நாளும் சிறந்த நாள்- சிபி


இன்று நாங்கள் ஒரு மலையாளிகளின் கிராமத்திற்கு சென்று ஏராளமான மலையாளிகளைக் கண்டோம். ஆனால் அந்த கிராமம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அவர்கள் யாருக்கும் மலையாளம் தெரியாது. அவர்கள் அனைவரும் தமிழர்கள் தான். ஆனால் நான் எந்தப்பொய்யும் சொல்லவில்லை அவர்கள் மலையாளிகள் தான்.

குருவரெட்டியூர் அருகே கண்ணாம்மூச்சி என்ற ஊரில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் பாலமலை என்ற மலையில் ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை மருந்துகளை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டிகள் வழங்குவதற்காகத்தான் நாங்கள் இன்று சென்றோம். ஆனால் அந்தப் பயணமே மனதில் என்றும் மறையப்போகாத இடத்தை பிடித்துவிட்டது.

கண்ணாம்மூச்சியில் சாப்பிட்டுவிட்டு க்ரூஷர் ஜீப்பில் நாங்கள் மொத்தம் 12 பேர் பயணத்தை தொடங்கினோம். அந்த வண்டி தான் அந்த ஊருக்கு ஒரே போக்குவரத்து. பொதுமக்களுக்கு 60 ரூபாய் பயணத்தொகை. நாங்கள் அந்த வண்டியை மொத்தமாக வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றோம். ஒரு பெரியவர் வழியை மறித்து வண்டியின் மேலே ஏறிக்கொண்டார்.

வண்டி குண்டும் குழியுமான மண்பாதையில் செல்லத் தொடங்கியது. அனு "ரோடு எப்ப சார் வரும்" என்று கேட்டாள். "ரோட்ல தா மா போய்ட்டு இருக்கீங்க" என்று கிருஷ்ணன் சொன்னார்.

"இப்படியே தான் போவமா"

"இல்ல இல்ல இப்போ நல்ல ரோட்ல போய்ட்டு இருக்கீங்க இனிமே ரோடே இருக்காது" என்றார்.

நாங்கள் வெடித்துச் சிரித்தோம். ஆனால் சௌமியா அக்கா போன்றவர்களின் கண்களில் பீதி புலப்பட்டது. அவர் சொன்னது உண்மை தான். அந்த தொடக்கத்தில் இருந்த பாதை தான் அந்த பயணத்திலேயே மிகச்  சிறப்பான பாதை. அதன் பிறகு ஒரு பெரிய குழியில் வண்டி விழுந்து எழுந்தது. மேலே வைக்கப்பட்டிருந்த மருந்துப் பெட்டிகள் சிதறித் தெறித்தன.

அதன் பிறகும் நண்பர்கள் இருவர் நாங்கள் மேலே அமர்ந்து கொள்கிறோம் என்று முன்வந்தனர். ஆட்கள் குறைந்தால் நல்லது தான் என்று ஏற்றிக்கொண்டோம். வண்டி நிறைமாத கர்ப்பிணி போல மிக மெதுவாக இரண்டு புறமும் ஆடியசைந்து ஊர்ந்து சென்றது. ஓட்டுநர் மிகத்தேர்ந்த முறையில் ஓட்டினார். வண்டி நீளமாக இருப்பதால் கொண்டை ஊசி வளைவு போன்ற திருப்பங்களில் முழுமூச்சுடன்  செலுத்த இயலாது. அவ்வாறு செலுத்தினால் முன்னால் மண் திட்டில் மோதிவிடக்கூடும். ஆகவே அந்த திருப்பங்களில் ரிவேர்ஸ் வந்து தான் மீண்டும் செல்ல வேண்டும். ஆனால் பின்னாலும் மாபெரும் பள்ளம் இருக்கும் சிறிது தவறினால் பாதாளம் தான். சில இன்ச் இடைவெளிகளில் தான் பயணித்துக்கொண்டு இருந்தோம்.

தேர்ந்த ஓட்டுநர் தான் என்ன அவ்வப்போது சிட்டி ரோபோ போல் தலையை முழுவதும் பின்னால் திருப்பி விடுகிறார். ஐந்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வேறு அவருக்கு வந்து விடுகிறது. திறன்பேசியை காதில் வைத்துக்கொண்டு ஒற்றைக்கையில் ஓட்டிக்கொண்டு இருந்தார்.

