தீபம் - சிறுகதை

தீபம் வெகு நாட்களுக்கு பின் இங்கு வருகிறேன். ஆனால், இந்த இடம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வாழ்வின் இறுதி கணம் வரை மறக்க முடியாத இடம். அந்த மரத்தடியையும் மண் தரையையும் பார்த்தவுடன் என் விழிகளில் ஒரு தணல் தோன்றி எரிந்து கொண்டிருக்கிறது. கண்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அந்த தணலை அதே கண்களால் பார்க்க முடிந்தது. அருகே சென்றேன். அந்த மரத்தடியின் அடியில் நின்று மேலே தலையை அண்ணாந்து நோக்கிக் கொண்டு இருந்தேன். ஒரு பழுத்த இலை உதிர்ந்து காற்றில் நடனமாடியபடியே வந்து என் கண்களின் மீது விழுந்தது. ஒரு நிமிடம் எதுவும் செய்யாமல் அதே நிலையில் கண்களை மூடி அந்த இலையின் குளுமையை உணர்ந்து நின்றேன். அந்த தணல் தணிந்து விழிகளின் ஓரத்தில் நீர் வழியத் தொடங்கியது. தலையை நிமிர்ந்ததும் இலை சரிந்து என் உடலுடன் உரசி பாதத்தை சென்றடைந்தது. கண்களை துடைத்துக் கொண்டு மெல்ல குந்தி அமர்ந்து அந்த மண்ணில் கையை வைத்து பார்த்தேன். அந்த பெரும் மரத்தின் நிழலிலும் அந்த வெப்பம் அப்படியே இருந்தது. நான் இந்த ஊரை விட்டு சென்று இருபது வருடங்கள் ஆகிறது. என்னுடைய எட்டாவது வயதில் நடந்த அந்த சம்பவம் தான் நான் ஊரை ...