தீபம் - சிறுகதை
தீபம்
வெகு நாட்களுக்கு பின் இங்கு வருகிறேன். ஆனால், இந்த இடம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வாழ்வின் இறுதி கணம் வரை மறக்க முடியாத இடம். அந்த மரத்தடியையும் மண் தரையையும் பார்த்தவுடன் என் விழிகளில் ஒரு தணல் தோன்றி எரிந்து கொண்டிருக்கிறது. கண்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அந்த தணலை அதே கண்களால் பார்க்க முடிந்தது. அருகே சென்றேன். அந்த மரத்தடியின் அடியில் நின்று மேலே தலையை அண்ணாந்து நோக்கிக் கொண்டு இருந்தேன். ஒரு பழுத்த இலை உதிர்ந்து காற்றில் நடனமாடியபடியே வந்து என் கண்களின் மீது விழுந்தது. ஒரு நிமிடம் எதுவும் செய்யாமல் அதே நிலையில் கண்களை மூடி அந்த இலையின் குளுமையை உணர்ந்து நின்றேன். அந்த தணல் தணிந்து விழிகளின் ஓரத்தில் நீர் வழியத் தொடங்கியது. தலையை நிமிர்ந்ததும் இலை சரிந்து என் உடலுடன் உரசி பாதத்தை சென்றடைந்தது. கண்களை துடைத்துக் கொண்டு மெல்ல குந்தி அமர்ந்து அந்த மண்ணில் கையை வைத்து பார்த்தேன். அந்த பெரும் மரத்தின் நிழலிலும் அந்த வெப்பம் அப்படியே இருந்தது.
நான் இந்த ஊரை விட்டு
சென்று இருபது வருடங்கள் ஆகிறது. என்னுடைய எட்டாவது வயதில் நடந்த அந்த சம்பவம்
தான் நான் ஊரை விட்டு செல்வதற்கு காரணம். இத்தனை வருடங்கள் கழித்து இதே ஊருக்கு இன்று
வருவேன் என்று நினைக்கவில்லை. நான் எவ்வளவோ முறை என் மேலாளரிடம் இந்த ஊருக்கு
என்னால் செல்ல இயலாது என்று சொல்லிப் பார்த்தேன். ஒரு கட்டத்திற்கு மேல்
கெஞ்சியும் பார்த்தேன். ஆனால் அவர் எதற்கும் மசியவில்லை. “டேய் சின்னபுள்ள மாதிரி
பண்ணாம கம்முணு போய்ட்டு வாடா” என்று அதட்டலாக சொல்லி விட்டார். அதற்கு மேல் நான்
எதுவும் பேசுவதற்கு இல்லை.
இந்த ஊரில் எங்களுடைய சர்க்கரை நிறுவனத்தின் புதிய ஆலை கட்டப் போகிறார்கள். இப்போது நான் வசிக்கும் ஊருக்கும் இந்த ஊருக்கும் பெரிய தொலைவு ஒன்றும் இல்லை. அதிகபட்சம் 50 கிலோமீட்டர் இருக்கும். ஆனால் இந்த ஊர், இதன் பழைய நினைவுகள் அனைத்தையும் மிக சிரமப்பட்டு அழித்திருந்தேன். ஆனால் இப்போது இந்த இடத்திற்கே மீண்டும் வர நேரிட்டது. என்னுடைய நிறுவனம் கட்ட முடிவு செய்துள்ள ஆலைக்கு ஒரு இடத்தை பார்த்து செல்வதற்காகவே நான் வந்துள்ளேன்.