சுமார் 6 கிமீ கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அந்த கிராமத்திற்குள் நுழைந்த போது தான் கிருஷ்ணன் அவர்கள் இங்கு உள்ளவர்கள் மலையாளிகள் என்று கூறினார். நான் கண்களை அகலத்திறந்து அவரைப் பார்த்தேன். அவர் கேரளாவில் உள்ள மலையாளிகள் அல்ல மலையாளி என்பது ஒரு பழங்குடி இனம் என்றார். இமைகளின் உச்சப்பட்ச அளவு வரை பிளந்தேன். சாதி பற்றியோ சாதிப் பெயரை குறிப்பிட்டோ பேசாமல் இருந்தால் சாதி மறைந்துவிடும் என்னும் மடத்தனமான நம்பிக்கையில் சில காலம் இருந்துள்ளேன். சாதி பற்றி எந்த அறிதலும் இன்றி வெறுமனே சாதி பெயரைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற நிலையில் தான் நான் இருந்தேன். அறக்கல்வி கற்க வந்ததற்கு பிறகு தான் எனக்கு ஓரளவிற்கு சாதி குறித்தான புரித்தல் ஏற்படத் தொடங்கியது. புதிய வாசகர் சந்திப்பின் போது ஜெயமோகன் அவர்கள் அனைத்து சாதிகளுக்கும் அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு பதவி வழங்குகின்றன அது ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்று சொன்னார். மேலும் 1910 ஆம் ஆண்டிற்கு முன் இந்தியாவில் சாதிகள் ஒரே நிலையாக இல்லை அவ்வப்போது உயர் சாதியினர் தாழ்ந்த சாதியாகவும், தாழ்ந்த சாதியினராக இருந்தவர்கள் உயர்ந்த சாதியாகவும் நிலவுடைமை பொருத்து மாறிக்கொண்டே இருந்துள்ளனர் இறுதியாக ஆங்கிலேயர் ஒருவர் தான் அதை ஒரு நிலையாக நிறுத்தியுள்ளார் என்று சொன்னார். கெய்க்வாட் என்ற இனம் மகாராட்டிரத்தில் உயர்ந்த சாதியாகவும் கர்னாடகத்தில் தலித்துகளாகவும் உள்ளனர் என்றார். இதெல்லாம் மிகுந்த வியப்பை எனக்கு அளித்தது. சாதிகள் குறித்து மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

மலையாளிகள் குறித்து சிலவற்றை வாசித்தேன். இவர்கள் தான் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பழங்குடி இனத்தவர் என்று தெரிந்தது. தமிழ்நாட்டில் முதன்மை பழங்குடி இனமாக இருக்கும் ஒரு இனத்தின் பெயரையே இப்போது தான் தெரிந்து கொண்டேன். அதிலும் பெரிய அண்ணன்‌, நடு அண்ணன்,சின்ன அண்ணன் என்று மூன்று வகையாக இவர்கள் வாழ்கின்றனர். இதற்கு நிறைய கதைகளும் சொல்லப்படுகிறது.

இறுதியாக பள்ளியை அடைந்தோம். அழகழகாக முழங்கால் உயரத்தில் ஒரே மாதிரியான உடையணிந்த பந்துகள் போல ஓடித் திரிந்து கொண்டு இருந்தனர் குழந்தைகள். வெகு சீக்கிரத்திலேயே எங்களுடன் அவர்கள் ஒட்டிக்கொண்டனர். ஒரு குழந்தையின் பெயர் சுனிதா.

பிரேக் இல்லாத சைக்கிளில் ஒரு சிறுவன் பல வகையான சாகசங்களை செய்து காட்டிக்கொண்டு இருந்தான். அந்தப் பள்ளிக்கு செல்லும் வழியில் வண்டி செல்லச் செல்ல ஒருவர் ஜன்னலை பிடித்து ஏறி  தொங்கிக்கொண்டு ஏற்கனவே ஒற்றைக் கையால் ஓட்டும் ஓட்டுநருடன் பேசிக்கொண்டே வந்தார். இடம் கொடுத்ததற்கு ஈடாக இரண்டு ஆரஞ்சு பழங்களை சட்டைப்பையில் இருந்து எடுத்து எங்களுக்கு அளித்தார். கன்னமும் நெற்றியும் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு கண்களை இருக்க மூடினேன். அவ்வளவு புளிப்பு.

அங்கிருந்து ஒரு ஓடைக்குச் சென்றோம். முகம் கழுவிட்டு சில புகைப்படங்களை எடுத்தோம். அப்போது தான் கிருஷ்ணன் அவர்கள் எங்கள் வாழ்க்கையில் சிறந்த நாள் எது என்று கேட்டார். யாருமே பதில் சொல்லவில்லை. வெகு நேரம் யோசித்திருப்போம். ஏராளமான நாட்களில் ஒரு சிறந்த நாளை பொறுக்கி எடுக்க சிரமப்பட்டோமா அல்லது சிறந்த நாளே இல்லாத சபிக்கப்பட்ட வாழ்க்கை தான் எங்களுடையதா? தெரியவில்லை. ஆனால் இப்போது நிறைய நாட்கள் தோன்றுகின்றது. அங்கிருந்து கிளம்பி கீழே இறங்கத் தொடங்கினோம்.


சாலை சீரமைக்கப்பட்டுக் கொண்டு இருந்ததால் வண்டி ஒரு இடத்தில் நின்றது. ஈஸ்வர மூர்த்தி என்னைக் கூப்பிட்டு துடுப்பு வால் கரிச்சான் ‌(Rocket tailed drongo) ஒன்றைக் காட்டினார். இதுவரை நான் அதை பார்த்ததே இல்லை இது தான் முதல் முறை. அதன் வால் பகுதி இரண்டாக பிரிந்து நீண்டு இறுதியில் சின்ன சிறகாக இருக்கும். அனு அதைப் பார்த்துவிட்டு அது பறந்து போகும் போது அது பின்னாலயே இரண்டு பட்டாம்பூச்சி போகுது பாரேன் என்றாள். மலை மீன்கொத்தி (stork billed kingfisher) என்ற இன்னொரு பறவையையும் பார்த்தோம்.

அங்கிருந்து வரும் பொழுது நானும் வண்டியின் மீது ஏறிக் கொண்டேன். எத்தனை பேரைத்தான் தாங்குமோ அந்த வண்டி. மேலே உள்ள சக்கரத்தில் அமர்ந்து கால்களை தொங்கப் போட்டுக் கொண்டு அந்த வண்டியில் மெதுவாக ஆடி அசைந்து வரும் பொழுது யானை மீது அமர்ந்து உலா வருவது போன்ற உணர்வு.

என்னுடைய வாழ்வின் சிறந்த நாள் இன்று தான். அடுத்த நாள் வரும் வரை..

Rocket tailed drongo

கருத்துகள்

  1. சிபி,

    ஒரு பயணம் முடிந்து திரும்பி நம் தோழர்களுடன் பேசும் போது ஒன்றை அறிவோம் நாம் கண்ட இடம் அல்ல பிறர் கண்டது. சில ஆண்டுகள் சென்றபின் மேலும் ஒன்று அறிவோம் நம் மனதில் நின்றது அல்ல பிறர் மனதில் நிற்பது. இதுவே ஒரு பயணத்தை மேலும் வசீகரமாக்குகிறது.

    மிகக் கச்சிதமாக துவங்கி முடிதுள்ளீர்கள். ஒரு செறிவான பயணக் கட்டுரை வரிசையில் இது சேரும். இக்கட்டுரை எழுத சில தயாரிப்புகள் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்ப்பிணி போல சென்று யானை மீது அம்பாரியாக திரும்பியது ஒரு நல்ல விவரணை.

    பயணத்தில் நாம் கண்களை அகலத் திறந்து கொள்வோம், நாசி செவிகளை கூராக வைப்போம், மனதை ஒரு வலையாக எய்து புற உலகைப் பிடிப்போம். மெய்யை விரித்துக் கொண்டு நாவை எல்லாவற்றிலும் குறுக்கிக் கொள்வோம். அப்படித் தான் நீங்களும் சென்று வந்துள்ளீர்கள். இக்கட்டுரை வழி அந்த நாளை இருமுறை வாழ்ந்துள்ளீர்கள். மேலும் ஒரு நாள் கொடியில் ஏறிப் பறக்க வாழ்த்துக்கள்.

    கிருஷ்ணன்,
    ஈரோடு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ

தீபம் - சிறுகதை

மூன்றாவது மாடி - சிபி