வரலாற்றை சந்தித்தல் - மு.சௌமியா ஸ்ரீ
நான் சிறுவயதிலிருந்து என்னை சுற்றி இருக்கும் பெண்களின் வாழ்க்கையைப் பார்த்து ஒரு பெண், வாழ்வில் தான் நினைத்ததை செய்யவும் விரும்பியதைப் போல் வாழவும் திருமணமும் குடும்பமும் ஒரு தடையாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் புத்தகத்தில் மேரி கோம் அவர்களின் சுயசரிதத்தைப் படித்தேன். அப்போது "மேரி கோம்" அவர்கள் உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 5 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்று தெரிந்துக் கொண்டேன். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு திருமணம் ஆகிய பிறகும் குத்துச்சண்டையில் பங்கேற்றார் எனவும் குழந்தை பெற்ற பிறகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியுள்ளார் என்பது என் எண்ணத்தையே மாற்ற ஆரம்பித்தது.
பிறகு, ஒருநாள் சிவராஜ் அண்ணா வகுப்பில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்ற பாட்டியைப் பற்றிக் கூறினார். அப்போது, பாட்டி பத்மபூஷன் விருது பெற்றவர் என்றும் கூறினார். சிவராஜ் அண்ணா ஒருநாள் பாட்டியைப் பார்த்துவிட்டு திரும்பும் போது பாட்டி அந்த பத்மபூஷன் விருதை நோட்டின் அட்டையின் நடுவே இருந்து எடுத்து சிவராஜ் அண்ணாவிடம் "இதை நீ டோல்கேட்டில் காண்பித்தால் இலவசமாக விடுவார்களாம். இது உனக்கு உதவும்" என்று கூறியுள்ளார். அதை கேட்ட சிவராஜ் அண்ணா சிரித்துக்கொண்டே "இது கிடைக்க எவ்வளவு பேர் எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்க அதை வைங்க பாட்டி நீங்க" என்று கூறியதாக கூறினார். பாட்டியை ஒருநாள் சந்திக்க போகலாம் என்று அண்ணா கூறினார்.
எங்கள் அறக்கல்வி வகுப்பு மூலமாக நாங்கள் 13 பேர்கொண்ட குழு பாட்டியை பார்க்கச் செல்லலாம் என்று திட்டம் தீட்டினோம். பாட்டியை பார்க்கச் செல்லும் முன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள இணையதளத்தில் தேடிப் பார்த்தோம் மற்றும் "சுதந்திரத்தின் நிறம்" என்ற அவர்களின் சுயசரிதைப் புத்தகத்தையும் படித்தோம்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்ற பெண் ஒரு சமூகசேவகி மற்றும் போராளி என்றும் தெரிந்து கொண்டேன். மதுரையின் "முதல் பெண் பட்டதாரி" ஆவார். பாட்டி காந்தியுடன் மேடையை பகிர்ந்திருக்கிறார். மார்ட்டின் லூதர் கிங்கை சந்தித்துள்ளார். "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் காந்தியுடன் சிறையில் இருந்துள்ளார். உப்பு சத்தியாகிரகத்திலும் பங்கேற்றுள்ளார். வினோபா பாவேயின் சர்வோதய அமைப்பில் இணைந்து பூமிதான இயக்கத்திலும் கலந்து கொண்டவர். சர்வோதயா அமைப்பில் தான் ஜெகந்நாதன் ஐயாவை சந்தித்து திருமணம் செய்து இருவரும் இணைந்து காந்திய வழியில் போராட ஆரம்பித்தனர். இது அனைத்தையும் அறிந்துக்கொண்டு ,பாட்டி விருது பெரும் போது கொடுத்த உரை சிலவற்றையும் கேட்டேன்.
நாங்கள் அக்டோபர் 23 அன்று காந்திகிராமம் சென்றடைந்தோம். பிறகு, எங்கள் மதிய உணவை முடித்துவிட்டு சிறு சிறு வேலைகளை செய்துவிட்டு பாட்டியை பார்க்கச் சென்றோம். பாட்டி, எங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். பின், "எங்கள் அனைவரின் வீட்டிலும் ஒரு நாள் வந்து சாப்பிட வேண்டும்" என்று கூறியது இன்னும் எங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பாட்டி கீழ்வெண்மணியில் கூலித் தொழிலாளி குடும்பங்கள் தங்கள் முதலாளியிடம் கூலி உயர்வு பற்றிக் கேட்டதற்கு அந்த முதலாளியால் தீவைத்துக் கொல்லப்பட்ட குடும்பங்களை பற்றி பேசினார். பின் ஒரு சாமியாரிடமிருந்து நிலமில்லாத கூலித் தொழிலாளிகளுக்கு சுமார் 30,000 ஏக்கர் இடம் வாங்கிக் கொடுத்தேன், என்று கூறும் போது அவங்க முகத்தில் ஒரு அளவற்ற மகிழ்ச்சி தெரிந்தது. நாங்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடச் சென்றோம். அப்போது , எங்களுடன் பாட்டியின் மகளான சத்யா அக்கா மற்றும் சிவராஜ் அண்ணா என அனைவரும் இணைந்து நட ஆரம்பித்தோம். பாட்டி தோற்றத்தில் வேண்டுமானால் 97 வயது போல் தெரியலாம். ஆனால், மனதளவில் பாட்டி குதித்து விளையாடும் இளம் வயது பெண் போன்று ஆர்வம் மிகுந்து இருந்தார். அவர்களைப் பார்க்கும்போது நாங்கள் வயதானவர்கள் போலும் பாட்டி இளம் வயது பெண்ணாகவும் எங்கள் கண்ணிற்கு தெரிந்தார்.
