எழுத்தாளரை துரத்துதல் - சிபி
இன்று மாலை ஆறு மணியில் இருந்து ஒருவரை துரத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் அவரை சென்றடையும் சில கணங்கள் முன் கிளம்பி வேறு இடத்திற்கு சென்று விடுகிறார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டே இருக்கிறார். நாங்களும் அவர் செல்லும் இடங்களை எல்லாம் பின்தொடர்ந்து கொண்டே செல்கிறோம். இவ்வளவு தூரம் ஒருவரை துரத்துவதற்குக் காரணம் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்வதே.
மாலை நாலரை மணிக்கு நான் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து திறன் பேசியை எடுத்துப் பார்த்தால் கிருஷ்ணன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்." 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. ஆறு மணிக்கு கிளம்பி அவரை பார்க்கச் செல்கிறோம் நீங்கள் விரும்பினால் இணைந்து கொள்ளலாம்." என்பதே அந்த செய்தி.
இனி எனக்கு சிறுவலூரில் இருந்து பெருந்துறைக்கு 5 மணிக்கு மேல் தான் பேருந்து. நிச்சயமாக ஆறு மணிக்கு ஈரோடு செல்ல இயலாது. ஆகையால் நான் வரத் தாமதமாகிவிடும் நீங்கள் சென்று வாருங்கள் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். நிழலின் தனிமை வாசித்து முடித்த போதே தேவிபாரதி அவர்களைப் பார்க்கச் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்பொழுது அவர் உடல்நிலை சரியில்லை அவருடன் பேசுவது சிரமம் என்று சிவராஜ் அண்ணாவும் கிருஷ்ணன் அவர்களும் சொன்னதால் போகாமல் தவிர்த்து விட்டேன். ஆனால் இப்போது எப்படியாவது போக வேண்டும் என்று தோன்றியது.யோசித்தேன். பெருந்துறை வரை பைக்கில் போய் விடலாம் என்று திட்டமிட்டு மீண்டும் அவருக்கு அழைத்து ஆறு மணிக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பினேன்.
எப்படியோ ஆறுமணிக்கு ஈரோடு சென்றுவிட்டேன். அங்கிருந்து ஈஸ்வரமூர்த்தி, அழகிய மணவாளன், சந்திரசேகர், கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து தேவிபாரியின் வீட்டிற்கு கிளம்பினோம். ஈஸ்வர மூர்த்தி இந்தப் பயணத்தை அவருக்கு மேலும் பயனுள்ளதாக மாற்ற செல்லும் வழியில் உள்ள தன் தங்கை வீட்டிற்கு தேவையான சில பொருட்களையும் வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டார். கிருஷ்ணன் தேவிபாரதியை அழைத்து நாங்கள் வருவதைச் சொல்லி அவரின் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டார்.
அறச்சலூர் செல்லும் வரை தேவி பாரதியை பார்க்கப் போவதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. அறச்சலூர் தாண்டி கைகாட்டி என்னும் ஊரில் வண்டியை நிறுத்தி அனைவரும் தேநீர் அருந்திவிட்டு
"எதுக்கும் மறுபடியும் ஒருவாட்டி தேவி பாரதிக்கு கூப்டு பேசிருவோம். ஏற்கனவே நாங்க வரோம்னு சொல்லீட்டே எங்கயும் போகமாட்டாருனு தா நெனைக்கற" என்று சொல்லியவாறே தேவி பாரதியை அழைத்தார் கிருஷ்ணன்.
"இன்னைக்கு இவர போன்ல புடிக்கவே முடியாது போலயே"
"ஏங்க சார் டவர் இல்லையா அவருக்கு"
"இல்ல ஏகப்பட்ட போன் வந்துட்டு இருக்குது அவருக்கு எப்பக் கூப்டாலும் பிஸி பிஸினு வருது. சேரி வாங்க போவோம் வீட்டுல தா இருப்பாரு"
என்று அவர் வீட்டில் தான் இருப்பார் என்று நம்பிக்கொண்டு மீண்டும் புறப்பட்டோம். பாதி தூரம் சென்றவுடனே தேவிபாரதியிடம் இருந்து அழைப்பு வந்தது.
