காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ
காதலெனும் நிகழ்த்துக் கலை
ஜெர்மனி நாட்டை சார்ந்த உலே (Uley) என்கிற நிகழ்த்துக் கலைஞர் தனது 76 ஆவது வயதில் இறந்த செய்தியை கேட்டவுடன் ஏதோ ஒரு விதத்தில் அவருடைய முன்னாள் காதலி மரீனா அப்ரமோவிக் (Marina abramovic) உடன் இணைந்து அவர் செய்த செயல்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் 1988 ஆம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் அவர்கள் சேர்ந்து இருந்த காலங்களில் நவீன கலை வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சில தருணங்களை நிகழ்த்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்னையும் உட்பட இன்னும் பல்லாயிரம் மனங்களில் எஞ்சி வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
2010 ஆம் ஆண்டு என்னுடைய பெற்றோர் என்னை நியூயார்க் நகரத்திற்கு அழைத்து சென்ற பயணம் என் வாழ்நாளில் என்னால் என்றென்னைக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. பிராட்வே ஷோக்களை பார்ப்பது, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இருந்து கீழே பார்க்கும் காட்சி என நான் பட்டியலிட்டு வைத்திருந்த பக்கெட் லிஸ்ட்களில் பலவற்றை டிக் அடித்தேன். ஆனால் அந்த பயணத்தில் நான் முற்றிலும் எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வு தான் இன்று மிக அசாத்தியமான ஒன்றாக என்னுடைய நினைவுகளில் எஞ்சி நின்று கொண்டிருக்கிறது. அது மரீனா அப்ரமோவிக் நிகழ்த்திய The artist is present என்கிற நிகழ்த்துக்கலையை நேரடியாக நவீன கலை அருங்காட்சியத்தில் (MoMA) பார்த்த அனுபவம். என்னுடைய அந்த பதின் பருவத்தில் அதற்கு முன் ஒரு முறை கூட அப்ரமோவிக்கின் பெயரை கேள்விப்பட்டது இல்லை. ஆனால் பலமணிநேரம் அலைந்து அவர் நிகழ்த்தியவற்றை எல்லாம் பார்த்து அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் போது கூடவே அவருடைய முன்னாள் காதலர் உலேவை பற்றியும் தெரிந்து கொள்ள நேர்ந்தது. அப்போது தான் நிகழ்த்துக் கலை குறித்தும், நவீன கலை குறித்தும், ஒருவர் தன்னை ஆழமாகவும் உள்நோக்கியும் பார்க்கும் போது என்ன விழைவு ஏற்படுகிறது என்பது குறித்தும் மனதை விஸ்தரித்து பார்க்கத் தொடங்கினேன்.
எதிர்காலத்தில் அப்ரமோவிக் உடைய இளமைப் பருவத்தைப் பற்றியும் அவர் கலை உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் இன்னும் விரிவான நோக்கில் நான் ஒரு சில கட்டுரைகளை எழுதக் கூடும். ஆனால் இப்பொழுது இவருக்கும் உலேவுக்கும் இடையேயான உறவைப் பற்றியும் அவர்களின் காதலைப் பற்றியும் அது ஏற்படுத்திய காலச்சார தாக்கதை பற்றியும் மட்டுமே பேச நினைக்கிறேன்.
இளமைக் காலம்:
அப்ரமோவிக் செர்பியா நாட்டை சார்ந்தவர். செர்பியாவின் தலைநகரான பெல்கிரேடில் அறுபதுகளின் நடுப்பகுதிகளில் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பில் படித்து முடித்தார். அதன் பின்னர் குரோஷியாவில் அதே அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயர் கொண்ட அமைப்பில் முதுகலை பட்டம் முடித்தார். அதன் பிறகு மீண்டும் செர்பியா திரும்பி நோவி சாட் என்னும் இடத்தில் உள்ள அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் இணைந்து தனது தனி நிகழ்வுகளை மேம்படுத்திக் கொண்டு இருக்கும் அதே சமயத்தில் அங்குள்ள மாணவர்களுக்கு கற்பிக்கவும் செய்தார். உலேவின் இயற்பெயர் Frank Uwe Laysiepen. இவர் ஜெர்மனியில் உள்ள சோலிங்கென் என்னும் ஊரில் பிறந்துள்ளார். எழுபதுகளின் தொடக்கத்தில் அவர் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு வந்த பிறகு வழி வழியாக சொல்லப்பட்டு வந்த பாலின கருத்துக்களை, அதன் விதிமுறைகளை எல்லாம் மீறி சுய உருவப்படங்களை போலரைட் புகைபடங்களாக எடுத்து அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து வெளியிட்டார். அந்த காலகட்டதில் இந்த செயலின் மூலம் மிகுந்த சர்ச்சைகளை எதிர்கொண்டார். இந்த நிகழ்வில் இருந்து தான் உலே கலைஞராக தனது வாழக்கையை தொடங்கினார்.