பாட்டியின் மகன் பூமிகுமார் அவர்கள் கம்போடியாவில் இருக்கிறார். அவருடன் நாங்கள் மாலையில் மடிக்கணினியில் பேசினோம். அப்போது அவர் சிவராஜ் அண்ணாவிடம் எங்களை அங்கு கூட்டி வந்ததற்கு நன்றி என்றார். அவரிடம் நாங்கள் அறக்கல்வி என்ற ஒரு வகுப்பில் இருந்து வருகிறோம் என்று கூறினோம். அதற்கு அவர் "உங்கள் அறக்கல்வி வகுப்பு யார் எடுப்பார்? எப்படி இருக்கும்?" என்று கேட்டார். அதற்கு நாங்கள் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த ஆளுமைகளால் எடுக்கப்படும் என்று கூறினோம். "இதுதான் உண்மையான கல்வி" என்று அவர் கூறியதும் உள்ளுக்குள் ஒரு இனம் புரியா ஆனந்தம் என்றே கூறலாம்.
அடுத்த நாள் காலை எழுந்து சூரிய உதயம் பார்க்கச் சென்றோம். எங்களுடன் கார்மி என்ற வெளிநாட்டவரும் வந்தார். அவர் லண்டனில் இருந்து பாட்டியைப் பார்க்க வந்ததாக கூறினார். அவர் கைப்பேசியில் ஒரு இளையராஜா பாட்டைப் போட்டுக் கொடுத்து ஒரு அழகான நட்பை கொண்டோம். சூரிய உதயம் பார்த்தபின் நாங்கள் ஊழியரகம் திரும்பினோம். பாட்டி, வேணுகோபால் அண்ணாவுடன் அமர்ந்துப் பேசிக் கொண்டு இருந்தார். நாங்களும் போய் இணைந்து கொண்டோம். அப்போது பாட்டி கார்மியிடம் "எவ்வளவு பணம் செலவழித்து இங்கு என்னை பார்க்க வந்தாய்?" என்று கேட்டார் அதற்கு அவர் "இரண்டரை லட்சம்" என்றது எங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. பின், நாங்கள் மீதம் வைத்த மரக்கன்றுகளை நட சென்று விட்டோம். பாட்டி அங்கும் வந்து செடி மற்றும் கிணற்றை பார்த்து கொண்டிருந்தார். பிறகு, நாங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்ததால் அனைவரும் தயாராகி பாட்டியைப் பார்க்க போனோம். அப்போது பாட்டி, "நீங்க இருக்கும் இந்த இடத்திலதான் இரண்டு தூணுக்கும் இடையில் நேரு உட்கார்ந்திருந்தார்"என்று மாட்டியிருக்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். அதே போல் ஒரு அறையைக் காட்டி "இதில் தான் மார்ட்டின் லூதர் கிங் தங்கினார்" என்று கூறினார். பின், சத்யா அக்காவும் பாட்டியும் இணைந்து "அருட்பெருஞ்ஜோதி" பாட நாங்கள் அமர்ந்து கண்களை மூடி வணங்கினோம். பிறகு, பாட்டி "கல்லூரி விடுமுறை விட்டால் இங்கு வாருங்கள் அமைதியாக இருக்கும் படிக்க நன்றாக இருக்கும். நான் உங்களுக்கு உணவு அளித்து பார்த்துக் கொள்கிறேன்" என்றார். அதன் பின், சத்யா அக்கா உங்களுக்கு எந்த உதவி என்றாலும் எங்களிடம் கேளுங்கள். நானும் அண்ணாவும் ஒரு தாய்,தந்தை போல் உங்களைப் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினார். அப்போது நெகிழ்ந்தே விட்டோம். பிறகு, சிவராஜ் அண்ணா மரக்கன்றுகளை கொடுக்க பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கி அதை அனைவரும் பெற்றுக் கொண்டோம். அவர்களை பிரிய மனமில்லாமல் அங்கிருந்த இரு நாட்களின் இனிப்பான நினைவுகளுடன் வீடு திரும்பினோம்.
நான் முதலில் கூறியது போல் மேரி கோமிற்கு தன் குடும்பமும் குழந்தையும் ஒரு தடையாக இல்லாதது போல் பாட்டியும், ஜெகந்நாதன் ஐயா கூறியதால் சத்யா அக்காவை கொண்டு போய் ஈரோட்டில் விட்டேன் என்று கூறியது எனக்கு இருவரையும் பொருத்தி பார்க்கும் தருணமாகியது. அதன் பிறகு தான் யோசித்தேன் 2005ல் திருமணமாகி தன் விருப்பத்தை செய்த மேரி கோம் ஒருபுறம், 1950ல் திருமணம் செய்து அப்போதே தான் விரும்பிய நாட்டிற்காக தன் மகளைப் பிரிந்து கூட இருந்த பாட்டியை நினைத்து பெருமை கொண்டேன். இப்போது, என் எண்ணம் என்னவென்றால் "திருமணமும் குழந்தையும் ஒருபெண்ணிற்கு ஒருபோதும் தடையாக இருப்பது இல்லை" அதற்கு "தன் துணையை சரியாகத் தேர்ந்தெடுத்தலும் நம் விருப்பத்தின் மீது நாம் கொண்ட நம்பிக்கை மட்டுமே போதும்" என்று உணர்ந்தேன்.
மு.சௌமியா ஸ்ரீ
கருத்துகள்
கருத்துரையிடுக