" ஆ.. ஹலோ சார் உங்க வீட்டுக்கு ஒரு அஞ்சாறு கிலோ மீட்டர் முன்னாடி தா இருக்கோம்"
"அப்படியா வீட்ல இல்லயா நீங்க.."
"மீடியா எல்லாம் வந்துடாங்களா? பேச முடியாம மயக்கம் போட்டுடீங்களா?"
"இப்ப எங்க இருக்கீங்க? வெள்ளகோவிலா?"
"வெள்ளகோவில்ல எங்க அம்மன் பேக்கரியா.. அங்க என்ன தனியா உக்காந்துட்டு இருக்கீங்களா?"
"சேரி சார் நாங்க இங்க நண்பர்கள் கிட்டலாம் பேசிட்டு சொல்ர இன்னிக்கு வரோமா இல்லியானு"
"பேச முடிலயா உங்களால? சேரி சார் அப்போ இன்னொரு நாள் நாம பாப்போம். இன்னொரு நாள் முடிஞ்சா சந்திப்போ.."
என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் போனை வைத்தார். அவர் இன்னொரு தடவை 'முடிந்தால்' பார்ப்போம் என்றால் அது முடியாது என்று தான் அர்த்தம். உள்ளுக்குள் ஒரு வருத்தம் அவரை பார்க்காமலே திரும்புவதா என்று. நல்லவேளையாக ஈஸ்வரமூர்த்தி "இவ்வளவு தூரம் வந்துட்டு திரும்பி போரதுக்கு வெள்ளகோவில் வரைக்கும் போய் பாத்துட்டே போய்ருவோமே சார்" என்றார்.
"அப்படியா வெள்ளகோவிலுக்கு இன்னம் எத்தன கிலோ மீட்டர் இருக்கு"
"பத்து கிலோ மீட்டர் தா சார்"
"என்ன போய் பாத்துட்டே போய்ருவோமா?" என்று கிருஷ்ணன் கேட்டார்.
"போலாம் சார்" என்று ஒருமித்த குரலில் அனைவரும் சொன்னோம்.
"சேரி வுடுங்க போலா"
நிச்சயம் ஈஸ்வர மூர்த்தி பத்து கிலோ மீட்டர் என்று வேண்டும் என்றே தொலைவை மிகக் குறைவாக சொல்லியிருப்பார் என்று தான் நினைக்கிறேன். நல்லவேளையாக அவர் தன் தங்கை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வண்டியில் போட்டிருந்தார்..
ஈஸ்வர மூர்த்தியின் ஊரை நெருங்க ஆரம்பித்த பின்னர் அவர் திளைக்க ஆரம்பித்து விட்டார். ஒவ்வொரு இடமாக சுட்டிக்காட்டிக் கொண்டே வந்தார். மணி ஏழரை இருக்கும். எந்த வண்டியுமே செல்லாத பாதையில் தான் எங்கள் வண்டி சென்று கொண்டிருந்தது. கொஞ்ச தூரம் சென்றவுடன் ஒரு பிரதான சாலை வந்தது.
"சார் இதுதா நத்தகடையூர் டு முத்தூர் ரோடு"
"இதுல தா போக போரமா?"
"இல்ல சார்."
வேறொரு குறுகிய மீண்டும் எந்த வாகனமும் அற்ற தனி சாலையில் பயணிக்க தொடங்கினோம். மேலும் கொஞ்ச தூரம் சென்றபின்
"இது முத்தூர் டு காங்கேயம் மெயின் ரோடு"
"இதுலயாச்சு போரோமா?"
என்றார் கிருஷ்ணன்.
"இல்ல சார்."
"நீங்க எந்த ரோட்டுல வேணா கூட்டிட்டு போங்க ஈஸ்வரமூர்த்தி கேள்வியே கேக்க மாட்டோம். வழக்கமான ரோடே வேண்டாம். தேவிபாரதிய பாக்கரமோ இல்லையோ ஒரு நல்ல பயணம். ராத்திரல பயணம் போய் ரொம்ப நாள் ஆச்சு" என்றார் சந்திரசேகர்.
