ஜோதியின் வடிவம் - தமிழ்ச்செல்வி
"கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்" என்ற ஆளுமையின் பெயரை நான் அறக் கல்வி வகுப்பில் " சிவராஜ்" அண்ணா வகுப்பெடுக்கும் போது அறிந்து கொண்டேன்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்பவர் சிறுவயதிலிருந்தே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர் வினோபா பாவேவுடன் இணைந்து பூமிதான இயக்கத்தில் தலித் மக்களுக்கு நிலங்களை பெற்றுத் தந்துள்ளார்.
மார்ட்டின் லூதர் கிங், காமராஜர் போன்றோரின் நட்பு இவருக்கு உண்டு.சிவராஜ் அண்ணா கட்டாயம் ஒரு நாள் நாம் அனைவரும் பாட்டியை பார்க்கச் செல்லலாம் என்று கூறினார்.அவ்வாறாக நாங்கள் 13 பேர் கொண்ட குழுவாக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களை பார்க்கச் சென்றோம். நாங்கள் அனைவரும் காந்திகிராமத்தை அடைந்தோம். பின்னர் சிவராஜ் அண்ணாவும், மஞ்சரி அக்காவும் எங்களுடன் இணைந்து கொண்டனர். சிறிது தொலைவை கடந்த பின்னர் ஊழியர் அகத்தை அடைய முடியும் என்று ஸ்டாலின் அண்ணாவும் முத்து அண்ணாவும் கூறினார்கள். நாங்கள் நடக்கத் துவங்கினோம். திடீரென இரயில் ஒன்று வேகமாக அந்த பாதையின் வழிச் சென்றது. அந்த இடத்தில் தான் காந்தியின் நினைவாக ஓர் நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. அண்ணல் காந்தியடிகள் திண்டுக்கல் வந்த போது அவரை காண மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர்.அங்கு நின்று மக்களிடம் பேசுவது சட்டவிரோதமானது என காந்தி கூறியுள்ளார். அப்போது காந்தியடிகள், அங்கே சில நிமிடங்கள் நின்று மக்களைப் பார்த்துவிட்டு சென்றார். அந்த இடத்தின் நினைவாகவே இந்த நினைவிடம் கட்டப்பட்டது என சிவகுரு அண்ணா எங்களிடம் பகிர்ந்துக்கொண்டார். மேலும் இந்த காந்திகிராம் பல்கலைக்கழகம் 1800 ஏக்கர் பரப்பளவை கொண்டது எனவும் கூறினார். நாங்கள் இதனை கேட்டுக் கொண்டே ஊழியர் அகம் அடைந்தோம். உள்ளே நுழைந்த உடனே ஜெகந்நாதன் ஐயா அவர்களின் நினைவிடம் இருந்தது. அனைவரும் அங்கேச் சென்று சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். பின்னர் அதன் அருகே இருந்த வீட்டில் பாட்டி இருப்பதை கவனித்துக் கொண்டேன். நாங்கள் அங்கு மதிய வேளையில் சென்றிருந்ததால், மதிய உணவை உண்டுவிட்டு, எங்கள் தங்குமிடங்களை தூய்மைபடுத்திக் கொண்டோம். பின்னர், மண்புழு உற்பத்திக்கான உரத்தை செய்வதற்கான வேலையை செய்தோம். பாட்டியின் மகள் பெயர் "சத்யா". சத்யா அக்கா எங்களை அழைத்தார். பாட்டி எங்களிடம் உரையாடப்போகிறார் என்ற ஆர்வம் என்னுள் தோன்றியது. ஏறத்தாழ 80 மரக்கன்றுகள் அங்கே இருந்தது. வேலையை நாங்கள் செய்ய துவங்கினோம். அன்று 30 மரக்கன்றுகளை மட்டுமே எங்களால் நட்டு வைக்க முடிந்தது. பின்னர் பாட்டி எங்களிடம் உரையாடினார். நாங்கள் பாட்டியை கூர்ந்து கவனித்தோம். நாங்கள் அங்கு சென்று மரம் வைக்க உதவியதற்கு நன்றி கூறினார். மேலும் அவர் பேச துவங்கினார், பூமிதான இயக்கத்திற்கு ஈரோட்டில் தலைவராக "ஜெகந்நாதன்" ஐயாவை இருக்கும்படி காந்தியும் வினோபா பாவே அவர்களும் கூறியதாகவும், அவர்களின் சொற்படி தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் பூமிதான இயக்கம் ஈரோட்டில் 'மன்றாடியார் நகரில்' நிறுவியதாகவும் கூறினார். அதிகாலை முதலே அவர்கள் பயணத்தை, துவங்கி சதா நடந்து கொண்டே இருப்பார்கள் எனவும், உணவுக்காக பொட்டுக்கடலையை மட்டுமே உண்டுவிட்டு பயணத்தை மீண்டும் துவங்கிவிடுவார்கள் என பாட்டி கூறினார். ஜெகந்நாதன் ஐயா அவர்கள் தமிழ்நாடு முழுவதுமாக பூமிதான இயக்கத்தை ஏற்று நடத்தும் தலைமைப் பொறுப்பில் இருப்பதனால், தங்கள் இரண்டு பிள்ளைகளையும் வேறொரு இடத்தில், கொண்டுபோய்விட்டு வருமாறு கூறினார். அதைக் கேட்ட சத்யா அக்கா, பாட்டியின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டதாக கூறினார். திருச்சி இரயில் நிலையத்தில் பாட்டியும் சத்யா அக்காவும் எங்கே செல்வதென்று தெரியாமல் நின்றிருந்தனர். அப்போது, சத்யா அக்காவுக்கு மிகுந்த காய்ச்சல் இருந்ததாகவும், காய்ச்சலுக்கு மருந்து வாங்க சென்றால் சத்யா அக்காவை யாரேனும் தூக்கிச் சென்றுவிடுவார்கள் என பாட்டி அழுதுகொண்டிருந்தார். அப்போதுதான் பாட்டிக்கு ஒரு யோசனை வந்தது. இரயில்வே டிக்கெட் கொடுக்கும் ஊழியரிடம் கேட்டுப் பார்த்தார். அவர் பாட்டிக்கு உதவினார்.பின்னர் சத்யா அக்காவை ஈரோடு கலைமகள் பள்ளியில் பாட்டி சேர்த்துவிட்டதாக கூறினார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யா அக்கா அங்கு பயில்வது அவர்களின் பள்ளிக்குதான் பெருமை என்று கூறினார் எனவும் பள்ளியில் ஐந்து ஆசிரியர்கள் பொறுப்பேற்று சத்யா அக்காவை படிக்க வைத்ததாகவும் கூறினார். அவர்கள் சேர்ந்து சத்யா அக்காவை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்புவதாகவும் கூறினார். பாட்டிக்கு ஒரே கவலை அக்காவின் பயணச் செலவிற்குகூட பாட்டியினால் பணம் கொடுக்க இயலவில்லை. அப்போது தான் சத்யா அக்காவிடமிருந்து ஒரு செய்தி பாட்டிக்கு வந்தது. "ஸ்வீடனிலிருந்து அக்காவிற்கு 15,000 டாலர் கல்வி உதவித் தொகை" வந்துள்ளதாக கூறினார். அந்தப்பணத்தை கருப்பினப் பெண் ஒருவரின் கல்விச் செலவிற்காக செலவழித்ததாகவும் அந்த பெண் வேலை வாங்கிய பின்னர் பாட்டியை பார்க்க தன் முதல்மாத ஊதியத்தை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் கூறினார். அதற்கு பாட்டி "நான் கொடுத்த பணத்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்", அதற்கு ஈடாக நீ இன்னொரு பெண்ணை படிக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எங்கள் அனைவரின் வீட்டிற்கும் ஒரு நாள் பாட்டி கட்டாயம் வந்து உணவு உண்பதாக கூறினார். பணம் என்ற ஒன்றே மனிதனுக்கு முக்கியமல்ல என்பதனையும் உணர்த்தினார். நல்லதை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் நம்மிடம் இருந்தால் போதும் எண்ணற்ற காரியங்களை நம்மால் செய்துவிட முடியும் என்று கூறினார். பின்னர் அன்று ஆயுத பூஜையாக இருந்ததால் அனைவரும் பூஜைக்குச் சென்றோம். அங்கு பாட்டி “அருட்பெருஞ்சோதி தனி பெரும் கருணை" என்ற பாடலைப் பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். பாடலின் அனைத்து வரிகளையும் பாட்டி நினைவில் வைத்திருந்தார். பின்னர் பாட்டியின் குறும்படம் ஒன்றை அனைவரும் கண்டோம். அதில் பாட்டி "The people don't have courage to face the problem that's the difficulty" என்று கூறியிருந்தார். அது என்னை பார்த்து கூறியது போல இருந்தது. இருக்கலாம், நம்மில் பலர் இப்படி தான் இருக்கிறோம் மற்றும் பாட்டியிடம் பலர் கேட்ட ஒரு கேள்வியாக பாட்டி கூறியது " நீங்கள் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் இருப்பினும் உங்களால் எப்படி உயர்க்கல்வி பயில முடிந்தது?"
அதற்கு பாட்டியின் விடை "சிறுவயதிலிருந்தே எனக்குள் ஒரு ஜோதி இருக்கும், கடவுள் என்னை படைத்தது உண்மையின் வழி நிற்பதற்கு என்று நினைவில் வைத்து கொள்வேன்" என்றார்.பாட்டியின் மகன் பெயர் "பூமிக்குமார்" அவருடனும் நாங்கள் மடிக்கணினியில் பேசினோம். அவரின் குரு " கார்மி" என்பவர் பாட்டியை காண இங்கிலாந்திலிருந்து வந்திருந்தார்.
பின்னர் நாங்கள் இரவு உணவு உண்டு விட்டு, சிறு தொலைவு நடந்துவிட்டு எங்கள் அறைக்குள் சென்று உறங்கினோம். அதிகாலை 5 மணிக்கு எழுந்து அதிகாலை கதிரவனைக் காண சற்று தொலைவு நடந்து சென்றோம். அது அருள் நிறைந்த காலை பொழுது. அங்கு "பறவை நேசித்த மலையின் கதை” என்ற கதையை கௌதமி அக்கா எங்களுக்கு கூறினார். புது உற்சாகத்தை அந்த கதை எனக்குள் அளித்தது. மீண்டும் சென்று மீதியுள்ள மரக்கன்றுகளை நடும் வேலையைப் பார்த்தோம். வேலையை முடித்துவிட்டு பாட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். "கார்மியுடனும்" புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பின்னர், அனைவரும் வீடு திரும்பினோம். இந்தப் பயணம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. புதுப்புது மனிதர்களுடன் நட்பு உருவாகியது. பாட்டியைப் போல மனிதர்களை புரிந்து கொள்ளும் தன்மையை என்னுள் உருவாக்கிக்கொண்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக