிறேன். ஜெகந்நாதன் அய்யா இந்தியாவையே தன் வீடாக கொண்டதனால் தான் என்னவோ எங்கள் அனைவருக்கும் அவர் அன்று சாமியானார். 

பாட்டியை பாடச் சொல்லி அனைவரும் கேட்டோம். சிறிது நேரம் அமைதியாகவே இருந்தார். சத்தியா அக்கா முதல் வரி பாடியதும் தன்னை அறியாமலே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை பாடலை பாடத் தொடங்கிவிட்டார். நான் பெரிதாக இது போன்ற வழிபாட்டு நம்பிக்கை அற்றவன். இருப்பினும் அந்த சூழலும் பாட்டியில் குரலும் என் கண்களின் ஓரம் சில துளி கண்ணீர்களை பூக்க வைத்து விட்டன. தமிழறியா கார்மியும் அருட்பெருஞ்ஜோதி சொல்வதை கவனித்தேன். 

Right livelihood விருதை பாட்டிக்கு வழங்கும் போது அவர் பேசிய உரையை சிவராஜ் அண்ணா எங்களுக்கு திரையில் போட்டுக்காட்ட எங்களை ஒரு அறைக்கு வரச் சொன்னார். நாங்கள் அனைவரும் செல்வதை பார்த்துவிட்டு பாட்டியும் உடன் வருவேன் என்று விடாப்பிடியாக நின்றார். அவரின் வலது காலில் செருப்பை மெட்டிப் பிடிப்பதில் சிரமப்பட்டார். அந்தக் கால் செருப்பு அவிழ்ந்து வந்து கொண்டே இருந்தது. அதை நாங்கள் சரியாக போட்டுவிட அவர் அதை தவிர்க்கவே கருதினார். நாங்கள் அவரின் செருப்பை கையில் எடுப்பதை அசௌகரியமாக கருதினார். செருப்பு போடாமலே நடந்து வந்தார். "இந்த காலு எத்தன தூரம் நடந்துருக்கு இங்க நடக்க மாட்டனா?"

சத்தியா அக்கா போராடியே அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். எவ்வளவு உறுதியான மனம். தன்னால் முடியாது என்று ஒப்புக்கொள்ளவே மாட்டார். எதையும் செய்து காட்டும் தீவிரம் இன்னமும் அவரிடம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. நாங்கள் காணொளியைப் பார்த்துவிட்டு வருவதற்கும் கிருஷ்ணம்மாள் பாட்டியின் மகன் பூமிக்குமார் கம்போடியாவில் இருந்து வீடியோ அழைப்பில் வருவதற்கும் சரியாக இருந்தது. அவரிடம் அருட்பெருஞ்ஜோதி பாடலைப் பற்றியும் வள்ளலார் பற்றியும் மற்றும் நாங்கள் பயிலும் அறக்கல்வி அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை பற்றியும் பேசினோம். இறுதியாக "எல்லாம் செயல்கூடும்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தோம். அன்றிரவு அங்கேயே தங்கினோம். நாட்டிற்காக வாழ்நாள் முழுக்க போராடிய கிருஷ்ணம்மாள் பாட்டி இருக்கும் அதே இடத்தில், ஜெகந்நாதன் அய்யாவும் கெய்த்தானும் மலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்து கட்டிய வீட்டின் அருகில், காமராஜர், நேரு, மார்டின் லூதர் கிங் என இன்னும் பல முக்கிய ஆளுமைகள் தங்கியிருந்த அதே இடத்தில் நாங்களும் தங்கியிருந்தோம் என்று இப்போது நினைத்தால் கூட சிலிர்ப்பூட்டும் அனுபவம் தான். 

அடுத்தநாள் விடியற்காலை 4:30 மணிக்கு எழுந்து கிளம்பி பலமுறை வழித் தவறி இறுதியாக சிறுமலை அடிவாரத்திற்கு சென்று சூரியோதயம் பார்த்தோம். கும் இருட்டு மெல்லக் கரைந்து ஒளி பரவும் பொழுது மரங்கள் சூழ்ந்த காட்டிற்குள் நடக்கும் அனுபவம் ரம்மியமானது. பல பறவைகளின் சத்தம் ஒருங்கிணைந்து அதில் எதாவது ஒரு பறவையை பிரித்தறிவதற்குள் திக்கு முக்காடித்தான் போனேன். அதிகமாகவும் புதிதாகவும் நான் கவனித்த பறவை அண்டங்காக்கைகள் தான். சாதரண காக்கைகளில் இருந்து நிறத்தில் மட்டுமல்ல அது பறக்கும் விதமே வேறுபட்டது. அண்டங்காக்கைகள் சிறகுகளை அதிகமாக அடிப்பதில்லை. அவற்றை விரித்தவாறே பறக்கின்றன கழுகு போல. திடிரென்று பார்க்கும் போது சிறிய அளவிலான கறுப்பு விமானம் பறப்பது போல் இருந்தது. பாவம் அந்த விமானிக்கு சரியாக ஓட்டத் தெரியாமல் மரங்களில் பாய்ச்சி விடுகிறார். 