அகங்காரமும் அடையாளமும் தான் இவர்கள் நிகழ்த்தும் அனைத்திலும் மைய சரடாக இருக்கிறது. இவர்களின் கூட்டமைப்பின் அம்சத்தை "மற்றொருவர்" (The other) என்றே இருவரும் குறித்து சொல்கின்றனர். இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு ஒரே மாதிரி நடந்துகொள்ள தொடங்கினர். இது இவர்களின் உறவின் மீதான நம்பிக்கையை மேம்படுத்ததும் என்றனர். ஒரு கட்டத்தில் இவர்களுடைய சொந்த அடையாளமும் சுய உணர்வும் குறையத் தொடங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து செய்த வழக்கதிற்கு மாறான சில நிகழ்வுகள் பின்வருமாறு,
பிரபலமற்ற நிகழ்த்துக் கலைகள்:
Relation in space (1976) :
இந்த நிகழ்வில் அபிரமோவிக் மற்றும் உலே இருவரும் கேமரா காட்சிப் படுத்தும் எல்லையை தாண்டி வெளியில் இருந்து நிர்வாணமாக மிக விரைவாக ஓடி வந்து ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொள்கின்றனர். தொடர்ந்து திரும்ப திரும்ப இவ்வாறு இடித்துக் கொள்கின்றனர். பின் நாட்களில் உலே இந்த நிகழ்வைக் குறித்து சொல்லும் போது இதன் முடிவில் இருவருக்கும் அவர்களின் தோல் கன்றிப்போய் நீல நிறத்திலும், கருப்பு நிறத்திலும் இருந்தது என்று சொல்கிறார். இதை நிகழ்த்துவதற்கான நோக்கம் ஆண், பெண் இருவரின் ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து மூன்றாவதாக ஒரு ஆற்றலை உருவாக்குவது என்கின்றனர். அப்ரமோவிக் மற்றும் உலே இருவரின் வர்ணனையுடன் அந்த காணொளியை பார்ப்பதற்கு கீழே உள்ள இணைப்பை தொடவும்.
Relation in Movement (1977) :
இந்த நிகழ்வு அப்ரமோவிக் மற்றும் உலே இருவரும் நிகழ்த்தியவற்றில் பெரிதும் கவனிக்கப்படாத ஒன்று. இதை நிகழ்த்தும் போது அவர்கள் இருவரும் காட்சிக்கு புலப்படாததால் கூட பெரிதும் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம். இந்த நிகழ்வில் அருங்காட்சியத்தின் ஒரு காலியான அறையில் இந்த ஜோடி தங்களுடைய காரில் 365 சுற்றுகள் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு இருந்தனர். உலே அந்த காரை ஓட்டிக் கொண்டு இருக்கும் போது அப்ரமோவிக் ஒவ்வொரு சுற்றையும் எண்ணி அதை ஒரு மைக்கில் அறிவித்துக் கொண்டு இருந்தார். அப்ரமோவிக் அந்த நிகழ்வை இப்போது நினைவு கூர்கையில் ஒரு சம்பவத்தை சொல்கிறார். அது அந்த காரின் மோட்டார் ஒரு கட்டத்தில் எறிந்து அந்த கலையரங்கத்தின் மார்பில் தரையில் ஒரு கரிய வட்டத்தை ஏற்படுத்தி இருந்ததை சொல்கிறார். "அந்த நிகழ்வின் சாரமாக நாங்கள் கருதியது அதை நிகழ்த்தும் போது ஒன்று அந்த கார் நிலைகுலைந்து நின்றுவிடலாம் அல்லது நாங்கள் மயங்கி விழலாம் ஆனால் அந்த 365 ஆவது சுற்றை பூர்த்தி செய்யும் போது நாங்கள் ஒரு கற்பனையான ஆண்டை வாழ்ந்ததாக எண்ணிக் கொள்வோம்" என்று அப்ரமோவிக் சொன்னார்.
காணொளியை பார்ப்பதற்கு கீழே உள்ள இணைப்பை தொடவும்.