ஏதேதோ சாலைகளில் எப்படியோ தேவிபாரதியின் வீட்டிற்கு அருகில் வந்துவிட்டோம். வெள்ளகோவிலுக்கு நேராக செல்ல வேண்டும். தேவிபாரதி அவர்களின் வீட்டிற்கு வலதுபுறம் திரும்ப வேண்டும்.
"இங்க இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர்ல தாங்க தேவிபாரதி சாரோட வீடு"
"எதுக்கும் ஒரு தடவ அவரு வீட்டுக்கு போயி பாத்துட்டே போயிருவோமா? நம்ம இங்க வரக்கூடாதுனு வேற ஏதோ எடத்தச் சொல்லீட்டு அவரு இங்க தா உக்காந்துட்டு இருப்பாரோ என்னமோ" என்று சந்திரசேகர் சொன்னார். எல்லோரும் வெடித்துச் சிரித்தோம். நல்ல ரோட்டில் கூட எங்கள் குலுங்கல் சிரிப்பால் வண்டியும் குலுங்கிக் கொண்டே சென்றது.
ரெண்டு கிலோமீட்டர் தானே புதுவெங்கரையாம் பாளையம் என்று அவர் வீட்டிற்கு சென்றுவிட்டோம். பார்த்தால் சாமியானா பந்தல் போட்டு நாற்காலிகள் எல்லாம் போட்டு ஆளில்லாமல் கிடந்தது.
"எப்படிங்க இந்த எடத்த எல்லாம் கண்டுபுடிச்சு மீடியா காரனுங்க வரானுங்க? நம்மல விட புயல் வேகத்துல இருக்கானுங்களே. வந்து ஏகப்பட்ட கேள்வி கேட்டு அவரு பதில் சொல்லியே மயக்கம் போட்டு விழுந்துட்டாராமா." என்றார் கிருஷ்ணன்.
அப்போது தான் கிருஷ்ணன் அவர்களுக்கு இன்னொரு அழைப்பு வந்தது. தேவிபாரதியுடன் இன்னொருவரும் இருக்கிறார் போலும். அவர் தான் அழைத்திருந்தார்.
"அப்படியா.. இப்போ எங்க இருக்கீங்க?
வெள்ளகோவில் டு கரூர் ரோட்டுல போலிஸ் ஸ்டேஷன் தாண்டி இரெண்டு கிலோமீட்டரா?
அம்மன் பேக்கரியா.. சேரி சேரி"
"இப்போ நாங்க வர வரைக்கும் அங்க தான இருப்பீங்க? சென்னிமலை கெளம்பீட்டீங்களா.. அங்கயும் ஆளுங்க வர ஆரம்பிச்சுடாங்களா.."
"சேரி இருங்க இன்னைக்கு நீங்க எங்க போனாலும் அங்க நாங்க வந்தரோம்" என்று ஃபோனை வைத்தார்.
"என்னாச்சுங்க சார்"
"அங்கயும் ஆளுங்க வராங்கலாமா சென்னிமலை கெளம்ப போராங்கலாமா"
"இந்த பயணத்த கொஞ்ச நாள் கழிச்சு யோசிச்சு பாத்தா எப்படி இருக்கும்? 'Chasing the Writer' "
இன்று விடியும் வரை திரிந்தாலும் சரி அவரை சந்திக்காமல் போகக்கூடாது என்று முடிவெடுத்து விட்டோம். முதலில் அவரைப் பார்க்க வேண்டும் என்று தொடங்கிய பயணம் இப்போது இந்த பயணத்திற்காக அவரைப் பார்க்க வேண்டும் என்று மாறிவிட்டது.
வெள்ளகோவில் வந்துவிட்டோம். போலிஸ் ஸ்டேஷன் அருகில் நின்றுகொண்டு தேவிபாரதியுடன் இருக்கும் நண்பரை அழைத்தோம்.
