பறவைகளைப் பார்த்தல் - சிபி

         நாங்கள் ஒருமுறை ஆலயக் கலை முகாமிற்கு கிருஷ்ணன் அவர்களுடன் வெள்ளிமலை செல்லும் பொழுது நித்தியவனத்திற்கு சற்று முன்பு உள்ள ஒரு சிறிய டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தோம். லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. நனையலாம் போல் இருந்தது. அப்போது கிருஷ்ணன் அவர்கள் திடீரென்று அந்த ஓலைச் சாலையின் ஒரு பக்க திறப்பிற்கு பூரிப்புடன் விரைந்தார். நான் என்னவாக இருக்கும் என்று எழுந்தேன். அவர் திரும்பி "ஒரு இருவாச்சி பறந்து போச்சு" என்றவாறு வெளியே மழையில் நனைந்தவாறே காரின் அருகில் வேகமாக நடந்தார். நானும் அவர் பின்னேயே நடந்து சென்றேன். அங்கு போய் நின்றதும் "பறந்து போய்ருச்சு புதுசா நீங்க பாத்த ஆச்சரியமா இருக்கும் ஆனா இங்க அடிக்கடி பாக்கலாம்" என்றார். எனக்கு பார்க்க இயலவில்லை என்கிற சிறு ஏமாற்றம். 

இருவாச்சி

       அதன் பின் நித்தியவனத்திலும், அதிகாலை நடையிலும் எண்ணற்ற பறவைகளைக் கண்டேன். ஆனால் பறவைகளைப் பார்ப்பதில் எனக்கு இருக்கும் சிக்கல் அது என்ன பறவை என்றே தெரியாது. என்ன பறவை, அதன் ஓசை, மற்ற பறவைகளுடன் அதன் வித்தியாசம் என எதுவும் எனக்கு தெரியாமல் ஒரு பறவையை பார்த்து அடையாளம் காண்பதும், ரசிப்பதும், நினைவில் வைத்திருப்பதும் எனக்கு சிரமமான ஒன்றாகவே இருந்தது. அந்த நிலையில் தான் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் செல்லும் வாய்ப்பை கிருஷ்ணன் அளித்தார். கூடுதல் வாய்ப்பாக ரவீந்திரன் அவர்களின் வகுப்பு. நாங்கள் மொத்தம் 11 மாணவர்கள் ராஜ் மஹாலில் முந்தைய நாள் இரவே சென்று தங்கி விட்டோம். அந்த இரவு 11:30 மணி வரை ரவீந்திரன் அவர்களின் வகுப்பு இருந்தது. மிகச்சரியான அறிமுகமாக அந்த வகுப்பு இருந்தது. அடுத்த நாள் பறவைகளை பார்வையிடும் பொழுது அவை என்ன பறவையென கண்டறிய அந்த வகுப்பே உறுதுணை. 

     வகுப்பில் அனைவரிடமும் அவர்களின் பிடித்த பறவையின் பெயர்களை அவர் கேட்டார். அனைவரும் ஆளுக்கொரு பறவையைக் கூறினர். பெரும்பாலும் கிளி, மயில், ஃபிளமிங்கோ என்பது போல பார்ப்பதற்கு அழகான பறவைகளும் கோழி, புறா போல வளர்ப்பதற்கும் உண்பதற்கும் ஏற்ற பறவைகளையே கூறினர். நான் மட்டும் காகம் என்று கூறினேன். அதற்கு நேரடியான காரணம் ஒன்றுமில்லை. நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் ஊரில் காகம் அதிகளவில் இருக்கும். சிறுவயது தான் மகிழ்ச்சியின் உச்சகட்ட காலகட்டம். மேலும் அப்போது எளிதில் அடையாளம் காணும் பறவை காகமே. எனவே, இப்போது எங்கேனும் காகத்தைப் பார்த்தால் எனக்கு சிறு வயது நியாபகங்கள் வரும் அதுவே காகம் எனக்கு படித்த பறவையானதற்கான காரணம். 

        எங்கள் வீட்டை சுற்றி எப்போதும் பழுப்பு நிறத்தில் ஒரு பறவை இருந்து கொண்டே இருக்கும். அதன் பெயர் எனக்கு தெரியாமலே இருந்தது. நானும் என்ன என்னவோ போட்டு இணையத்தில் தேடிப் பார்க்கிறேன் ஒன்றும் பிடிபடவில்லை. கடைசியாக இந்த வகுப்பில் தான் அதன் பெயர் தவிட்டுக் குருவி என்று தெரியவந்தது. பழுப்பை மட்டுமே தேடிய எனக்கு தவிட்டு நிறம் தட்டுப்படவில்லை. பல பறவைகள் அன்று இரவு அறிமுகமானது.

தவிட்டு குருவி

      கோக்கிலம்,மாங்குயில், பூங்குயில் என்று சினிமாக்களில் வரும் பாடல் வரிகள் உண்மையில் ஒரு பறவையின் பெயர் என்பது ஆச்சரியமளித்தது. நாம் கிளியென்றும், பச்சைக் கிளியென்றும் சொல்வது செந்தார்ப் பைங்கிளி என்றும் மைனா என்று நாம் சொல்லும் பறவையின் அசல் தமிழ்ப் பெயர் நாகணவாய் என்பதும் வியப்பளித்தது.

      பறவைகளை பார்க்கும் உத்திகளை அவர் கற்றுத் தந்தார். உதாரணமாக அது இருக்கும் இடத்தை அந்த இடம், இந்த இடம், அந்த கிளை என்றெல்லாம் சொல்லாமல் அந்த ஒட்டுமொத்த இடத்தையும் கடிகாரமென கற்பனை செய்து கொண்டு ஒரு மணி, ஐந்து மணி, பன்னிரண்டு மணி என கடிகார முள் போல் சொல்ல வேண்டும் என்றார். பறவையை பார்க்கும் போது அதன் அடையாளங்களை ஏட்டில் குறித்து வைக்கச் சொன்னார். உதாரணமாக அனு ஸ்ரீ யை ஒரு பறவையை நினைத்துக்கொள்ள சொன்னார். முதலில் அதன் நிறத்தைக் கேட்டார்; அவள் பச்சை என்றாள். பின் அதன் அலகின் அமைப்பைக் கேட்டார்; வளைந்திருக்கும் என்றாள். அலகின் நிறம் ஆரஞ்சா ? சிகப்பா ?என்று கேட்டார்; சிகப்பு என்றாள். கழுத்தில் வளையம் இருந்ததா எனக் கேட்டார்; ஆமாம் என்றாள். வால் நீடித்திருந்ததா என்று கேட்டார்; அளவோடு இருந்தது என்றாள். எங்களிடம் இது என்ன பறவை என்று கேட்டார். நாங்கள் ஒன்றிணைந்த குரலில் 'கிளி' என்றோம். அவர் "ஆம் கிளி தான் ஆனால் என்னை கேட்டால் அது செந்தார்ப் பைங்கிளி, அதிலும் ஆண் கிளி ஒன்றரை ஆண்டுகள் வயதுடைய கிளி என்பேன்" என்றார். அதை தொடர்ந்து ஆண் கிளிகளுக்கு மட்டுமே கழுத்தில் வளையம் இருக்கும். முதிர்ந்த கிளிகளுக்கே அலகு சிகப்பு நிறத்தில் இருக்கும். இனப்பெருக்கத்திற்கு தயாராகும் காலத்தில் மட்டுமே வால் நீளமாக வளர்ந்து இருக்கும் என்றார். வியப்பில் ஆழ்ந்தேன். சாதாரண கிளிகளுக்குள் இத்தனை வகைப்பாடுகளா? இதே போல் ஒவ்வொரு பறவையையும் அதன் குணங்களையும் அவர் விளக்கும் போது பறவையாக பிறக்காததில் வருத்தமே.