Relation in Time (1977) :
இந்த நிகழ்வில் அப்ரமோவிக்கும் உலேவும் தங்களுடைய கூந்தலை ஒன்றாக சேர்த்துப் பிண்ணிக் கொண்டு முதுகோடு முதுகை சேர்த்து பலமணி நேரம் அசையாமல் எதிரெதிர் திசைகளை நோக்கியபடி அமர்ந்து இருந்தனர். தொடக்கத்தில் அவர் குடுமியை பிண்ணி அமர்ந்திருக்கும் காட்சியை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞரை தவிர வேறு பார்வையாளர்கள் என யாருமே அல்லாமல் தன்னந்தனியாக அவ்வாறு அமர்ந்து இருந்தனர். ஒரு கட்டத்தில் இவ்வாறே வெகு நேரம் அமர்ந்திருக்க முடியாது என்று உணர்ந்த பின்னர் அவர்களைப் பார்க்க பார்வையாளர்களை அழைக்கத் தொடங்கினர். பார்வையாளர்கள் அவர்களை பார்த்துக் கொண்டு இருப்பது மேலும் அதிக நேரம் அவ்வாறு அமர்ந்திருக்க அவர்களை உந்தித் தள்ளுமா என்று சோதித்துப் பார்க்க நினைத்தனர், மேலும் ஒரு மணி நேரம் மேலும் ஒரு மணி நேரம் என்று அந்த நிலையிலேயே தொடர்ந்து இருந்து அதில் வெற்றியும் கண்டனர்.
Breathing in / Breathing out (1977-1978)
அப்ரமோவிக்கும் உலேவும் தாங்களே வடிவமைத்த ஒரு சிறு கருவியுடன் சேர்த்து அவர்கள் இருவரின் வாய்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்து தங்கள் நாசிகளை சிகரெட் பஞ்சுகளால் அடைத்து கொண்டனர். அவர்களின் வாயினால் மட்டுமே சுவாசிக்கும் படி அவர்களே தங்களை கட்டாயப் படுத்திக் கொண்டனர். அவர்கள் இருவரும் இன்னொருவரின் நுரையீரல் வெளியேற்றும் காற்றையே திரும்ப திரும்ப சுவாசித்தனர். ஒரு கட்டத்தில் குறைந்தபட்ச ஆக்ஸிஜன் கூட இல்லாமல் வெறும் கார்பன் டை ஆக்சைடையே இருவரும் சுவாசித்து இருவரின் நுரையீரலும் முழுக்க முழுக்க கார்பன் டை ஆக்ஸைடால் நிரம்பிவிட்ட பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் சுயநினைவு இல்லாமல் மயங்கி தரையில் விழுந்தனர்.
Imponderabilia (1977)
அப்ரமோவிக்கும் உலேவும் நிர்வாணமாக ஒரு கதவின் வழியில் எதிரெதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அவர்களுக்கு நடுவே ஒரு சராசரியான உடல்வாகு கொண்ட நபர் தன்னை குறுக்கிக் கொண்டு கடந்து செல்லும் அளவுக்கே இடம் இருந்தது. ஆனால் என்னதான் தங்கள் உடலை அவர்கள் குறுக்கிக் கொண்டாலும் இவர்கள் இருவர் மேலும் உரசாமல் செல்லும் அளவிற்கு அங்கு இடம் இல்லை. இதை நிகழ்த்துவதன் நோக்கம் அந்த வழியாக கடந்து செல்பவர்கள் ஒரு பெண்ணை (அப்ரமோவிக்) எதிர்கொள்ள விரும்புகிறார்களா அல்லது ஒரு ஆணை (உலே) எதிர்கொள்ள விரும்புகிறார்களா என்று சோதித்து பார்க்க வேண்டும் என்பதே. ஒரு சிலர் சகஜமாக தங்கள் சொந்த பாலினத்தவரை எதிர்கொண்டனர். இன்னும் சிலர் தாங்கள் எந்த பாலினத்தால் ஈர்க்கப் பட்டார்களோ அந்த பாலினத்தவரை எதிர்கொண்டனர். வேறு சிலர் தங்கள் மனதில் என்ன விழைந்து இருக்கிறதோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவை எடுத்தனர்.