இந்த ஊரின் அனைத்து புறமும் சுற்றிப் பார்த்து விட்டேன். சில இடங்கள் மங்களாக நினைவிருக்கிறது. ஆனால், பெரும்பாலான இடங்கள் எனக்கு முற்றிலுமே நினைவில்லை. அப்படி சுற்றித் திரிந்து கொண்டு இருந்த போது தான் இந்த இடத்தை வந்தடைந்தேன். இந்த இடம் மட்டும் எனக்கு அப்படியே துல்லியமாக நினைவிருக்கிறது. இங்கு நடந்த அத்தனை சம்பவங்களும் ஒன்றொன்றாக மேலெழும்பி வந்து கொண்டே இருக்கிறது. நான் எவ்வளவு தடுக்க முயன்றும் என் உள்ளத்தின் போக்குகளை என்னால் நிறுத்த முடியவில்லை. இத்தனை நாட்களாக நான் சிரமபட்டு எனக்குள் அழுத்தி வைத்திருந்த அனைத்தும் திமிறி எழுந்து மேலே வந்து கொண்டிருந்தது.
இந்த மரத்தடியில் தான்
அந்த கிழவர் எப்போதும் இருப்பார். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவரை
பார்த்துக் கொண்டு இருந்தேன். அழுக்கு ஒரு திட்டு போல மண்டிக் கிடக்கும் சட்டையுடனும்
முழங்காலுக்கு சற்றே கீழ்
கட்டப்பட்டிருக்கும் வேட்டியுடனும் சடை முடிகள் வளர்ந்து தோள்களில் படர்ந்த வண்ணம்
இருப்பார். வெளிரிப்போன நீண்ட தாடி மார்பில் கிடக்கும். முகத்தை பெரும்பாலும்
மயிர் மறைத்து இருந்தாலும் அது வற்றி ஒடுக்கு விழுந்து இருப்பது அப்பட்டமாக
தெரியும். எப்போதும் சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களை கழற்றி விட்டிருப்பார். எழும்பின்
மேல் சதையை உருக்கி ஊற்றியது போலத் தான் அவர் உடம்பே இருக்கும். அவருடைய மார்பு, நெஞ்செலும்புகளில்
இருந்து நேராக மயிர் முளைத்தது போல இருக்கும். இப்போது அந்த உருவத்தை யோசித்தால்
கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது.
என்னுடைய பெற்றோர்
அவரிடம் செல்லக் கூடாது, அவரிடம் பேசக் கூடாது என்று தொடர்ந்து கண்டித்துக் கொண்டே
இருந்தனர். என்னை மட்டுமல்ல அந்த ஊரின் அனைத்து குழந்தைகளின் வீட்டிலும் அதே தான்
சொல்வார்கள். ஆனால் எங்கள் அனைவருக்கும் அவர் மீது ஒரு தீராத கவர்ச்சி இருந்தது.
நாங்கள் எல்லோரும் காந்தம் போல ஈர்க்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் அவரிடம் சென்று
விடுவோம். அந்த கவர்ச்சிக்கும், எங்கள் பெற்றோர் எங்களை அவர் அருகில் செல்ல
அனுமதிக்காமல் இருப்பதற்கும் ஒரே காரணம் தான். அது அவர் தீயை வைத்து பல வித்தைகளை
நிகழ்த்திக் காட்டுவார். அவரிடம் எப்போதும் ஒரு நெருப்புப் பெட்டி இருக்கும்.
அவரை சுற்றி எப்போதும் விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும். நாங்களே கூட பல நேரங்களில் வீட்டிற்கு தெரியாமல் அம்பது பைசா, ஒரு ரூபாய் என்று எடுத்து வந்து அவருக்கு கற்பூரம், தீப்பெட்டி ஆகியவற்றை வாங்கி கொடுத்து இருக்கிறோம்.
அந்த மரத்தை ஒட்டி ஒரு
சிறிய கல்லை நிலத்தில் பதிந்து வைத்திருந்தார். அது தான் அவர் வணங்கும் தெய்வம்.