        அன்று 11:30 மணிக்கு வகுப்பு முடிந்தும் யாரும் தூங்கவில்லை 3:30 மணிவரை விழித்திருந்தோம். 5:30 மணிக்கு பறவையை காணச் செல்ல வேண்டும். திரையில் பார்த்தவற்றை தரையில் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் பூரிப்பு மறுபக்கம் அன்றைய நாள் தேர்விற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அச்சம். 4.30 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி பையினை மாட்டிக் கொண்டு நான்,சங்கர் மற்றும் கிருஷ்ணன் மூவரும் நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் சமணர்களின் வாழ்வியல் குறித்தும், திருவள்ளுவர் சமணரா? என்பது குறித்தும் நான் கிருஷ்ணன் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்துப் பேசியபடியே சென்றோம். ரவீந்திரன் அவர்களும் இருசக்கர வாகனத்தில் வந்தடைந்தார். மற்றவர்களும் வந்தடைந்தனர். அன்றைய அதிகாலைப் பொழுதில் செல்லும் வழியில் நான் முதன் முதலில் அடையாளம் கண்ட பறவை நீர் காகம். அதன் பின் இரட்டை வால் குருவி என்று பெரும்பாலானோர் சொல்லும் கரிச்சான் குருவி. இவ்வாறு தொடங்கியது அந்த நாள். அதன் பின் உள்ளே சென்ற பின் பாம்புத்தாரா (darter) மீன்களை வேட்டையாடி படித்து உண்ணும் காட்சியை பார்த்தோம். இதுவரை பார்க்காத பல பறவைகள் இருந்தன. பார்த்து கவனிக்காத பறவைகளும் இருந்தன. 

பாம்பு தாரா
         
நீர் காகம் தன் இறகுகளை உலர வைப்பதற்கு அதனை விரித்தவாறே வெகு நேரம் நின்றிருந்தது. அது போல் காட்சிகளை நான் பார்த்ததே இல்லை. Night heron, grey heron என்று நாரை இனங்களையும்; collared dove, laughing dove, spotted dove என்று புறாக்களின் இனங்களையும்; little egret, intermediate egret, great egret என்று கொக்குகளின் வகைப்பாடுகளையும் கண்டோம். Bee Eater, sunbirds ஆகிய சிறிய பறவைகளையும்; நாமக்கோழி போன்ற பறவைகளையும் பார்த்தோம். 
நாமக்கோழி

     எங்களுக்கு அன்றுதேர்வு இருந்ததனால் சற்று சீக்கிரமாகவே நானும் சங்கரும் கிளம்ப வேண்டி இருந்தது. ஆனால் நாங்கள் கிளம்பும் நேரத்தில் ஒரு சோடி மாங்குயில்களை ஈஸ்வர மூர்த்தி கண்டறிந்தார். மஞ்சள் நிறத்தில் கண்ணை கவரும் வகையில் அவை இருந்தன. சற்று வருத்தத்துடனே நாங்கள் புறப்பட்டோம்.

மாங்குயில்

       அன்று மாலை ரவீந்திரன் அவர்கள் இதுவரை பார்த்திராத ஐரோப்பிய பனங்காடை பறவையைக் (European roller) காண வேண்டும் என்பதற்காக விடாப்பிடியாகக் காத்திருந்து இறுதியில் கண்டறிந்து எடுத்த புகைபடத்தை எனக்கு அனுப்பினார். அந்த நாள் அவருடன் பயணித்த பிறகு பறவைகளை கவனிக்க தொடங்கி உள்ளேன் என்றே சொல்லலாம். எங்கள் வீட்டைச்சுற்றி இது வரையில் கிட்டத்தட்ட இருபது பறவைகளை இணையத்தின் உதவியுடன் கண்டறிந்துள்ளேன்.அவற்றின் பட்டியல் பின்வருமாறு, 