இதே நிகழ்வை நான் நவீன கலை அருங்காட்சியத்திற்கு (MoMA) சென்றிருந்த போதும் நடத்தினர். இம்முறை அதை நிகழ்த்திய இருவரும் அப்ரமோவிக்கால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவ மாணவி. நானும் என்னுடைய அம்மாவும் அவர்களின் நடுவில் நடந்து செல்லாமல் விலகிக் கொண்டோம், அனால் என்னுடைய அப்பா அதில் கலந்து கொண்டு அங்கிருந்த பெண்ணை பார்த்தவாறு கடந்து சென்றார். மீண்டும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் யாரை எதிர்கொள்வேன் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. அந்த தருணத்தில் ஒருவரிடம் இருந்து எனக்கு கடத்தப்படும் அலைவரிசைக்கும் நான் என்ன மேற்கொள்ளப் போகிறேன் என்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
குறிப்பு : Imponderabilia - எதையும் திட்டவட்டமாக அளக்கவோ, மதிப்பிடவோ, நிர்ணயிக்கவோ முடியாத ஒன்று.
AAA - AAA (1978):
அப்ரமோவிக்கும் உலேவும் எதிரெதிரே நின்று கொண்டு தங்களது வாய்களை அகலத்திறந்து சாத்தியமான வரை கத்தி மிக நீண்ட, சத்தமான ஒலியை எழுப்பினர். இவ்வாறு கத்திக்கொண்டே இருக்கும் பொது மெது மெதுவாக இருவரும் அருகில் நெருங்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மிக நெருங்கி வந்து இன்னொருவரின் வாய்க்குள்ளேயே கத்தத் தொடங்கி இருந்தனர். சுமார் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்த நிகழ்வு ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் சோர்வுற்று அந்த கத்தலில் ஒத்திசைவு இல்லாமல் போனது. இதை நிகழ்த்துவதற்கான காரணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சகிப்புத்தன்மையையும் ஆற்றலையும் வேறுபடுத்தி காட்டுவதே ஆகும். இதன் காணொளியை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை தொடவும்.
Rest energy (1980)
இது தான் இவர்கள் இருவரும் இணைந்து செய்ததில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த நிகழ்வு. அப்ரமோவிக்கும் உலேவும் ஒரு வில் அம்பை கையில் பிடித்தவாறு தங்களுடைய முழு உடல் எடையுடன் பின்னோக்கி சாய்ந்து நிற்கின்றனர். உலே இழுத்து பிடித்திருக்கும் அம்பு நேராக அப்ரமோவிக்கின் நெஞ்சை குறி வைத்துக் கொண்டு இருந்தது. ஒரு துளி விரல் வழுக்கினால் கூட அம்பு பாய்ந்து அப்ரமோவிக் இறந்து விடுவார். உலே எந்த நொடியிலும் அந்த அம்பில் இருந்து கையை எடுத்து அப்ரமோவிக்கை கொல்லக் கூடிய வலிமையை கொண்டிருப்பது பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கும் ஆதிக்கத்தை குறிக்கும் படியாக உள்ளது. அதே போல் அப்ரமோவிக் கைகளில் பிடித்திருக்கும் வில் எந்த சூழலில் இருந்தும் மீண்டு வருவதை நிர்ணயிக்கக் கூடிய வல்லமையை பெண்கள் கொண்டிருப்பதை குறிப்பிடும் படியாக உள்ளது. இந்த குறியீட்டியலுக்குப் பின்னால் உள்ள கரு எனக்கு பிடித்திருந்தது. அனால் இந்த நிகழ்வில் எனக்கு இதை விட ஒரு படி அதிகமாக பிடித்தது அப்ரமோவிக் உலே மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான். உலே தன்னுடைய கையை துளியும் அசைக்காமல் மிக உறுதியாக பிடித்திருக்க வேண்டும். அப்ரமோவிக்வின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் உலெவின் கரங்களில் தான் அகப்பட்டுள்ளது.
