மும்மாநிலப் பயணம் - 3
ஜனவரி பன்னிரண்டு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிப் பேருந்தை பிடிக்க கிளம்பினோம். நேற்று அந்த ஆட்டோக்காரரும் பாட்டியும் பேருந்து வராது என்று சொல்லியிருந்ததால் ஒவ்வொரு நிமிட தாமதமும் வருமா வராதா என்ற சந்தேகம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஐந்து மணிக்கே ஜம்மளமடுகு இயங்கத் தொடங்கிவிட்டது. ஆட்டோக்களும் கார்களும் குறுக்கையும் மறுக்கையும் திரிந்த வண்ணம் இருந்தது. டீக்கடைகளில் கூட்டம்.
ஒவ்வொருவரிடமும் இப்போது பேருந்து வருமா என்று கேட்டுக்கொண்டே இருந்தோம். வாராது என்றே அனைவரும் பதிலளித்தனர். இரண்டு மூன்று பேருந்துகள் வந்து நின்று சென்றது. இது கந்திக்கொட்டா போகுமா இது கந்திக்கொட்டா போகுமா என்று கைநீட்டி கேட்கும் போதெல்லாம் போகாது என்ற ஒற்றை பதிலே வந்தது.
ஒருகட்டத்தில் சூரியோதயம் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று பயந்தோம். ஆட்டோவில் சென்றுவிடலாம் என்று தீர்மானித்தோம். "டேய் சங்கரு நேத்து ஒரு ஆட்டோக்காரர் நம்பர் வாங்குனீல அவர கூப்ட்டு பாக்கலாமா" என்று அவனிடம் கேட்டுக்கொண்டே காபியை குடித்துவிட்டு குவளையை வைக்க திரும்பும் போது அவர் டீ வாங்கிக் கொண்டு பின்னால் நின்றிருந்தார். "அட என்னடா நெனச்சதும் வந்து நிக்கரா" என்று சொல்லிச் சிரித்தேன். அவரின் பெயர் கிட்டு.
ஏழ்நூறு ரூபாய் என்று சொன்னார் பேசி அறுநூறு ரூபாய் வரைக்கும் குறைத்தோம். மற்ற ஆட்டோக்காரர்கள் எண்ணூறு ரூபாய் வரை சொன்னார்கள். அவருடனே சென்றோம். இருள் சூழ்ந்த சாலையில் வளைத்து வளைத்து ஆட்டோவை ஓட்டிச் சென்றார். எங்களை குஷிப்படுத்த செய்கிறார் என்று நினைத்தோம். ஆனால் அவ்வாறு இல்லை. அது மேடான சாலை எனவே நேராக ஒரே மூச்சில் செல்ல இயலாது வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டும் என்றார்.
ஐந்தரை மணிக்கே கந்திக்கொட்டா சென்றுவிட்டோம். மூன்று மணிநேரம் காத்திருக்கும்படி அவரிடம் சொன்னோம். நாங்கள் அந்த இடத்தை அடைந்த போது இரவு போல் இருட்டாக இருந்தது. மதில் சுவரைத் தாண்டி சென்றதும் உள்ளே ஒரு ஊரே இருந்தது. அந்த ஊரைக் கடந்து இந்தியாவின் கிராண்ட் கேன்யனை அடைந்தோம். கந்திக்கோட்டா கந்தி என்றால் தெலுங்கில் பள்ளத்தாக்கு என்று அர்த்தம் கோட்டா என்றால் கோட்டை.
அங்குள்ள பள்ளத்தாக்கை ஒருபுறத்தின் அரணாகவும் மூன்று புறமும் மதில் சுவரும் எழுப்பப்பட்ட கோட்டை அது. துளி வெளிச்சம் இல்லாத அந்த பள்ளத்தாக்கை செல்ஃபோன் விளக்கின் ஒளி கொண்டு தேடி அங்கு கொட்டி வைத்தார் போல் குவிந்து கிடக்கும் பாறைக் குவியலில் நடந்து சென்றோம். மெல்ல மெல்ல அருகில் இருக்கும் பொருட்கள் புலப்பட ஆரம்பித்தது. கண்களை சுருக்கி அந்த பாறைகளில் பெயின்ட் கொண்டு தீட்டி வைக்கப்பட்டிருந்த காதல் சுவடுகளை படிக்க முடிந்தது.
அனைவரும் தட்டையான பாறைகளைக் கண்டறிந்து அமர்ந்து பாறை இடுக்குகளின் வழி நிலத்தில் இருந்து புடைத்து மலரப் போகும் சூரியனை பார்க்கக் தயாராக காத்திருந்தோம்.
இருள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. சூரியக்கதிர்கள் அங்கு ஓடிக் கொண்டிருந்த பெண்ணாறில் பட்டு பிரதிபலிக்கத் தொடங்கியது. இந்த உலகத்தில் இந்த நொடியில் வேறு எவருமே பார்த்துவிட முடியாத ஒன்றை நாங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தோம்.
![]() |
கந்திக்கோட்டாவில் சூரியோதயம் |
காரிருள் மங்கி ஒரு புறம் அடர் ஆரஞ்சும் மறுபுறம் இள நீலமும் ஒன்றாக இணைந்தது. பஞ்சுருட்டானும் செந்தார் பைங்கிளியும் எங்களை வட்டமடிக்கத் தொடங்கின. மெல்லிய காற்று உரசிச்செல்லும் போது ஒரு ஆழந்த மூச்சு உடலுக்குள் ஒரு வித குளுமையை ஏற்படுத்தியது.
இந்த பயணத்தில் பத்து நாட்களும் ஒவ்வாறுவரும் தினமும் ஒரு பாட்டு போட வேண்டும் மொத்தம் பத்து பாட்டுகள் தேர்ந்தெடுத்து வைத்திருங்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி இருந்தேன். அந்த பாட்டு அடுத்த காலை தான் மற்றவர்களுக்கு தெரியும். இந்த காலைக்கான பாடல்களை போடுமாறு சொன்னேன்.
சங்கர் "மண்ணில் இந்த காதல் அன்றி" எனத்தொடங்கும் பாடலை ஒலிக்கச்செய்தான். பூபதி "சொர்கமே என்றாலும்" பாடலை போட்டான். "நான் ஏரிக்கரை மேலிருந்து" என்ற பாடலை நான் போட்டேன். அந்த சூழலும் பாடலும் அளவிட இயலாத இன்பத்தை அளித்துக்கொண்டு இருந்தது.
வெளிச்சம் வந்த பின்னர் ஒவ்வொறுவராக மக்கள் வரத்தொடங்கினர். நிறைய பேர் வந்து விட்டனர். வெயில் வந்த பின்னரும் எங்களால் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல இயலவில்லை.
"போலாமா டா"
"ம்ம்.. போலாம் டா"
என்று மாறி மாறி சொல்லிக்கொண்டு ஆனால் துளி கூட நகர மனமில்லாமல் வெகு நேரம் அங்கேயே தங்கி விட்டோம். ஒரு கட்டதில் வலுக்கட்டாயமாக எங்களை நாங்களே இழுத்துச் செல்வது போல் எழுந்து நடந்தோம். அந்த கோட்டைக்குள் இருந்த ஜூமா மசூதி, மாதவராய கோவில், ரங்கநாத கோவில், ஜெயில், குளம் என எல்லாவற்றையும் பார்க்கச் சென்றோம். ஆனால் எல்லாவற்றின் வெளிப்புறத்தை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது. அவற்றின் உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை. வெளியே பூட்டப்பட்டு இருந்தது.
ஜூமா மசூதியை நாங்கள் பார்க்கச் சென்ற போது அங்கே இருந்த ஒரு எருமை எங்களை பார்த்தும் தன்னை ஒரு வழிகாட்டியாகவே உணர்ந்து கொண்டு எங்களை ஒவ்வொரு இடமாக கூட்டிச் சென்று காட்டிவிட்டு வந்தது. அனைத்து இடங்களுக்கும் சென்று விட்டு ஜெயில் இருக்கும் இடத்திற்கு சென்றோம். ஜெயிலிற்குள் செல்ல அனுமதி இருந்தது. அதற்குள் சென்று அதை பார்த்தால் அந்த பக்கம் ஒரே வெட்ட வெளியாக இருந்தது. வடிவேலின் ஒரு நகைச்சுவையை சொல்லி அனைவரும் சிரித்தோம்.
![]() |
ஜூமா மசூதி |
![]() |
மாதவராய கோவில் கோபுரம் |
![]() |
கந்திக்கோட்டா சிறை |
புறக்களும் அணில்களும் அந்த கோட்டை முழுவதையும் கையகப் படுத்தி இருந்தது. அந்த ஜெயிலிற்கு வெளியில் ஒரு இளவெட்டக்கல் இருந்தது. அதை அசால்ட்டாக தூக்க போவதாக வசனமெல்லாம் பேசிவிட்டு போய் அந்த கல்லை தூக்க முயற்சித்தால் ஒரு இன்ச் கூட அதை அசைக்க இயலவில்லை. இதற்கு மேல் முயன்றால் முதுகு உடைந்து விடும் போல் இருந்தது. அங்கு இருந்த எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு வருவதற்கு கிட்டுவிடம் நாங்கள் காதிருக்க சொன்ன நேரம் முடிந்துவிட்டது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் எனக்கு மீண்டும் அந்த பள்ளத்தாக்கிற்கு போக வேண்டும் போல் இருந்தது.
நண்பர்களிடம் கேட்டேன் அவர்களுக்கும் அதே எண்ணம் தான் ஆனால் யோசித்து பார்த்ததில் இங்கு இதற்கு மேல் தாமத படுத்தினால் பிளம் குகை செல்வதில் சிரமம் ஏற்படலாம். எனவே அங்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்தோம். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை அந்த பள்ளத்தாக்கை பார்த்து விடாமல் செல்லவும் மனமில்லை. ஒன்று யோசித்தோம். கோட்டை அரணின் மேல் ஏறுவதற்கு ஒரு புறம் படிக்கட்டுகள் இருந்தது. அதில் ஏறி அரணின் மேலேயே நடந்து சென்றால் ஒரு கட்டதில் மேலிருந்து அந்த பள்ளத்தாக்கை பார்த்து விடலாம் என்று எண்ணி மேலே ஏறி நடக்கத் தொடங்கினோம். ஒரு இடத்தில் நாங்கள் நடந்து செல்லும் இடத்திற்கு மிக அருகில் இருந்து ஒரு ஷிக்ரா புறா போன்ற ஒரு பறவையை தன் கால்களில் பிடித்துக் கொண்டு பறந்து சென்று ஒரு செடியின் அடியில் கீழே வைத்து விட்டு அருகில் நின்றது.
![]() |
கழுகும் இரையும் |
இதுவரை பஞ்சுருட்டனின் தட்டான் வேட்டையை மட்டுமே பறந்தவாறே செய்யும் வேட்டையாக பார்த்திருக்கிறேன். கழுகு பாம்பை பிடித்துச் செல்வதை கூட பார்திருக்கிறேன் ஆனால் வானத்திலேயே தன் இரையை பிடிக்கும் முதல் காட்சி இது தான்.
அந்த அரணின் மேல் நடப்பது நாங்கள் நினைத்ததை விட கடினமாக இருந்தது. மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சென்று வந்துள்ளனர். அதுவரை பெரிதாக சிரமம் இல்லை. ஆனால் ஒரு கட்டதிற்கு மேல் சுவருடன் ஒட்டியவாரே செல்ல வேண்டி இருந்தது. அதை கூட கடந்து விட்டோம். அதன் பிறகு இன்னும் குறுகிய பாதையாக மாறியது. ஒரு துளி தவறினால் கீழே விழ நேரிடும். பல்லியைப் போல் சுவருடன் படிந்து தான் செல்ல முடியும். இதற்கு மேல் செல்ல வேண்டாம் என்று திரும்பி விட்டோம். திரும்பி வரும் போதும் அந்த கழுகு தன் இரையை சாப்பிடாமல் நாங்கள் செல்லும் போது இருந்த அதே நிலை மாறாமல் அப்படியே இருந்தது.
கந்திக்கோட்டாவில் இருந்து நாங்கள் வெளியே வருவதற்குள் கிட்டு எங்களை தேடிக்கொண்டு கோட்டைக்குள் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அவரை அழைத்து வெளியே வரச் சொன்னோம். மீண்டும் ஒரு முறை அந்த பள்ளத்தாக்கை பார்க்காமல் எங்களால் அங்கிருந்து செல்ல முடியாது. எனவே, ஆட்டோவில் எறியதும் இன்னொரு சாலை வழியாக கோட்டைச் சுவருக்கு வெளிப்புறமாக அந்த பள்ளத்தாக்கு தெரியும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் படி சொன்னோம். ஏற்கனவே நாங்கள் தாமதமாக வந்தாலும் அதை பற்றி துளி கூட பொருட்படுத்தாமல் நாங்கள் சொன்ன சாலையில் எங்களை அழைத்துச் சென்றார்.
அங்கு சென்று மீண்டும் அந்த பள்ளத்தாக்கை பார்த்த பின்னரே அங்கிருந்து செல்ல எங்களுக்கு மனம் வந்தது. அந்த நேரத்திற்குள் கிட்டுவிற்கு வேற சில சவாரிகளும் வந்துவிட்டது. எங்களோடு சேர்த்து அவர்களையும் ஏற்றிக் கொண்டார். ஜம்மாளமடுகுவை அடைந்ததும். எங்களிடம் நீங்க போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள் உங்களை நானே பிளம் குகை செல்லும் பேருந்தில் ஏற்றி விடுகிறேன் என்றார். நாங்கள் அவரிடம் நாங்கள் சென்று குளித்து விட்டு அறையை காலிசெய்து விட்டு அதன் பிறகு சாப்பிட்டு வருவோம் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை வாருங்கள் நான் இங்கு தான் இருப்பேன் இல்லையென்றால் என அழைபேசிக்கு அழையுங்கள் என்றார்.
நாங்கள் அதே போல் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்க்கும் போது அவரை காணோம். சரி கூப்பிட்டு பார்ப்போம் என்று அவரிற்கு கூப்பிட்டேன் அவர் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது. அவர் வேறு சவாரிக்கு சென்று இருப்பார் என்று எண்ணி நாங்கள் கிளம்பி விட்டோம் என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்து விட்டேன். நாங்கள் ஏற்கனவே எந்த பேருந்தில் செல்ல வேண்டும், எத்தனை மணிக்கு வரும் என்று இணையத்தில் தேடி வைத்திருந்தோம். இல்லையென்றாலும் அங்கு யாரை கேட்டாலும் சொல்லி விடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு நாலடி தூரம் நடப்பதற்க்குள் கிட்டு எங்கிருந்தோ வந்து ஆட்டோவை எங்கள் முன் நிறுத்தி விட்டு சுமார் அரை கிலோமீட்டர் எங்களுடன் நடந்து வந்து எங்களை பேருந்து ஏற்றிவிட்டார்.
பிளம் குகையிற்கு ஜம்மளமடுகுவில் இருந்து நேரடியாக பேருந்து இல்லை. இடையில் ஒரு பேருந்து மாறி தான் செல்ல முடியும். இங்கிருந்து கோலிமிகுண்டலா சென்று அங்கிருந்து தான் பிளம் குகையிற்கு செல்ல வேண்டும். தாடிபத்ரி செல்லும் பேருந்துகள் எல்லாம் கோலிமிகுண்டலா சென்று தான் செல்லும். எங்களை அந்த பேருந்தில் ஏற்றிவிட்டு அந்த பேருந்தின் ஓட்டுநரிடம் எங்களுக்கு தெலுங்கு தெரியாது எங்களை கோலிமிகுண்டலா வந்ததும் இறக்கி விடும் படி சொல்லிவிட்டு சென்றார்.
நாங்கள் உள்ளே ஏறி அமர்ந்ததும் பேருந்தின் மறுபுறம் வந்து ஜன்னல் வழியாக கோலிமிகுண்டலாவில் இருந்து பிளம் குகை செல்வதற்கு இதை காட்டுங்கள் அங்கு இருபவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று சொல்லி ஒரு சீட்டில் எழுதி குடுத்தார். அதில் "கோலிமிகுண்டலா 2 பிளம் குகை" என்று தெலுங்கில் எழுதி இருந்தது. அவர் கையை இறுதியாக ஒரு முறை அழுத்தி பிடித்து இது எத்தனையாவது நன்றி என்றே மறந்து போன நிலையில் மீண்டும் ஒரு நன்றி சொன்னேன்.
- மேலும்
கருத்துகள்
கருத்துரையிடுக