இனிய தொடக்கம் - சிபி

 


யாரென்றே தெரியாத ஒருவர் நம் அருகில் வந்து அமர்வதும் நம்மிடையே பேசுவதும் புதிய அனுபவத்தை அளிப்பதும் அவ்வளவு அரிதானது அல்ல. இருப்பினும் இன்று நான் சந்தித்த ஒருவரைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்று தோன்றிக்கொண்டே உள்ளது.


நாங்கள் ஒரு இந்தியப் பயணம் செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தோம். ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல உள்ளோம். பெருந்துறை சென்று கொண்டு இருக்கும் போது சீனாபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் ஓடிவந்து என்னருகில் அமர்ந்தார். நான் அவரை பெரிதாக பொருட்படுத்தாத வண்ணம் வெளியே வெறித்துக் கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்து 'ஹலோ' என்றவர் என்னிடம் அளித்தார். "தம்பி இதென்னமோ காதே கேக்க மாட்டீது என்னனு பாரு" என்றார்.

பழைய பட்டன் ஃபோன். இது போன்ற கோளாறுகளும், அழைப்பு எண்ணை போட்டுத்தரச் சொல்லியும், "தம்பி ஒரு போன் போட்டு குடே" என்றும் ஏராளமான நபர்கள் என்னிடம் கேட்டுள்ளனர். ஏதோ ஒரு சிறு தயக்கத்துடன் அதை செய்து கொடுப்பேன். இம்முறையும் அவ்வாறே வாங்கி லவுட் ஸ்பீக்கரில் போட்டுக் கொடுத்தேன். வாங்கியவர் திடீரென்று கத்தத் தொடங்கினார்.

"ஏன்டீ அந்த ஆயிருபாய போய் வாங்கீட்டு வன்டியா" என்று உரத்த குரலில் பேசினார். மொத்தப் பேருந்தும் வெடிச்சத்தம் கேட்டு விறுக்கிட்டது போல திரும்பிப் பார்த்தது. அப்போது தான் நானும் அவர் முகத்தைப் பார்த்தேன். அப்போது தான் கழுவிவிட்டு வந்த முகம். தலை வாரப்பட்டு பெரிதாக அழுகில்லாத சட்டையணிந்திருந்தார். வெளியில் தடியூன்றி நடந்து செல்லும் தொண்ணூற்றெட்டு வயது கிளவிக்கும் காது கேட்கும் படி இருந்தது அவரின் கத்தல் பேச்சு.

"அட போ எல்லா பொம்பளைங்க தா வாங்கியாந்துட்டு இருக்காங்கோ. ஜல்ல ஜல்லையா கொண்டுவோய்ட்டு இருக்காங்கோ கரும்பல்லா"

"அத்தன ஜல்ல போது.." என்று என்னிடம் மிகத்தாழ்ந்த குரலில் சொன்னார்.

"ஆறாயிரோ குடுக்கராங்களா? அதாரு குடுக்கரா. அட‌ போயி இந்த ஆயிரத்த வாங்கியா மொதல்ல"

"ஆறாயிரோ வாங்கறாளாமா.. ஆயிருபா பத்தாதாமா. இந்த பொம்பளைகளுக்கு எத்தனைய குடுத்தாலும் பத்தாதுனு தா சொல்லுவாளுகோ" என்று என்னிடம் சொல்லிச் சிரித்தார்.

"அட அதொன்னுமில்லே இங்க சொன்ன."
நான் அறியாமலே என் முகம் சிரித்துக்கொண்டு இருந்ததை சில விநாடிகள் கழித்தே உணர்ந்தேன். அவர் பேசும் போது அவர்களுக்குள் இருக்கும் காதல் அப்பட்டமாக தெரிந்தது.

"சேரி நீ போயி வாங்குனுயா இல்லயா டி."

"அடே வாங்கியாந்துட்டியா.." என்று முகம் நிறைந்த சிரிப்புடன் "சேரி உனக்கைநூறு எனக்கைநூறு என்ன." என்றார்

மீண்டும் மெல்லிய குரலில் "பாத்தியா வாங்கி வெச்சிட்டே என்ன சொல்றானு"

"அட‌ என்னபுள்ள ஆளுக்கு பாதி வெச்சுக்களா வுடு. சேலெ வேட்டியெல்லா வாங்கியாந்தியா. எல்லா நல்லாருக்குதா. நா கட்டுனா நல்லுருப்பனா.. உனக்கு நல்லாருக்குதா புள்ள சேலையெல்லா." என்று கிட்டத்தட்ட வழிந்தவாறே பேசினார்.

"சேரி அதவுடு நித்தியாவு மருமகனுமு வாராங்களா இங்க பொங்கலுக்கு.

"நா ஐநூறு தே வாங்கியாந்தே சம்பளோ. அதுக்கு மேல அஞ்சு பைசா தர மாட்டனுட்டே. கல்ல ஒடச்சு உள்ள போட்டு கரைச்சு வுட்டுப்புட்டு போகச் சொல்றாம்புள்ள அவெ. அப்பறொ அதையும் பண்ணிப்போட்டுதே வந்த. ஆனா ஐநூறு தா குடுத்தே நானென்னொ பொய்யா சொல்றே." என்று அங்கு பேசிக் கொண்டிருக்கும் போதே என்னைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்தது. அழைப்பை வைத்துவிட்டு சொன்னார்.

"அப்படித்தாம்பொய் சொல்லோனு. அவ ஆயிரத்த வாங்கி வெச்சுட்டே நம்மகிட்ட இல்லனா நா மட்டு வுடவனா. ஏழ்நூறுபா வாங்கியாந்துட்டே. நா போவீல எறநூறுக்கு கட்டிங் போட்டு போய்ருவே" என்று கூறி வெடித்துச் சிரித்தார்.

அதன் பிறகு இறங்கும் வரை அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன். அவர் வீட்டில் வளர்க்கும் கோழிகளை பற்றியும். அவர் முதலாளி வீட்டில் அவர் திருட நினைத்த கட்டுச் சேவல்களையும் அதை நிகழ்த்த வாய்ப்பில்லாமல் போனதையும் பற்றிச் சொல்லி சிரித்தார். உண்மையில் நான் மிகவும் மகிழ்ந்து போனேன். உற்சாகத்துடன் பயணத்தை தொடங்கினேன்.

இன்னும் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு உடையணிந்த வெவ்வேறு பாசை பேசக்கூடிய இருநூறு ரூபாயும் ஆயிரம் ரூபாயும் ஏமாற்றி மகிழும் ஆண்களையும் பெண்களையும் பேரவலுடன் எதிர்நோக்கிச் செல்கிறோம்.

-சிபி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ

தீபம் - சிறுகதை

மூன்றாவது மாடி - சிபி