Nightsea crossing (1981 - 1987)
அப்ரமோவிக்கும் உலேவும் இந்த நிகழ்த்துக் கலையை உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் நிகழ்த்தி உள்ளனர். இதில் மஹோகனி (Mahogani) மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மிக நீண்ட உணவு மேசையின் எதிரெதிர் திசைகளில் ஒரே மாதிரியான இருக்கைகளில் அமர்ந்து, எந்த ஒரு அசைவும் இன்றி மிகுந்த அமைதியான நிலையில் ஒருவரை ஒருவர் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். நமது உடல் துளியும் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் போதும் நமது மனம் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் என்பதே இதை நிகழ்த்துவதின் நோக்கம். இவ்வாறு பல இடங்களில் இந்த நிகழ்வை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது ஒரு சமயம் உலேவால் அப்ரமோவிக்கின் தாக்குப்பிடிக்கும் தன்மையை ஈடுகட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் இந்த நிகழ்வை கைவிட்டு விட்டு அப்ரமோவிக்கை வெறும் நாற்காலியை வெறிக்கும் படி விட்டுவிட்டு பாதியில் எழுந்து சென்றுவிட்டார். அது தான் அவர்கள் பிரிவின் தொடக்கம் என்று அப்ரமோவிக் ஒரு இடத்தில் சொல்கிறார். இப்போது இந்த நிகழ்த்துக்கலையை நீங்கள் வேறு எங்கோ கேள்விப்பட்டிருப்பதாக நினைத்தீர்கள் என்றால் நான் சொல்ல வருவதற்கு இரண்டு படி முன்னால் தான் உள்ளீர்கள்!
காதலர்கள்
The Nightsea crossing நிகழ்த்துக் கலை இந்த ஜோடிகளின் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தை உருவாக்கியது. 1980 காலகட்டத்தில் இதை நிகழ்த்த தொடங்கிய போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து இருந்தனர். இந்த நவீன காலகட்டத்தில் இதுவரை நான் கேள்விப்பட்டதிலேயே மிக பிரம்மாண்டமான காதல் வெளிப்பாடு இதுவாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர்களின் காதலை கொண்டாடும் விதமாக சீனப் பெருஞ்சுவரின் எதிரெதிர் திசைகளில் இருந்து நடக்க ஆரம்பித்து அந்த சுவரின் நடுப்புள்ளியில் அவர்கள் சந்திக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டு உள்ளனர். இதற்காக சீன அரசிடம் அனுமதி கேட்டு சென்று பல வருடங்கள் அதற்காக காத்திருந்தனர். அதேசமயம் சில துரோகங்கள் சமரசம் செய்ய முடியாத பிரச்சனைகள் என பல சிக்கல்களை எதிர்கொண்டதில் இந்த ஜோடி ஒருவரை ஒருவர் விலக்கத் தொடங்கி இருந்தனர்.
நீண்ட காத்திருப்பிற்கு பின் இறுதியாக 1987 லில் இவர்கள் இருவரும் ஏற்கனவே பிரிந்திருந்த நிலையில் சீன அரசு அந்த முழு சுவரிலும் அவர்கள் நடந்து செல்வதற்கு அனுமதி அளித்தது. பிரிவில் இருந்தபோதும் அவர்கள் திட்டமிட்டிருந்தபடி அந்த சீனப் பெருஞ்சுவரின் எதிரெதிர் திசைகளில் இருந்து நடந்து வந்து சுவரின் நடுவில் சந்தித்து கைகுலுக்கி விடைபெற்றுக் கொண்டனர்.
13,170 மைல் நீளம் கொண்ட உலக அதிசயங்களில் ஒன்றான இந்த பெருஞ்சுவரின் எதிரெதிர் திசைகளில் இருந்து இவர்கள் இருவரும் சுமார் மூன்று மாதங்கள் நடந்து ஒருவரை ஒருவர் சந்தித்து உள்ளனர். அப்ரமோவிக் மஞ்சள் கடலில் இருந்தும் உலே கோபி பாலைவனத்தில் இருந்தும் நடக்கத் தொடங்கினர். தங்கள் சீன மொழி பெயர்ப்பாளர்களின் உதவியுடன் இவர்கள் செல்லும் வழியில் உள்ள விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்து நடக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்ரமோவிக் இந்த நிகழ்வு நடந்து முடிந்த பின்னர் அவர்கள் இருவர் இடையிலும் ஒரு நல்லிணக்கம் தொடர வேண்டும் என்று ஏங்கிக்கொண்டு இருந்ததாக பின் நாட்களில் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் அந்த சுவரின் நடுவில் சந்திக்கும் போது அவருக்கு உலே மீது இருந்த தீவிரமான காதல் ஏக்கங்கள் எல்லாம் மங்கி உலேவை தோழமையுடனும் சக கலைஞராகவும் மட்டுமே பார்க்கத் தொடங்கி இருந்தார். இதுதான் இவர்களின் கடைசி கூட்டமைப்பு என்று இருவருமே அறிந்து இருந்ததால் அந்த தருணம் அவர்கள் இருவருக்குமே மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக இருந்தது. இந்த உணர்ச்சிகரமான தருணத்தின் போதும் அப்ரமோவிக் மிகுந்த சிக்கலுக்குண்டான மனநிலையில் இருந்தார். இந்த நீண்ட பிரயாணத்தின் போது உலே தன்னோடு வந்த சீன மொழிப் பெயர்ப்பாளரை கர்ப்பமாக்கி இருந்ததை அப்ரமோவிக் தெரிந்திருந்தார். அது தெரிய நேர்ந்த போது முற்றிலும் இதயம் நொறுங்கியது போல் இருந்தது என்று அப்ரமோவிக் வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த சீன மொழிப் பெயர்ப்பாளருடன் உலேவிற்கு பிறந்த பெண் குழந்தை என்பது உலேவிற்கு பிறந்த முதல் குழந்தை அல்ல. அறுபதுகளின் பிற்பகுதிகளிலும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் அவர் இரண்டு பெண்களை கருவுற்றதாகவும் அதன் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றதாகவும் பின் நாட்களில் அவர்கள் இருவருடனான தொடர்பையும் முறித்துக் கொண்டதாகவும் உலே ஒப்புக்கொண்டு உள்ளார். ஆனால் இந்த மொழிபெயர்ப்பாளருடனான உறவை அவர் வேறு விதமாக கையாண்டார். 1989 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த தியானன்மென் சதுக்கம் (Tiananmen square massacre) படுகொலைக்கு முன்னதாகவே அவரைக் கூட்டிக் கொண்டு ஆம்ஸ்டர்டம் வந்து விட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த இரவு மருத்துவமனைக்கு மேலே பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டு இருந்த நிலவைப் பார்த்து அந்த குழந்தைக்கு லூனா என பெயரிட்டார். இந்த ஜோடி பல வருடங்கள் ஒன்றாகவே இருந்து லுனாவுடன் உலகின் பல நாடுகளுக்கு பயணித்து உள்ளனர். லுனாவிற்கு 17 வயது ஆனதும் உலே இந்த இரண்டு பெண்களிடமும் இருந்து விடைபெற்று வந்துவிட்டார்.
Neša Paripović (1971 - 1976) மற்றும் இத்தாலிய சமகால கலைஞர் Paolo Canevari (2006 - 2009) ஆகிய இருவருடன் அப்ரமோவிக் திருமண வாழ்வில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. குழந்தைகளை பெற்றுக் கொள்வது தான் செய்யும் பணிகளுக்கு பேரழிவாக அமையக்கூடும் அதனால் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை கருக்களைப்பு செய்திருப்பதாக அப்ரமோவிக் ஊடகங்களில் தெரிவித்து உள்ளார்.வரலாற்றில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு வாய்ப்புகளும் வெற்றிகளும் வாய்க்காததற்கு அவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மீதான கடமைகள் தான் காரணம் என தான் நம்புவதாக அப்ரமோவிக் வெளிப்படுத்தி உள்ளார்.
The Artist is Present
2010 ஆம் ஆண்டு அப்ரமோவிக் தன்னுடைய வாழ்நாளில் நிகழ்த்திய சில பிரபலமான நிகழ்த்துக் கலைகளை நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியத்தில் (MoMA) பெரிய அளவில் மீண்டும் நிகழ்த்தினார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட என்னைப் போன்ற பார்வையாளர்கள் அதை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம். இந்த நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கு பல மாதங்களுக்கு பின்பிருந்தே இவற்றை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று ஹட்சன் பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள தன்னுடைய வீட்டில் 30 நிகழ்த்துக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது மாணவர்கள் தங்களுடைய திறன்பேசி உட்பட அனைத்து மின்னணு சாதனங்களையும் அணைத்து அவரிடம் கொடுத்துவிட்டு உண்ணாவிரதம், தூக்கமின்மை, நிர்வாணமாக அனைவரும் இணைந்து வாழ்வது, தியானம் ஆகிவற்றை மேற்கொள்ள தயாரானார்கள். இவற்றையெல்லாம் செய்யும் போது அவர்கள் தங்களை நடிகர்களாக உணர்ந்து கொண்டிருந்த பிரக்ஞையை இயல்பாகவே விடுவிக்க தொடங்கிவிடுவார்கள். அவர்களின் உடலும் மனமும் மெல்ல சாந்தமடைந்து அப்ரமோவிக் நடத்தும் கடினமான நிகழ்த்துக் கலைகளை தாங்கிக்கொள்ளும் திடத்தை பெறுகின்றனர். "நாம் அடுத்த மூன்று நாட்களுக்கு எதையும் சாப்பிடவோ அல்லது பேசவோ போவதில்லை. இப்போது நீங்கள் என்னை வெறுக்கலாம் ஆனால் பின் நாட்களில் எப்போதும் என்னை நேசிக்கப்போகிறீர்கள். ஆதலால் இப்போது நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்யுங்கள்." என்று அப்ரமோவிக் சொன்னதாக அவர் பயிற்றுவித்த கலைஞர்களில் ஒருவர் பின் நாட்களில் சொன்னார்.