"ஹ.. ராஜா நாங்க வெள்ளகோவில் போலிஸ் ஸ்டேஷன் வந்துட்டோம் இப்போ எங்க வரனும்?"
"சென்னிமலைக்கு கெளம்பீட்டிங்களா.."
முன்னர் அவர் வீட்டில் இல்லை என்று சொல்லும் போது வருத்தப்பட்ட அதே மனம் இப்போது குதூகலிக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் பயணம் நீளப் போகிறது என்று மகிழ்ந்தது.
"இன்னம் கெளம்பலயா.. இப்போ தா கெளம்ப போரீங்களா.."
"சேரி நாங்க வந்துட்டோம் இப்போ எங்க வர்ரது"
"கரூர் ரோட்டுல அப்படியே வர்ரதா.. வந்தா வலது பக்கம் அம்மன் பேக்கரி இருக்குமா. சேரி இருங்க ஒரு ரெண்டே நிமிஷம் வந்தர்ரோம்"
ஒருவழியாக அம்மன் பேக்கரியை வந்தடைந்தோம். அவரையும் பார்த்து விட்டோம். சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு இருந்தார். அப்படியே என்னுடைய பெரியப்பாவின் தோற்றத்தில் இருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத் துரத்தல் முடிவுக்கு வந்தது. தேவிபாரதி சாகித்ய அகாதமி வேண்டுமானால் வென்றிருக்கலாம் ஆனால் இந்தத் துரத்தலில் வென்றது நாங்கள் தான்.
அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். பேக்கரியிலேயே பொன்னாடை போர்த்தி பரிசளித்து வாழ்த்தரங்கம் ஆக்கிவிட்டோம். அவருக்கு பரிசளித்த புத்தகம் என்ன புத்தகம் என்று கேட்டார். உண்மையில் எங்கள் யாருக்குமே அது என்ன புத்தகம் என்று தெரியவில்லை.
"தெரியல சார். கிஃப்ட் பேக் பண்ணி வெச்சிருந்த புக்க எடுத்துட்டு வந்தோம் எங்களுக்குமே என்ன புக்குனு தெரியல ஒருவேள உங்களோட புக்காவே கூட இருக்கலாம் பிரிச்சு பாருங்க" என்று கூறி சிரித்தோம். 'சோர்பா என்ற கிரேக்கர்கள்' என்ற புத்தகம்.
அவர் அரச்சலூர் தியேட்டரில் முறுக்கு விற்றது பின்னர் அதே தியேட்டரில் அவர் எழுதிய திரைப்படம் திரையிடப்பட்டது. சிம்ரனுடன் எடுத்த புகைப்படம். அவர் எழுதிக்கொண்டு இருக்கும் ஆதியாகமம் என்ற நூல் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார். அவருக்கு வந்த வாழ்த்துக்கள் பற்றியும் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
தேவிபாரதி சாருக்கு வாழ்த்துக்களும் அன்பும்..
- சிபி.
சிபி,
பதிலளிநீக்குஒரு உரையாடலில் ஒரு முனை மட்டும் கேட்பது சற்று ஸ்வாரசியமானது, அதை பிடித்து விட்டீர்கள். எதை விடுக்க வேண்டுமோ அதை விடுத்து விட்டீர்கள், அந்த தேர்வு நன்று. தேவிபாரதி தன் படைப்பில் வெளிப்படுத்தும் கோணலான கொங்கு வட்டார மொழியில் இதை அமைத்துள்ளீர்கள், சிறப்பு. அபாரமான மொழியுணர்வு இருந்தால் மட்டுமே இந்த "போலச் செய்தல்" கைகூடும்.
கிருஷ்ணன், ஈரோடு
Good narration, Sibi.
பதிலளிநீக்குYou have delivered it with the flow and true expression.
I felt like I was also part of the travel and was there in the celebrations of Devi Bharathi sir!
Keep writing!
சிறந்த பதிவு. நீர்வழிபடூம் ல் படித்த அதே வட்டார வழக்கு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு