அன்னை மடி - சிபி

 

திடீரென்று கிளம்பும் அரை நாளில் என்ன அதிசயம் நடந்துவிட முடியும்? சாமான்யர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அடுத்த அரை நொடியில் கூட பல ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கலாம். இன்று அப்படி ஒரு பயணம். ஈரோட்டில் இருந்து அத்தானி அருகில் உள்ள அம்மாபாளையம் கிளம்பினோம். கவுந்தப்பாடி வரை எவ்வித குழப்பமும் அன்றி ஒரே மூச்சாக சென்றோம். கவுந்தப்பாடி தாண்டியவுடன் கூகுள் மேப்பில் அம்மா பாளையம் என்று போட்டு அது காட்டும் வழியில் பின்தொடர்ந்தோம். ஈரோடு - கோபி சாலையில் இருந்து உள்ளே திரும்பி சென்றோம். 13 கி.மீ என்று காட்டியது பல சந்துகளில் சுற்றித் திரிந்து விட்டு மீண்டும் வேறுறொரு புறம் இருந்து அதே ஈரோடு - கோபி சாலையில் முட்டி வெளியே வந்தோம். இப்போது 21 கி.மீ என்று காட்டியது. கூகுள் மேப்பை சரமாரியாக வசைமாரி பொழிந்து தீர்த்தோம். அத்தனை திட்டுகளையும் கொட்டி தீர்த்த பிறகு தான் தெரிகிறது நாங்கள் இட்டது தான் தவறான ஊர் என்று. அனைவரும் மானசீகமாக கூகுள் மேப்பிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் சரியான ஊருக்கு வழி கேட்டோம். 


ஒரு மாபெரும் எட்டு போட்டு அம்மாபாளையம் சென்று சேர்ந்தோம்‌. நிலத்தை குமரி என்று கொண்டால் நடுநேர் எடுத்தது போல் அம்மாபாளையத்தையும் அத்தானியையும் குமரியின் மண்டை பிரித்திருந்தது. பவானி ஆறு தான் அந்த நேர். ஆற்றுக்கு இந்த பக்கம் அம்மாபாளையம் அந்த பக்கம் அத்தானி. கண்ணெட்டும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு ஏழெட்டு கிலோமீட்டர் சுற்றி தான் வர வேண்டும். இக்கரையில் இருந்து அக்கரைக்கு பரிசில் இருக்கிறது. பெரிதளவு பயன்பாட்டில் இல்லை. பேரழகு கொண்ட கிராமம். கன்னியின் கண்ணம் வரை துளிர்விட்ட மென் கிருதா ரோமம் போல் சுற்றிலும் இளம்பச்சை நிறத்தில் வயல்வெளி. ஒரு வாகனம் மட்டுமே செல்லுமளவான சாலை. இருபுறமும் குடை போல் சூழ்ந்த நீண்ட மரங்கள். உண்மையில் அன்னையின் வடிவம் தான் அவ்வூர். இந்த ஊரில் தங்கி பணியாற்றிவிட மாட்டோமா என்று ஆசை பெருக்கெடுத்து துள்ளியது. நடந்தால் நன்று என்று அவ்வன்னையிடமே கேட்டுக் கொண்டேன். 


அந்த ஊரை விட்டு விலகிக் கொண்டு இருக்கும் போதே தொட்டங்கோம்பை என்னும் மலையடிவார கிராமத்திற்கு செல்வதற்கு வனத்துறை அலுவலரிடம் அனுமதி பெற்று விட்டு அங்கு வண்டியை திருப்பினோம். வழியில் ஒரு சுமாரான ரொட்டியை விழுங்குவதற்கு சுவையான பாதாம் பால் உதவிற்று. கால் மணி நேரத்திற்குள் தொடங்கியது வனம். எங்கெங்கோ வளைந்து நீண்ட அகன்ற மலைத் தொடரை நோக்கி சென்று கொண்டிருந்தோம். அதுவரை காரை ஓட்டிக் கொண்டிருந்த நான், ஈஸ்வரமூர்த்தி இடம் காரை ஒப்படைத்துவிட்டு வேறொரு காரில் பின்னால் வந்தேன். முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நின்றது. அவர்கள் மிக கவனமாக எச்சரிக்கை கலந்த வியப்போடு எதையோ பார்த்துக் கொண்டு இருந்தனர். கையை வேறு வெளியே நீட்டி காட்டிக் கொண்டு இருந்தனர். இங்கிருந்து ஒன்றும் புலப்படவில்லை. லேசான இலையசைவு மட்டும் தெரிந்தது. என்னவாக இருக்கும் என்ற பேரவா தொற்றிக் கொண்டது. இங்கு பொறுமையுடன் அமர்ந்திருப்பதே மிகக் கடினமான ஒன்றை நிகழ்த்திக் கொண்டு இருப்பது போல் இருந்தது. நாங்கள் அந்த இடத்தை கடக்கும் போது அங்கு ஒன்றுமில்லை. ஏமாற்றம் தான்.

அது என்னவாக இருக்கும் என்னவாக இருக்கும் என்று மனம் தன் போக்கில் யோசித்தது. 