1. House sparrow - சிட்டுக்குருவி

2. Common tailor bird - தையல்சிட்டு

3. Rose ringed parakeet - செந்தார்ப் பைங்கிளி

4. purple rumped sunbird - ஊதாப்பிட்டு தேன்சிட்டு

5. Purple sunbird - ஊதாத் தேன்சிட்டு

6. Red vented bulbul - செங்குதக் கொண்டைக்குருவி

7. Indian peafowl - இந்திய மயில்

8. Common myna - நாகணவாய்

9. Yellow billed babbler - தவிட்டுக் குருவி

10. Laughing dove - கள்ளிப்புறா

11. White browed wegtail - வெண்புருவ வாலாட்டி

12. Asian koel - ஆசிய குயில்

13. Gray francolin - சாம்பல் கவுதாரி

14. Indian roller - பனங்காடை

15. Kingfisher -மீன்கொத்தி

16. Carolina wern

17. Ashy prinia - சாம்பல் கதிர் குருவி

18. Spotted dove - மணிப்புறா

19. Indian Pond heron - குளத்து நாரை

20. White pond heron 


இந்த இருபது பறவைகளில் என்னால் இப்போது பார்த்தவுடன் பத்து முதல் பதினைந்து பறவைகளை கண்டறிய இயலும். பறவைகள் நம் சூழலுடன் தொடர்புடையது. பறவைகளைக் கொண்டு நமக்கு வரும் ஆபத்துகளை நாம் கண்டறிய இயலும். அதற்காக நாம் பறவைகளை பார்க்க வேண்டும் என்று ரவீந்திரன் சொன்னார். இப்போது ஓரளவு என்னுடைய சூழலை என்னால் அவதானிக்க இயலும் என்றே எண்ணுகிறேன். மேலும் மனமகிழ்ச்சிக்காகவும், ரசனைக்காகவும் பறவைகளைப் பார்க்கலாம். அந்த வகையில் வெள்ளிமலையில் பார்க்கத் தவறிய இருவாச்சியை கூடிய விரைவில் நான் பார்த்தாக வேண்டும் என்று விரும்புகிறேன். 



- சிபி


கருத்துகள்

  1. சிபி,

    மிகத் தேர்ந்த மொழியில் கிட்டத்தட்ட கச்சிதமான வடிவில் எழுதி உள்ளீர்கள். உங்கள் முதல் கட்டுரையிலேயே குறிப்பிடத் தகுந்த தொலைவை கடந்து விட்டீர்கள், உங்களை நிரூபித்து விட்டீர்கள் என்றே சொல்லலாம். உரையாடலை நினைவில் கொண்டு அவ்வாறே எழுதுவது மிக அரிய திறன், அது உங்களுக்கு வாய்த்துள்ளது.

    அன்புராஜ் போன்ற வனத்தில் பதுங்கி இருந்தவருக்கும் ஒரு ஆர்வலர்களுக்கும் உள்ள வேறுபாடு எழுதி இருந்தால் கூடுதல் அம்சமாக இருந்திருக்கும். இது குறித்து படித்ததை மேற்கோள் காட்டுதல், கவித்துவமான காட்சி விவரணை, உவமைகளை பயன் படுத்துதல் போன்றவை ஒரு கட்டுரையைக் மேலும் செழுமை ஆக்கும். அடுத்த கட்டுரையில் அது அமைய உங்களுக்கு வாழ்த்துக்கள், ஒருங்கிணைப்பாளராக எனக்கு மகிழ்ச்சி.

    குறிப்பு : இது போன்ற சாதக விளைவுகள் அமையும் என்றால் மேலும் சில கூடுகைகளுக்கு திட்டமிடுவோம்.

    கிருஷ்ணன்,
    ஈரோடு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. அன்பு ராஜ் அண்ணாவுடன் ரவீந்திரன் அவர்களை ஒப்பிட்டு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நீங்கள் சொன்னவுடன் எனக்கும் தோன்றுகிறது. அடுத்த கட்டுரையில் மேற்கோள், உவமை போன்றவை சேர்த்து எழுத முயற்சிக்கிறேன்.

      சிபி

      நீக்கு
  2. ரவீந்திரன் சார் வகுப்பில் கற்பித்த அடிப்படைகள் பெரும்பாலானவற்றை சரியாக பதிவு செய்துள்ளீர்கள்.

    வகுப்பின் தொடர்ச்சியாக வீட்டருகே இருபது பறவைகள் அடையாளம் கண்டது மகிழ்ச்சிகரமான செய்தி. சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் சிபி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ

தீபம் - சிறுகதை

மூன்றாவது மாடி - சிபி