மலையைத் தாண்டி சூரியன் மேலே வர வேண்டும் என்பதால் வெளிச்சம் வந்து வெகுநேரம் காத்திருந்தே உதயத்தைக் கண்டோம். நான் மெர்லின் செயலியை பயன்படுத்தி பறவைகளின் குரல்களை வைத்து அவற்றை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டு இருந்தேன். கார்மி எங்களிடம் இளையராஜா பாடலை இணையத்தில் தேடித் தருமாறு திறன்பேசியை அளித்தார். "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா" பாடலை போட்டுத் தந்தோம். வெளிநாட்டவரிடம் எங்கள் ஊர் சொர்க்கத்தை விட ஒசத்தி என்று சொல்லி வம்பிழுப்பதும் நன்றாகத்தான் இருந்தது. "Even it is a heaven, it wouldn't equal to our home town" என்று ஆங்கிலத்தில் அவரிடம் சொன்னோம். சிரித்துக் கொண்டார். இதைவிட சிறந்த ஊர்களை பார்த்திருக்கிறேன் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அவருடன் வேறு வழியாக ஊழியரகம் வந்தடைந்தோம். 

பாட்டி நாங்கள் செல்லும் போதே வேணுகோபால் அண்ணாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் சென்றதும் "வாங்க பா.. நடந்துட்டு வந்தீங்களா? எப்படி இருந்துச்சு" என்று கேட்டார். "ம்ம்.. நல்லா இருந்துச்சுங்க பாட்டி" என்றேன். "நாங்க அங்கெல்லாம் அதையும் தாண்டி நடந்து போவோம். போதும்னு ஒரு பக்கம் தோணுனாலும் இன்னும் நடக்கலாம் இன்னும் நடக்கலாம்னு தோணிட்டே இருக்கும் அப்படியே நடந்து போயிட்டே இருப்போ."

என்று அவர் பேசி முடித்தவுடன் வேணுகோபால் அண்ணா பாட்டியின் காலைத்தொட்டு வணங்கினார். உடனே பாட்டி "அடடே.. உங்க வீட்டுல ஒரு பாட்டி இருந்தா இப்படி தா எப்பவும் பண்ணீட்டு இருப்பீங்களா? நா உங்க வீட்டு பாட்டி மாதிரி. இப்படிலா பண்ணாதிங்க பா" என்றார். நான் படித்த பள்ளியின் தாளாளர் பெரியாரியக் கொள்கை கொண்டவர். எனக்கும் அதன் தாக்கம் இருந்தது. காலில் விழுவது தன்மானத்திற்கு இழுக்கு என்றே நம்பிக் கொண்டு இருந்தேன். பெற்றோரின் காலில் கூட விழ நினைத்ததில்லை. ஆனால் பாட்டியின் கால்களை வணங்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் தான் பாட்டி இவ்வாறு சொல்லிவிட்டார். இருப்பினும் திரும்பிச் செல்வதற்குள் ஒருமுறையேனும் பாட்டியை வணங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

"வாங்க பா சாப்பிடலாம்" 

"நாங்க செடியெல்லாம் நட்டிட்டு வந்து சாப்பிட்டுகறோம் பாட்டி நீங்க இப்போ சாப்புடுங்க" 

"சேரி பா. Carmi can we go for the breakfast?"

"Yes amma"

நானும் சில நண்பர்களும் தான் பாட்டியை சாப்பிட அழைத்துச்சென்றோம். பாட்டி செருப்பு போடாமல் தான் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டியின் செருப்பை எடுத்துவர ஓடினார். அவர் எடுத்து வந்ததை பார்த்து "அய்யோ.. இரு நானே வர இரு இரு நானே வர" என்றார். காந்தியவாதி என்பதை இறுதி வரை கடைபிடித்திருக்கிறார் என்பதை கண்கூடாக கண்ட காட்சி அது. அதன் பின் அழைத்துச் சென்று இட்லி போட்டு சாப்பிடக் கொடுத்துவிட்டு செடிகளை நடச்சென்றோம். நாங்கள் செடி நட்டுக்கொண்டு  இருக்கும் போதே சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் வயலிற்கு வந்துவிட்டார். இந்த வயதிலும் துள்ளல் மிக்கவராகவே பாட்டி இருந்தார். அங்கு வந்து கிணறு, செடி, வயல் அனைத்தையும் மேற்பார்வை செய்து கொண்டு இருந்தார். செடிகளை நட்டு முடித்துவிட்டு மீண்டும் பாட்டியை கையைப் பிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அங்கே வேலை செய்பவரின் வாழ்வைக் குறித்து பேசிக்கொண்டே வந்தார். பின் கெய்த்தான் அவர்களைப் பற்றியும் பேசினார். "இங்க தான் கெய்த்தான் உங்காந்திருப்பாரு. அவருக்கு வேலையே எங்க கையை எல்லா பாத்து செவந்திருக்கா, வேல செஞ்சிருக்கானானு பாத்து சாப்பட அனுமதிக்கறது தான். வெறும் கீரைய தான் போட்டு வேக வெச்சு வெச்சுருப்பாங்க அத சாப்பட்றதுக்கே கையைக் காட்டி தான் சாப்பட முடியும்."

