மும்மாநிலப் பயணம் - 2
மைலாவரம் அணை |
ஜனவரி 11 ஆந்திராவை அடைந்த பின் மாலை ஐந்து மணிக்கு நாங்கள் பார்க்க புறப்பட்ட முதல் இடம் மைலாவரம் அணை. அன்றைய பொழுதை அறையில் கழிக்காமல் இருப்பதற்கே இந்த திட்டம். மைலாவரம் அணை நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 7 அல்லது 8 கிலோமீட்டர். அங்கு செல்வதற்கு பேருந்து எதுவும் இல்லை. ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். ஒருவரிடம் விசாரித்த போது ஷேர் ஆட்டோ இருபது ரூபாய்க்கு கூட்டிச்செல்வனர் என்று சொன்னார். நாங்கள் ஒரு ஆட்டோக்காரரிடம் போய் மைலாவரம் டேம் செல்ல வேண்டும் எவ்வளவு தொகை என்று கேட்டோம். அவர் முந்நூறு ரூபாய் என்று சொன்னார். நாங்கள் அதிர்ந்து போனோம். இருபது ரூபாய்க்கு கூட்டிச் செல்வதாக ஒருவர் சொன்னாரே என்று சொன்னோம்.
அது ஷேர் ஆட்டோ இது பிரைவேட் ஆட்டோ. ஷேர் ஆட்டோ நிற்கும் இடத்திற்கு எங்களை வழிகாட்டினார். அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் வண்டியில் எங்களை ஏற்ற முயற்சிப்பார் என்று தான் நினைத்தோம். அதன் பின் அவரிடம் கொஞ்ச நேரம் பேசினோம். எங்களை பற்றி விசாரித்தார். நாங்கள் நாளை கந்திக்கொட்டா செல்ல உள்ளதாகவும் அதற்கு அதிகாலை 5 மணிக்கு பேருந்து இருக்கிறதா என்றும் அவரிடம் கேட்டோம். அவர் இருக்கிறது ஆனால் இப்போது சரியாக வருவதில்லை என்றார்.நாளை காலை பேருந்து வந்தால் பாருங்கள் இல்லையென்றால் என்னை அழையுங்கள் நான் உங்களை கூட்டிச்செல்கிறேன் என்று தன்னுடைய அழைபேசி எண்ணை எங்களுக்கு அளித்தார். அவரை நிச்சயமாக நாளை அழைக்க மாட்டோம் என்று தெரிந்தும் ஒரு சாங்கியத்திற்கு வாங்கி வைடா என்று சங்கரிடம் சொன்னேன். நாங்கள் அதிகாலை ஐந்து மணிக்கு பேருந்து இருப்பதை உறுதி செய்துவிட்டுத் தான் வந்திருந்தோம்.
அவர் கைகாட்டிய ஷேர் ஆட்டோ நிற்கும் இடத்திற்கு சென்று மைலாவரம் அணை செல்ல வேண்டும் என்று சொல்லி ஏறி அமர்ந்து கொண்டோம். அப்போது எங்களுடன் பயணித்த ஒரு மூதாட்டிக்கு தமிழ் தெரிந்திருந்தது. அவரிடமும் நாளை காலை கந்திக்கோட்டா செல்ல பேருந்து உள்ளதா என்று விசாரித்துப் பார்த்தோம். அவரும் ஆட்டோக்காரர் சொன்ன அதே பதிலைத் தான் சொன்னார். இப்போது பள்ளி விடுமுறை பள்ளி மாணவர்கள் யாரும் வராததால் அந்த பேருந்து இயங்குவதில்லை ஆட்டோவில் சென்று திரும்புவது தான் சிறந்த வழி என்றார்.
அப்போதும் நாங்கள் அதை நம்பவில்லை என்ன ஆனாலும் நாளை பேருந்தில் தான் செல்ல வேண்டும் நிச்சயம் பேருந்து வரும் என்றே நம்பினோம்.
ஆட்டோ எங்களை மைலாவரம் அணைக்கு சற்று முன்பு இறங்கிவிட்டது. நடக்கும் தொலைவு தான். ஆனால் அந்த பாட்டி எங்களை அணைக்கு மிக அருகில் கொண்டுசென்று விடுமாறு அந்த ஆட்டோக்காரரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். ஜாக்கிரதையா போய்ட்டு வாங்கப்பா என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். நாங்கள் ஆட்டோவில் வந்த வழி மிகவும் நெரிசலாக இருந்தது. மூச்சுவிட இடமில்லாமல் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இறங்கியதும் சாலையில் ஒரு பன்றிக் கூட்டம் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தோம். அதில் ஒரு பன்றிக்குட்டி முதுகில் மூன்று கோடுகளுடன் கிட்டத்தட்ட ஒரு பெரிய அளவிலான அணில் போன்று தோன்றியது.
முதுகில் மூன்று கோடுள்ள பன்றி |
அங்கு மேய்ந்து கொண்டிந்த ஆடுகளே இதுவரை நான் பார்த்திராத வண்ணம் இருந்தது. அங்கிருந்து நடந்து மைலாவரம் அணை சென்று சூரிய அஸ்தமனத்தை பார்த்தோம். தூரத்தில் ஒரு படகில் இருட்டும் வரை மக்கள் சவாரி செய்து கொண்டு இருந்தனர்.
எங்கள் தங்குமிடத்தில் இருந்து இந்த மைலாவரம் அணைக்கு ஒரு வழியில் 6 கிலோமீட்டர். ஆனால் ஆட்டோ அந்த வழியில் வராமல் வேறு வழியில் 8 கிலோமீட்டர் பக்கம் சுற்றி வந்தது. நான் நண்பர்களிடம் இந்த வழியில் 6 கிலோமீட்டர் தான் நடந்து சென்றுவிடலாமா என்று கேட்டேன். அனைவரும் ஒப்புக்கொண்டனர். நாங்கள் வந்த திசையில் இருந்து நேரெதிர் திசையில் நடந்து சென்றோம். திசை மட்டுமல்ல இடமே நேரெதிர் தான். இரண்டு புறமும் காடும் கருவேலமர முற்களையும் தவிர ஒன்றுமில்லை. அந்திப் பொழுதின் மங்கும் ஒளியில் நடக்கத் தொடங்கி கும் இருட்டாகிவிட்டது. அக்கம் பக்கத்தில் ஊர் இருப்பதற்கான அடையாளமே இல்லை. வெறும் அமைதி.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு சிறு விளக்கு கூட இல்லை. நான் தான் மேப் பார்த்து வழி சொல்லிக்கொண்டு இருந்தேன். உண்மையில் மேப் தேவையே இல்லை முற்கள் படர்ந்த ஒற்றையடி மண் பாதையை தாண்டி அங்கு ஒன்றுமே இல்லை. "டேய் ஒரு நாலு இல்லைனா ஐஞ்சு கிலோ மீட்டர் நடந்தா ஒரு ஆறு இருக்கு அது மேல ஒரு பாலம் போகுது. அதத்தாண்டீட்டா அப்பறம் ஊருதா ஒரே கிலோமீட்டர்ல நம்ம ரூம் வந்துரும்" என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். 7:30 மணி கிட்டத்தட்ட 11 போல் தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு பயம் வரத்தொடங்கியது. "கம்முனு ஆட்டோலயே போய்ருக்கலாம் டா" என்று ஒரு குரல் கேட்டது.
"வாங்கடா டேய் பாலத்துக்கு பக்கமா வந்துட்டோம் அவ்வளோ தா" என்று இரண்டு கிலோ மீட்டர் பக்கம் சொல்லிக்கொண்டே வந்தேன். திடீரென்று இரண்டு புறமும் முள்புதர்களில் இருந்து சத்தம் வந்தது. வெருண்டு விலகி நடந்துகொண்டிருந்த நால்வரும் இடைவெளியில்லாமல் ஒட்டிக் கொண்டோம். அப்பறம் தான் தெரிந்தது அது கவுதாரி என்று. பயத்தை மறைக்க ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டும் சிரித்துக்கொண்டும் நடந்தோம். எங்களின் சிரிப்பு சத்தம் மட்டுமே அங்கு ஒலித்துக்கொண்டு இருந்தது.
ஐந்து கிலோமீட்டர் நடந்து அந்த ஆற்றை அடையும் போது எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அங்கு பாலமே இல்லை. ஆற்றிற்குள் இறங்கி நடந்து செல்லுமாறு கூகுள் மேப் காட்டுகிறது. பெரிதாக தண்ணீர் இல்லை இருந்தாலும் அவ்வளவு எளிதாக நடந்துவிட இயலாது. ஆற்றிற்குள் இறங்கி நடந்தால் நடு ஆற்றில் ஏழெட்டு அடி அகலத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. ஆழம் எவ்வளவு என்று தெரியாததால் உள்ளே கால் வைக்க அஞ்சினோம். திரும்பி வந்த வழியில் சென்றால் ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதுவும் அந்த யாருமற்ற காட்டின் துளியும் வெளிச்சமற்ற இருட்டுப் பாதையில். நாங்கள் சென்ற அன்றைக்கு அம்மாவாசை வேறு. திரும்பி நடக்க ஒருவருக்கும் வலு இல்லை.
ஆற்றுப்பாலம் என்று நினைத்த இடம் |
இங்கிருந்து ஒரே தாண்டாக அந்த எட்டடி அகலத்தையும் தாண்டி விடலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் மூவரும் எப்படியோ தாண்டி விட்டோம். பூபதி மட்டும் உள்ளே விழுந்து எழுந்தான். முழங்கால் ஆழத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. எங்களுக்கு சிரிப்பு தாளவில்லை. இத்தனை தூரம் நடந்து வந்த கால் வலியைக் காட்டிலும் வயிற்றுவலி அதிகமாக தெரிந்தது.
மீண்டும் அந்த ஆற்றிற்குள்ளேயே நடந்து சென்ற பின்னர். மீண்டும் ஒரு இடத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் இது அதை விட அகலமாக இருந்தது. நிச்சயமாக ஒரே தாண்டில் தாண்ட இயலாது. ஆனால் இது கணுக்கால் ஆழம் தான் இருந்தது. ஆகவே நடந்து சென்றுவிட இயலும்.
நாங்கள் அதை நடந்து தாண்டிய பிறகு தான் தெரிந்தது. அது ஆற்றுத் தண்ணீர் அல்ல சாக்கடை நீர் என்று. இருட்டில் கருப்பாக இருந்த நீர் வித்தியாசம் தெரியவில்லை. காலும் செருப்பும் கருகருவென்று ஆயிற்று. ஆனால் உண்மையில் அந்த ஆற்றைக் கடந்ததும் ஊர் வந்துவிட்டது. இரண்டு கிலோ மீட்டர் சுற்றி ஆட்டோக்காரன் எங்களை அழைத்து வந்த போதே சுதாரித்திருக்க வேண்டும். ஊரை அடைந்ததும் ஒரு தண்ணீர் குழாய் இருந்தது.
இரண்டு முறை குளிப்பதைக் காட்டிலும் அதிக நீரைத் திறந்து கால்களை கழுவிக்கொண்டு மீண்டும் நடந்தோம். இப்போது கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது. மீண்டும் நெரிசல் மிகுந்த தெரு. ஆனால் கூகுள் மேப் தன் வேலையை நிறுத்தவில்லை. எங்கேயோ சுற்றவிட்டு இறுதியில் ஒரு முட்டுச்சந்தில் சென்று முடிந்தது பாதை. அந்த சுவரைத் தாண்டினால் அரைக் கிலோ மீட்டரில் எங்கள் அறை. ஆனால் வழி தான் இல்லை.
அங்கு ஒருவரிடம் ஜம்மளமடுகு எப்படிச் செல்வது என்று கேட்டோம். இது தான் ஜம்மளமடுகு என்றார். சரி ஜம்மளமடுகு பேருந்து நிலையம் எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டோம். நாங்கள் வந்த பாதையிலேயே இருநூறு மீட்டர் நடந்து வலதுபுறம் திரும்ப வேண்டும் என்றார். அவ்வாறு திரும்பிய பிறகு மேப்பில் பார்த்தால் முன்பிருந்த தொலைவை விட அதிகமாக காட்டியது. எப்படியோ உள்ளூர்க்காரர்களிடம் விசாரித்து அறையை வந்து சேர்ந்தோம்.
அன்று காலையில் இருந்து பத்து கிலோ மீட்டருக்கு மேல் நிச்சயமாக நடந்திருப்போம். அனைவருக்கும் சலுப்பு. காலையில் நான்கு மணிக்கு எழுந்தால் தான் கிளம்பி ஐந்து மணிப் பேருந்தை பிடித்து கந்திக்கொட்டா சென்று சூரிய உதயம் பார்க்க இயலும். பதினொரு மணிக்கு பக்கம் ஆகிவிட்டது நாங்கள் சாப்பிட்டுவிட்டு படுப்பதற்கு. காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்ற அச்சத்துடனே தூங்கச் சென்றோம்.
- மேலும்.
கருத்துகள்
கருத்துரையிடுக