அவர் மட்டுமே வணங்கும் தெய்வம். அந்த தெய்வத்தின் பெயர் தீபேஸ்வரி அம்மாள். அவருக்கு
மட்டுமே அந்த தெய்வம் அருள் புரியும். அதன் முன் எப்போதும் ஒரு விளக்கு எரிந்து
கொண்டே இருக்கும். அவருக்கு யாராவது எப்போவாவது அளிக்கும் ஒரு ரூபாய் காசுகளை
எல்லாம் சேர்த்து வைத்து அதற்கு எண்ணை வாங்குவது, மண்ணெண்ணை வாங்குவது, கற்பூரம்
வாங்குவது என்று தான் செலவிடுவார். அதன் முன் இருக்கும் தீபத்தை அவர் ஒருநாளும்
அணையவிட்டதில்லை. எனக்கு ஆறு வயது இருக்கும் போது ஒரு முறை எங்கள் ஊரில் பெருமழை
பெய்தது. குளங்கள் நிரம்பி வழிந்தது. மண் பாதைகள் அனைத்தும் நீரடித்து ஓடும்
வாய்க்கால்களாக மாறின. ஒரு நாள் முழுக்க நிற்காமல் அடித்து ஊற்றிக் கொண்டு
இருந்தது. அவரும் அவரின் தெய்வமும் அந்த மரத்தின் அடியில் தான் இருப்பார்கள். மழை
வரும் முன்னரே அந்த தீபம் நனையாத வண்ணம் அதற்கு மட்டும் சினிமா பேனர்களை கொண்டு
ஒரு கூடாரம் அமைத்து விட்டார். அந்த ஒரு நாள் முழுவதும் அவர் வெளியில் நின்று
மழையில் நனைந்து கொண்டு அந்த தீபத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னாளில்
நான் அவரிடம் அது எப்படி மழை வரும் முன்னரே தீபத்திற்கு கூடாரம் அமைத்தீர்கள்
என்று கேட்டேன். அம்மாள் என்னிடம் சொன்னாளே என்றார்.
அந்த தெய்வத்திற்கு
செய்யும் பூஜையாக அவருடைய அந்த வித்தைகளை எல்லாம் செய்து காட்டுவார். தினமும் மாலை
அந்த தெய்வத்தை வணங்கி ஒரு கற்பூரத்தை விழுங்குவார். அதை பார்க்கவே நாங்கள்
ஓடுவோம். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பதினெட்டாம் நாள் அந்த தெய்வத்திற்கு பெரும்
திருவிழா போல அவர் பலவற்றை நிகழ்த்திக் காட்டுவார். அன்று தீப்பந்தமேந்தி நடனமாடுவார்.
கற்பூரத்தை வாயில் போட்டு விழுங்குவார். அதன்பின் வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக்
கொண்டு தீயில் ஊதுவார். மற்ற நாட்களில் அவரிடம் செல்ல அனுமதிக்காத என்னுடைய
அம்மாவே அன்று அங்கு வந்து விடுவாள். அந்த ஒரு நாள் ஊரே அங்கு கூடி விடும். அவர்
தன்னிலை மறந்து ஒரு உக்கிர நிலையில் இருப்பார். யாரும் அவர் அருகில் செல்ல
மாட்டார்கள். நூறு அடி இடைவெளியில் சுற்றி நின்று பார்த்து விட்டு சென்று
விடுவார்கள்.
எனக்கு அந்த தெய்வத்தை
பற்றியும் அவரை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு சுடர் எரிந்து
கொண்டு இருந்தது. யாரிடம் கேட்டாலும் “அதெல்லாம் எதுக்குனக்கு பொட்டாட்ட போய் படி
இல்லாட்டி எதாச்சு வேலைய பாரு” என்று தான் சொல்லுவார்கள். அவரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு
கட்டத்தில் பித்து பிடித்தாற் போல அலைந்தது இன்னும் நினைவிருக்கிறது. அவர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த
பெண்ணும் இவரிடம் ஓரளவு நட்பாக பழகியதே ஊருக்குள் தவறான பேச்சு எழுந்து அந்த
பெண்ணின் கணவர் அவளை சந்தேகப்பட்டதில் அவமானம் தாங்காமல் அவள் ஊரின் முன் தீ
குளித்து இறந்து விட்டதாகவும் அதன் பின் இவருக்கு பித்து பிடித்து இறந்து போன அந்த
பெண்ணை தான் இவர் தெய்வம் என்று சொல்வதாகவும் என்னுடைய நண்பன் ஒருவன் யாரோ பேசிக்
கொண்டு இருந்ததை ஒட்டு கேட்டு வந்து என்னிடம் சொன்னான்.