நாற்காலியில் அவரை அமர வைத்துவிட்டு  குளித்துத் தயாராகி வந்து அனைவரும் வள்ளலார் புகைப்படத்தைச் சுற்றி அமர்ந்தோம்.

இறுதியாக அருட்பெருஞ்ஜோதி பாடலைப் பாடி எங்களுக்கு திருநீறு இட்டு ஆசிர்வதித்தார். அப்போது தான் நான் பாட்டியின் கால்களை தொட்டு வணங்கினேன். உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியா பூரிப்பு. என்னையறியாமல் கண்களில் நீர் பெருகுகிறது. இப்போது அந்த நிகழ்வை நினைத்து எழுதும் போதும் அதே போன்ற உணர்வு. அதே போல் கண் கலங்குகிறது. கோவை புத்தகக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருக்கும் போது பெருந்தேன் நட்பு புத்தக வெளியீட்டில் நாஞ்சில் நாடன் அவர்களின் உரையைக் கேட்க வாய்ப்பிருந்தது. அப்போது அவர் ஒருவர் காலில் விழும் பொழுது தொழுபவருக்கும் தொழப்படுபவருக்கும் ஒரே அளவிலான மன பூரிப்பு இருக்கும் என்றார். அது உணரக்கூடியதே.


 "பரீட்சைக்கு படிக்கறதுக்கு லீவு விட்டா புக்கு எல்லாம் எடுத்துட்டு இங்க வந்துருங்க. அமைதியா இருக்கும் படிச்சிட்டு போலாம். நா உங்களுக்கு எல்லாம் சோறு செஞ்சு போடற என்ன." 

"சரிங்க பாட்டி கண்டிப்பா வந்தரோம்"


ஆகச்சிறந்த ஆளுமையுடன் இரு நாட்கள் இவ்வாறு தான் கழிந்தன. சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கு வழங்கினார். சிவராஜ் அண்ணா அனைவருக்கும் மரக்கன்றுகளை வாங்கி வந்து பாட்டி ஆசிர்வாதத்துடன் வழங்கினார். இந்த சந்திப்பிற்கு காரணமாக இருந்த கிருஷ்ணன் அவர்களுக்கும் சிவராஜ் அண்ணாவிற்கும் நன்றிகள். 


-சிபி





கருத்துகள்

  1. சிபி,

    எழுத்துத் திறன் கைவரப் பெற்றவர் என எளிதில் இந்த கட்டுரை உங்களை அடையாளம் காட்டுகிறது. அவசியமான முக்கியமானவற்றை அவதானித்தல், கடந்தவைகளுடன் இணைத்து சிந்தித்தல், உரையாடலை தக்க வைக்கும் நினைவாற்றல் மூன்றும் உங்களிடம் உள்ளது. கூடவே சரளமான மொழியும். பஸ்ஸில் ஒரு சாதாரண பாட்டியை சந்தித்தல், நம் வீட்டு சாமி அண்டையோருக்கு பூதம், நாஞ்சிலின் காலில் விழும் குறிப்பு ஆகியவை சரியாக கோர்க்கப்பட்டு உள்ளது. சிலர் மட்டுமே அமரும் இருக்கைகளில் ஒன்று உங்களின் வெகு அருகே உள்ளது.

    கிருஷ்ணன்,
    ஈரோடு.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் சிபி
    உன் எழுத்தில் இந்த அனுபவங்களை வாசித்தது பெரும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.பாட்டி உன்னை ஆசிர்வதிக்கும் புகைப்படமும் நீ முகம் நிறைந்த மகிழ்வுடன் அவர்ளை ஒருபுறம் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படமும் நீ வேறு ஒரு ஆளுமையாக மாறிக்கொண்டிருப்பதை காட்டுகிறது. அன்பும் ஆசிகளும்

    பதிலளிநீக்கு
  3. வெகுசில ஆளுமைகளின் முன்னால் மட்டுமே நம் அகம் இயல்பாக தாள்பணியும். புறத்தில் அவர்கள் மிக எளிமையாக இருந்துகொண்டிருக்க நாம் அறியுந்தோறும் அவர்கள் நம்முள் வெகு உயரமாக வளர்ந்து கொண்டிருப்பார்கள். கிருஷ்ணம்மாள் பாட்டியுடன் நீங்கள் செலவிட்ட ஒருநாள் அவர்களின் ஆன்ம பலத்தையும் அரைவனைப்பையும் ஒரு தேர்ந்த பார்வையாளனின் பார்வையில் அணுக்கமாக உணர வைத்தது.

    மற்றபடி மேலே கிருஷ்ணன் குறிப்பிட்டவை தான், இவை உங்கள் ஆரம்ப கட்டுரைகள் என்பதே ஆச்சர்யமளிப்பது. வாழ்த்துக்களும் நன்றியும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ

தீபம் - சிறுகதை

மூன்றாவது மாடி - சிபி