மூன்றாவது மாடி - சிபி

முதல் மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் இந்த உலகின் புறச்சூழலில் எத்தனை வித்தியாசங்கள். நான் தேர்வெழுதும் சமயங்களில் பதில் தெரியாமல் கொட்டை முழி முழிக்கும் போதும், நேரத்தைப் போக்க நாதியற்று இருக்கும் போதும் கை கொடுப்பது ஜன்னல் வழிக் கொஞ்சம் தெரியும் இந்த பரந்த பரப்பே. அனைத்துத் தளங்களிலும் பரிட்சை எழுத வேண்டியிருக்கும். ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு அறையில். தெரியாத கேள்விக்கு தெரியாத பதிலை பக்கம் பக்கமாக எழுதுவதைத் தவிர சலிப்பான வேலை வேறொன்றுமில்லை. சில சமயங்களில் தேர்வே எழுத வேண்டாம் சும்மாவே இருந்துவிடுவோம், இல்லை தூங்கி விடுவோம் என்னும் அளவிற்கு சலிப்பு நம்மை போட்டு அழுத்தும். அப்போதெல்லாம் விரிந்த தோள் கொண்ட இந்த இயற்கையின் மீது கொஞ்ச நேரம் சாய்ந்திருந்துவிட்டு தான் எழுதத் தொடங்குவேன்.

தரை தளத்தில் இருந்தோ முதல் மாடியில் இருந்தோ பார்க்கும் இந்த உலகிற்கும் மூன்றாவது மாடியில் இருந்து பார்க்கும் இந்த உலகிற்கும் உள்ள வித்தியாசங்கள் வியப்பில் ஆழ்த்தியன. 

மிக உயர்ந்த மரத்தின் தண்டில் மெல்ல நகரும் கம்பிளிப்பூச்சிகளின் தொகை எத்தனை அழகு. வெல்வெட் துணி ஒன்று மிகப்பெரிய மரத்தை முழுவதும் மூடி விழுங்குவது போன்ற காட்சி. அவை உண்டு தீர்த்த மிச்சத்தில் ஒரு பழுத்த இலை ஒன்று அந்த மரத்தில் இருந்து பிரிந்து இதுவரை அது பார்த்திராத அதன் உடலின் கால் பகுதியில் தஞ்சம் அடைகிறது. அதனுடனேயே தோன்றிய இன்னொரு இலை அதன் பிரிவு தாளாமல் தன் இணையுடன் சேர தன்னை அந்தக் கோடி இலைகளின் தொகையில் இருந்து விடுவித்துக் கொண்டு சரிகிறது. ஆனால், மண்ணைத் தொடாமல் அந்தரத்திலேயே நிற்கிறது. நிமிர்ந்து பார்த்தால் சிலந்தியின் வலை ஒற்றை நூலால் தாங்கிப் பிடித்திருக்கிறது.


இளமையான காற்று மெல்ல வீசுகையில் அந்த ஒற்றை நூல் அசைந்து அந்த அந்தரத்தில் நிற்கும் காய்ந்த இலையின் காதுகளில் வீணையின் இசை போல் மீட்டுகிறது. அதைக் கேட்டு அந்த காற்றுடன் அசைந்து கானத்திற்கு நடனமாடியபடியே மீண்டும் சரிந்து இணையுடன் சேர்ந்து உரமாகி வாழ்கிறது. 

இது போன்ற காட்சிகள் ஒருபோதும் மூன்றாவது மாடியில் வாய்க்காது. ஆனால்  அதன் அனுபவம் இதை விட அலாதியானது. அந்த சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு நானே காற்றில் மிதப்பது போன்ற உணர்வு தான் மூன்றாவது மாடியில். மிக உயர்ந்த மரங்கள் என் காலிற்கு கீழே இருக்கையில் பறக்கும் கம்பளத்தில் எந்தச் சலனமும் இன்றி அமர்ந்திருக்கும் உணர்வு. இங்கு எப்போதும் புதிதாக துளிர் விட்ட இளம்பச்சை நிற இலைகள் தான். பழுத்த இலைகளுக்கு இங்கு இடமில்லை. என்னால் ஒரு பொழுதும் ஏறி நின்று பார்க்கவியலா நீண்ட மரத்தின் உச்சிக்கிளை இலையினை இங்கிருந்து லாபகமாக வெளியே கையை நீட்டி பறிக்க இயலும். பட்டாம்பூச்சிக் கூட்டங்கள் எல்லாம் பறந்து திரிவதை இங்கு அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை. நேருக்கு நேராக பார்ப்பது கூட கீழே வாய்த்து விடும். குனிந்து பார்க்கும் அனுபவம் இங்கு தான். 

தட்டான் கூட்டம் தளராமல் பறந்து கொண்டு இருக்கும். மிக மெல்லிய சிறகு. இந்தப் பக்கம் இருந்து பார்த்தால் அந்த பக்கம் தெரியும் அளவு மென்மையானது. அதை வைத்தே உயர உயர பறக்கிறது. அதன் வேகம் தான் அதன் ஓரே ஆயுதம். அதை வைத்து மட்டுமே பறவைகளுக்கு இரையாகாமல் தப்பிக்கிறது. அவ்வாறு பறக்கும் கூட்டத்தில் இரு தட்டான்கள் மட்டும் இணைந்தே பறக்கிறது. உற்றுப்பார்த்தால் அவை 'ஹார்ட்' வடிவில் பறந்து கொண்டு இருந்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் 'தே ஆர் மேக்கிங் லவ்'. புணர்தலே பறத்தலுக்கு ஒப்பான உணர்வெனில்.. பறந்தவாறே புணர்வது? தட்டானாய் பிறப்பதற்கு நமக்கு இனியேதும் அதிர்ஷ்டம் உண்டோ? 



மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் காகத்திடமும், கிளியிடமும் ஊரெல்லாம் சுற்றித்திரியும் நீங்கள் இப்போது எனக்குக் கீழ் உள்ளீர்கள் என்று கர்வமாக சொல்லும் கணம் எத்தனை இன்பமயமானது. 

மலை உச்சிகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களைப் பார்த்து பாவப்படுவதா அல்லது பொறாமைப் படுவதா? 


கருத்துகள்

  1. சிபி,

    இது அபாரமான எழுத்து. ஒரு கவித்துவ நடை கைகூடியுள்ளது, இது மிக அரிது. ஒரு எழுத்தாளரின் அந்தஸ்தை அடைந்து விட்டீர்கள். குறிப்பாக ஒரு பழுத்த இலையும் பச்சை இலையும் உதிர்ந்து அமரும் காட்சி சிறப்பு. ஒரு சிறுவனின் கண்களை முதிர்க்காமல் பேணியுள்ளீர்கள். வேடிக்கை பார்ப்பதும் சிறு அசைவுகளை மனதில் படம்பிடிப்பதும் ஒரு கவிஞனின் வலக் கால், வல்லமையுடன் மொழியில் புனைவது அவன் இடக் கால். உங்களுக்கு இரண்டும் ஒத்திசைந்துள்ளது. இதையே மொழி நடை என்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. அருமை சிபி... இயற்கையை அவதானிப்பது இந்த விரைவு உலகில் அனைவருக்கும் கைகூடுவதல்ல. ஆனால் உங்களுக்கு இயல்பாகவே அதுவும் கவித்துவ நோக்கில் கைகூடியுள்ளது. வாழ்த்துக்கள் .....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ

தீபம் - சிறுகதை