அங்கு நடைபெற்ற நிகழ்த்துக் கலைகளில் ஒன்றில் அப்ரமோவிகே பங்குபெற்றது தான் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. அது தான்
The Artist is Present. இது கிட்டத்தட்ட உலேவும் அப்ரமோவிக்கும் ஏற்கனவே நிகழ்த்திய Nightsea Crossing நிகழ்வை ஒத்தது. அந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்ட தருணத்திலிருந்து மூடப்படும் வரை அவர் அங்கு போடப்பட்டிருந்த மேசைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருக்கு நேர் எதிரே இன்னொரு நாற்காலி போடப்பட்டு இருந்தது. அங்கு வரும் பார்வையாளர்கள் யார் வேண்டுமானாலும் அந்த நாற்காலியில் மாறி மாறி அமர்ந்து அங்கு இருக்கும் நூறு பேர் மத்தியில் எதுவும் பேசாமல் அவரின் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். இந்த நிகழ்வின் நோக்கம் அந்தப் பக்கம் அமர்ந்து இருக்கும் யாரை வேண்டுமானாலும் எந்த ஒரு வார்த்தையுமே பேசாமல் இவரால் ஆழமாக உணர முடியும் என்பதற்காக தான். கிட்டத்தட்ட ஆயிரம் பார்வையாளர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் அத்தனை பேரும் வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்த போதே கண்ணீருடன் தான் திரும்பினார். தொடக்கத்தில் இதை நிகழ்த்தும் போது இவர் அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் இது மிகப்பெரிய வெற்றியை கண்டதும் MoMA விற்கு வரும் ஏராளமான பார்வையாளர்கள் இதில் பங்குபெற மணிக்கணக்கில் வரிசையில் நிற்கத் தொடங்கினர். இப்போது அந்த அருங்காட்சியத்திலேயே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வாக இது தான் உள்ளது.
அவருடன் பங்கேற்ற பங்கேட்பாளர்களின் புகைப்படங்கள் பல ஊடகங்களில் இடம் பெற்றன. ஆனால் ஒரு பங்கேட்பாளரை எதிர்கொள்ளும் போது அப்ரமோவிக் வெளிப்படுத்திய உணர்ச்சிவசப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது மட்டும் அல்லாமல் கலை உலகிலும் பெரிய அளவில் கவனிப்பை பெற்றது.அது வேறுயாரும் அல்ல. உலே.
உலே எதர்ச்சையாக 22 வருடங்களுக்கு பிறகு அப்ரமோவிக்கை காண்பதற்காக அன்று காலை நவீன கலை அருங்காட்சியத்திற்கு (MoMA) வந்திருக்கிறார். அப்ரமோவிக்கிற்கு தெரியாமல் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக இந்த நிகழ்வின் பங்கேற்பாளராக உலே வந்து அவர் முன் அமர்ந்து கொண்டார். அப்ரமோவிக் கண்களை திறந்து எதிரில் இருக்கும் நபரை பார்த்த உடன் அது உலே என்பதை கண்டறிந்து விட்டார். உலேவைப் பார்த்து கன்னங்கள் சிவக்க வெட்கி சிரித்தார். இரண்டு முன்னாள் காதலர்கள் ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் சொருகி வார்த்தைகளே அல்லாமல் மிக அன்யோன்யமாக ஏதோ ஒன்றை பேசிக்கொண்டு கொண்டு இருந்தனர். அவர்களுடைய உணர்வுகள் அந்தரங்கமாக பரிமாறப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒருகட்டத்தில் அப்ரமோவிக் அங்கிருந்த மேசையின் மீது சாய்ந்து தன்னுடைய கரங்களை நீட்டி உலேவின் கரத்தை பற்றிக் கொண்டார். அங்கிருந்த பார்வையாளர் கூட்டம் இந்த ஜோடி இத்தனை வருடங்களுக்கு பிறகு இணைந்ததை கரகோஷத்துடனும் ஆர்ப்பரிக்கும் சத்தத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். உலே அங்கிருந்து எழுந்து சென்ற பின் அப்ரமோவிக் தன்னுடைய முகங்களில் வழிந்தோடிக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டார். அந்த தருணத்தில் அவர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகளின் உண்மைத்தன்மையும் உணர்வுப் பெருக்குகளும் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரம் பார்வையாளர்களிடம் எதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் உலே இறந்து போன பின்னரும் அந்த தாக்கம் அந்த பல்லாயிரம் மனங்களில் இருந்து அகலாமல் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.