ஆனால் எனக்கு என்னவோ
அது உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை. அவரிடமே கேட்கலாம் என்று ஒரு நாள்
சென்று கேட்டேன். அவர் வழக்கத்தை விட கூடுதலாக இரண்டு கற்பூரங்களை வாயில் போட்டுக்
கொண்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டார். நான் அவர் ஏதாவது சொல்வார் என்று
காத்திருந்து சோர்ந்து வேறு வழியில்லாமல் திரும்பி விட்டேன்.
நான் அவரிடம் அவ்வாறு
சென்று கேட்டதில் இருந்து ஒரு வாரத்தில் ஐப்பசி பதினெட்டு. அந்த ஒரு வாரமும் அவர்
வேறு விதமாக இருந்தார். அவர் நடந்து கொண்ட விதம் இவ்வளவு நாட்கள் மிகத்தெளிவாக
இருந்தது போலவும் இப்போது தான் பைத்தியம் பிடித்து விட்டது போலவும் தோன்றியது. அந்த
ஒரு வாரம் நான் அவர் அருகில் செல்லவே இல்லை. ஆனால் தூரத்தில் இருந்து பார்த்துக்
கொண்டு இருந்தேன். தினம் தினம் அவர் பற்றவைத்து விழுங்கும் கற்பூரங்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதை கவனித்தேன். கடைசி இரண்டு இரவுகளில் சோற்றை
போல கற்பூரங்களை விழுங்கிக் கொண்டு இருந்தார்.
ஐப்பசி பதினெட்டு
வந்தது. ஆதவன் மறைந்து இருள் சூழ்ந்தது. ஊர் கூடியது. நான் அம்மாவின் அருகில் உள்ளம்
குறுகுறுக்க நின்றிருந்தேன். அவர் தீபேஸ்வரி அம்மாளின் முன் விழுந்து வணங்கிக்
கொண்டு இருந்தார். அந்த தெய்வத்தின் முன்பு எரிந்து கொண்டிருந்த தீபம் தான் அந்த
பெரும் மரத்தையே ஒளிரூட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு இலையும் ஒளிர்ந்து எரிவது
போல் தோன்றியது. அவர் எழுந்து அந்த விளக்கின் முன் இருந்த மண்ணை தொட்டு
நெற்றியிலும் கழுத்திலும் பூசிக் கொண்டார். அவருடைய கைகளும், விரல்களும் சூம்பி
போய் தட்டுக் குச்சிகள் போல இருந்தன. தீப்பந்தங்களை எடுத்து இரண்டு கைகளிலும்
ஏந்திக் கொண்டு சுழற்றி சுழற்றி ஆடத் தொடங்கினார். இது வரை நாங்கள் பார்த்ததை விட
மிகக் கடுமையான உக்கிரத்தில் ஆடிக் கொண்டு இருந்தார். அந்த மெலிந்த எலும்புகள்
மட்டுமே எஞ்சிப் போன உடம்பில் எங்கிருந்திருந்து இவ்வளவு ஆற்றல் பீறிட்டு எழுந்தது
என்றே தெரியவில்லை. ஓங்கி குதித்து அந்த தீப்பந்தங்களை முதுகிலும் மண்ணிலும் அடித்தார்.