அங்கிருந்து சென்று ஒரு கோவிலின் அருகில் வண்டியை நிறுத்தி இறங்கினோம். இறங்கிச் சென்று அவர்களை மறித்து என்ன பார்த்தீர்கள் என்று கேட்டேன். மான் என்றனர். எத்தனை தடவை மான்களை பார்த்திருப்போம். இரண்டு வாரத்திற்கு முன்பு கூட கர்நாடகத்தில் ஒரு அடைக்கப்பட்ட நடை பூங்காவில் சுமார் 50 புள்ளி மான்களை பார்த்திருப்பேன். ஒரு சிறுமி தன் கைகளால் புல்லை பறித்து அவற்றுக்கு ஊட்டிக் கொண்டு இருந்தாள். அங்கிருந்து சென்று ஜெயமங்களி என்னும் இடத்தில் இரு கைகளாலும் பற்றி புழிந்தது போன்ற சுருள் கொம்புகளுடன் கருநிற மேனியும் வெண்ணிற அடிவயிரும் கொண்ட புல்வாய் இன மான்கள் காட்டிற்குள் குதித்துத் திரியும் போதே பார்த்தோம். இருந்த போதும், கிடைக்கப் பெறாத அரிய ஒன்றை தவறவிட்ட உணர்வே இருந்தது. 



அங்கிருந்த கோவிலின் அருகில் ஒரு ஓடை ஓடிக்கொண்டு இருந்தது. காலணிகளை கழட்டி விட்டுவிட்டு அங்கு துளிர்ந்திருந்த வெல்வெட் விரிப்பு போன்ற பச்சிளம் பாசிகளின் மேல் நடந்து அந்த ஓடையை அடைந்தோம். ஜில்லென்று பாய்ந்தோடிய நீரில் முகம் நினைக்கும் சுகம் அலாதியானது. அது முகம் வழியாக அகத்தில் ஒருவித குளுமையை ஏற்படுத்துகிறது. அந்த குளுமை நெஞ்சோரத்தில் ஒரு குருகுருப்பை ஏற்படுத்துவதை உணர முடியும். அந்த கோவிலின் மரத்தில் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட மணிகளை கட்டி தொங்கவிட்டிருந்தது. 


அங்கிருந்து நேராக மிக மெதுவாக, நத்தையளவு ஊர்ந்து தொட்டங்கோம்பை கிராமத்தை அடைந்தோம். பழங்குடியினருக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்திருந்தது. அந்த ஊரின் இறுதி எல்லை வரை சென்று வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஒரு 300 மீட்டர் நடந்து சென்றோம்‌. அங்கும் ஒரு கோவில் ஒரு ஓடை. இந்த கோவிலில் ஏராளமான இரும்பாலான வளையங்கள் தொங்கவிடப்பட்டு இருந்தது. குறைந்தது ஆயிரம் வளையங்களாவது இருக்கும்.




இந்த கோவில் அருகிலுள்ள மரத்தின் கண்ணிற்கு தெரியாத கிளையில் இருந்து சத்தமிட்ட பறவை 'கருந்தலை மாங்குயில்' என்று ஈஸ்வர மூர்த்தி சொன்னார். அங்கு ஓடிக்கொண்டிருந்த ஓடையின் மறுகரையில் நானும் ஈஸ்வரமூர்த்தியும் சென்று அமர்ந்து கொண்டோம். உடன் வந்தவர்கள் மிகத் தீவிரமாக பல கோணங்களில் பல முகபாவனைகளில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு இருந்தனர். நான் மீனுண்ண கால் வைத்திருந்தேன். சற்று முன் நெஞ்சில் உணர்ந்த அதே குருகுருப்பு இப்போது பாதங்களில். பதினைந்து நிமிடம் அங்கு கழித்தபின் கிளம்பினோம். வரும் வழியில் மின் கம்பியில் ஒரு பறவை. ஜோர்டான் இராபக்கி என்று ஈஸ்வர மூர்த்தி சொன்னார். கழுத்தில் வெண்ணிறப் பட்டை. பறந்துவிட்டது. 


கொஞ்ச தூரத்தில் சாலையில் அதே போல் ஒன்று அமர்ந்திருந்து. ஐந்து நிமிடம் வரை அதை பார்த்துக் கொண்டு இருந்தோம். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் எங்கள் அருகில் வண்டியை நிறுத்தி ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டனர். முன்னாள் ஒரு பறவை உள்ளது அதை பார்க்க நிறுத்தியிருப்பதாக சொன்னோம். தாமதிக்காமல் உடனடியாக "அதெல்லா ஒன்னும் பண்ணாது பயப்படாத போங்கோ" என்று சொல்லிச் சென்றனர். சிரித்துக் கொண்டோம். அப்போது தான் கிருஷ்ணன் சொன்னார். ஒரு அரை நாளில் என்ன செய்ய முடியும்? எதுவேனால் செய்ய முடியும் என்றார். இன்று ஒரு அரை நாள் இயற்கை என்னும் பேரன்னையின் மடியில் தவழ்ந்து மீண்டுள்ளோம். 


-சிபி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளரை துரத்துதல் - சிபி

ஓயாத நடை - சிபி

நாளும் சிறந்த நாள்- சிபி