பிந்தைய காலங்கள்
அந்த நிகழ்விற்கு பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையில் அனைத்தும் சுமூகமாக சென்றது என்று தான் சொல்ல விழைகிறேன். ஆனால், முழுக்க அப்படி நடக்கவில்லை. 2015 இல் அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த பணிகளுக்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை அப்ரமோவிக் மீறிவிட்டார் என்று சொல்லி உலே அவர் மீது வழக்கு தொடுத்தார். டச்சு (Dutch) நீதிமன்றத்தால் அப்ரமோவிக் உலேவிற்கு 280,500 டாலர்கள் காப்புரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
டென்மார்க்கில் உள்ள லூசியானா நவீன கலை அருங்காட்சியகத்தில் 2017 ஆம் ஆண்டு அப்ரமோவிக்கின் பணிகளை கௌரவிக்கும் பொருட்டு ஒரு விழா ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் உலே கலந்து கொண்டதன் மூலம் அவர்களுக்கு இடையிலான உரசல்கள் அனைத்தும் நீங்கிவிட்டதாக தெரிகிறது. அவர்கள் இருவரும் இணைந்து செய்த வாழ்நாள் பணிகளை கொண்டாடுவதற்காக அவர்களுக்கு இடையில் இருந்த கோபம், காழ்ப்பு அனைத்தையும் பின்னால் வைத்துவிட்டதாக அந்த நிகழ்வில் அப்ரமோவிக் சொல்லியுள்ளார்.
அப்ரமோவிக் 2007 ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தில் தனக்கு மிகவும் பிடித்த நட்சத்திர வடிவிலான வீட்டை வாங்கினார். பின்னர் 2018 ஆம் ஆண்டு லண்டனிற்கு செல்லும் திட்டத்தில் இருந்தார். அவர் கலை உலகில் தன்னை எப்போதுமே ஒரு பொது ஆளுமையாகவே முன்னிறுத்தி உள்ளார். மரீனா அப்ரமோவிக் கல்வி நிறுவனம் என்ற பெயரில் நிகழ்த்துக் கலைகளை பயிற்றுவிக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். 2020 ஆம் ஆண்டு லண்டனின் ராயல் அகாடமியில் தன்னுடைய பிரபலமான பல கலைகளை நிகழ்த்திக் காட்ட திட்டமிட்டு இருந்தார்.
2011 ஆம் ஆண்டு உலேவிற்கு நிணநீர் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இயக்குனர் தம்ஜான் கோசோல் ( Damjan Kozole) என்பவர் Project Cancer: Ulay's journal from November to November என்ற பெயரில் உலெவின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் அவர் அப்போது செய்து கொண்டிருந்த பணிகள் பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார். 2014 ஆம் ஆண்டு உலே அந்த புற்றுநோயில் இருந்து மீண்டுவிட்டார். ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அவர் இறந்ததற்கு இன்னும் தெளிவான காரணம் கிடைக்கப்பெறவில்லை. அவருடைய மரணத்திற்கு முன்பு இருந்த வியாதிகள் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்று ஊகிக்கப் படுகிறது.
இது கலை சமூகத்திற்கு ஒரு வருத்தமிகு தருணம். இந்த தருணத்தில் இந்த இரண்டு கலைஞர்களும் ஒன்றாக சேர்ந்து நிகழ்த்திய அசாதாரணமான நிகழ்வுகளை நினைத்து பார்த்துக் கொள்வோம். 2017 ஆம் ஆண்டு லூசியானா நவீன கலை அருங்காட்சியகத்தில் கிறிஸ்டியன் லண்ட் (Christian Lund) என்பவரிடம் "நிகழ்த்துக் கலை வரலாற்றை திருப்பி பார்க்கும் போது எங்கள் இருவருடைய பங்கு அதில் அளப்பரியது" என்று அப்ரமோவிக் சொல்லியுள்ளார். அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை.
- தமிழாக்கம்: சிபி
கருத்துகள்
கருத்துரையிடுக