அவருடைய நீண்ட நாக்கை நீட்டி பகிடை தாண்டி கழுத்தை நோக்கி முழுவதுமாக மடக்கி
சிறுநாக்கு துடிக்க ஆவென்று கத்தினார். கண்களின் உருண்டை வடிவம் முழுவதுமாகவே
வெளியே தெரியும் அளவிற்கு இமைகளை திறந்து அந்த ஊரையே எரிப்பது போல வெறித்தார். மூக்கு
புடைத்து விரிந்ததன் வழியாக இதயத்துடிப்பையே பார்த்துவிடலாம் போல் தோன்றியது. அந்த
இடமே தீப்பிழம்பின் ஒளியால் செந்நிரமாக ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஆனால்
அவருக்குள் எரியும் தணல் தான், வெளியில் இருப்பதை காட்டிலும் மிகப்பெரும் அளவில் சுவாலை
கக்கிக் கொண்டு இருப்பது போல தோன்றியது. அந்த தீப்பந்தங்களை இரு கைகளாலும்
சிலம்பம் சுற்றுவது போல சுற்றினார். அதிலிருந்து சிறு கங்கு ஒன்று தெறித்து
என்னருகில் வந்து விழுந்து அணைந்தது. எப்போதையும் விட இன்று இந்த களியாட்டம் நீண்டு
சென்றது.
அவரின் உடல் ஓயவே
இல்லை. பெரும் துடிப்புடன் இருந்தார். சடாரென்று மண்ணெண்ணையை எடுத்து வாயில்
ஊற்றிக் கொண்டு அந்த இரண்டு தீப்பந்தங்களையும் வாய்க்கு அரையடி தூரத்தில் சேர்த்து
வைத்துக் கொண்டு வாயில் இருந்த மண்ணெனையை ஊதியவாறே மிக வேகமாக சுழன்றார். தீ
சக்கரத்தின் நடுவில் உதித்தவர் போல இருந்தார். அவ்வாறே அந்த மண்ணெண்ணை புட்டி
முடியும் வரை வாயில் ஊற்றி அவற்றை காக்கி தணலிலேயே ஒரு ஓவியம் வரைந்து கொண்டு
இருந்தார். அவருடையே மூச்சே தீயை கக்குவது போலத் தான் இருந்தது.
அந்த வெறியாட்டு முடித்து
மீண்டும் அந்த தெய்வத்தின் முன்னால் சென்று நின்று காலால் உந்தி முக்கால் ஆள்
உயரத்திற்கு குதித்து கால்களை மடக்கி கீழே மண்டியிட்டு இறங்கி அந்த தெய்வத்தின்
இரண்டு புறமும் அந்த தீப்பந்தங்களை ஊன்றி நிறுத்தினார். அதே நிலையில் சில கணங்கள்
அசையாமல் நின்றார். ஒரு பெரும் நிசப்தம். ஊரே அமைதியானது. அவருடைய மூச்சுக்
காற்றின் ஒலி மட்டுமே எங்கள் காதுகளில் கேட்டது. இப்போதும் அது ஒலிப்பது போலவே
தோன்றுகிறது.
கைகளில் கற்பூரங்களை அள்ளி அந்த தீபத்தில் பற்ற வைத்து வாயில் போட்டு அழுத்தி விழுங்கிக் கொண்டு இருந்தார். எப்போதும் கற்பூரத்தை விழுங்கிய பின்னரே மண்ணெண்ணை கொப்பளிக்கும் நிகழ்வை அரங்கேற்றுவார். இன்று ஏன் மாற்றி செய்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் தான் இருந்தோம். அந்த உக்கிரம் எங்கள் அனைவருக்குள்ளும் பரவி இருந்தது. விழிகளில் தணல் பிழம்பு துடித்துக் கொண்டு இருந்தது. கூடவே ஏதாவது நடந்து விடுமோ என்று பெரும் பயமும் குடி கொண்டிருந்தது.
அவர் அந்த வெறியாட்ட
உச்சத்தில் இருந்து துளியும் தளரவில்லை கற்பூரம் உள்ளே சென்று கொண்டே இருந்தது.
அனைத்தையும் விழுங்கிய பின் மீண்டும் அதே போல நாக்கை மடக்கி சிறநாக்கு துடிக்க கண்கள்
பிளந்து ஊரே நடுங்கும் அளவிற்கு கத்தினார்.
ஒரு தேங்காய் தொட்டியில் ஒரு வித திரவத்தை வைத்து இருந்தார். அதை எடுத்து கரங்களில் பூசிக் கொண்டார். இதற்கு முன் இது போல அவர் செய்து நான் பார்த்ததில்லை. இது புதிய சடங்காக இருந்தது. அதை பூசிக் கொண்ட பின் நெருப்பில் அவர் கையை காட்டியதும் கை பற்றிக் கொண்டு எரிந்தது. ஊர் மக்கள் சிலர் அதை அணைக்க ஓடினார்கள். நிலம் அதிரும்படி கத்தி யாரும் தன் அருகில் வரக்கூடாது என்று அந்த சுவாலை துடிக்கும் கரங்களால் சைகை செய்தார். அனைவரும் மிரண்டு அமர்ந்தனர். மேலே வானத்தை அண்ணாந்து பார்த்தபடி ஓங்கி தன் மார்பில் அந்த கரங்களால் அடிக்கத் தொடங்கினார். மண்ணெண்ணை கொப்பளிக்கும் போது சட்டையிலும் மார்பிலும் விழுந்ததில் தீ பற்றிக் கொண்டது. நெஞ்சில் இருந்த கரிய முடி பொசுங்கியது. சட்டை முழுவதும் தீ பரவியது. தாடியிலும் மண்ணெண்ணை இருக்கேவே அதுவும் பற்றிக் கொண்டது. மெல்ல மெல்ல தோளில் விழுந்து கிடந்த சடையிலும் தீ பரவியது. அவரின் முகம் எரியத் தொடங்கியது. உடல் முழுவதும் தீ பரவி விட்டது. ஓடிச் சென்று தீப்பந்தங்களை எடுத்து தன் கரங்களில் வைத்துக் கொண்டு மீண்டும் குதித்து ஆடத் தொடங்கினார். ஊர் மக்கள் சிதறி ஓடி ஒரு ஈரக் கம்பளி எடுத்து வந்து அவர் மீது போர்த்த முற்பட்டனர். அருகில் வருபவர்கள் மீது அந்த தீப்பந்தங்களை வீசத் தொடங்கினார். அனைவரும் எதுவும் செய்ய இயலாமல் அப்படியே நின்றார்கள். அந்த தீ கொப்பளிப்பிற்கு நடுவில் எனக்கு அவரின் முகம் நன்றாக தெரிந்தது. அது மகிழ்ந்திருந்தது. அவரிடம் இருந்து ஒரு பெரும் சிரிப்பொலி மேலெழும்பியது. அந்த கணம் அந்த உடலும் முகமும் இதுவரை நான் பார்த்திருந்த கிழவராக அல்லாமல் ஒரு பெண் வடிவானவளாக தோன்றியது. அந்த உக்கிர நடனம் நலினமிகு பெண்ணின் தாண்டவம் போல் தோன்றியது. இப்போது அந்த மரத்தின் அடியில் பார்க்கிறேன். அங்கு அதே தீபம் சுடர்விட்டுக் கொண்டு இருந்தது.
சிபி.
வாழ்த்துக்கள் சிபி! அந்த மனிதர்களும் அந்த மண்ணும் கண்ணைவிட்டு விலகவில்லை. ஜெயமோகன் heart attack மரணம் தான் வலியற்றது என்று சொல்லிகொண்டே இருக்கிறார். தீயில் மரணம் தான் வலி மிகுதந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அவன் பேரொலி எழுப்பி சிரிக்கிறான்; அந்த பெண்ணின் நினைவே அவனின் வீடுபேறு. கதையின் முடிவு ஒரு உக்கிரமான ஆன்மிக அனுபவமாகவே எனக்கு தோன்றுயது.
பதிலளிநீக்கு