மும்மாநிலப் பயணம் - 1

 


நாங்கள் ஒருமுறை பிள்ளை திண்ணிக்கரடு சென்றிருந்த போது பாரத் தர்ஷன் குறித்து கிருஷ்ணன் அவர்கள் எங்களிடம் கூறினார். அப்போது அங்கு இருந்த இருபது பேருக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் கொண்ட இந்தியப் பயணம் அது. நாங்கள் அது குறித்து தேடிப் பார்த்த போது அது நாங்கள் எதிர்பார்த்த இடங்களையும் எதிர்பார்த்த தொகையையும் உள்ளடக்கியதாக இல்லை.

அப்போது தான் கிருஷ்ணன் அவர்கள் மீண்டும் ஒரு யோசனை வழங்கினார். நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள், செல்லும் தேதி, அதற்கான தொகை என எல்லாவற்றையும் நீங்களே திட்டமிட்டு ஒருங்கிணைத்து சென்று வாருங்கள் என்றார். அந்த பயணத்திற்கு அடிப்படையான ஒரு வரைபடத்தையும் அவரே வழங்கினார். நாங்கள் செயல்படத் தொடங்கினோம். ஜனவரியில் செல்ல வேண்டும் என்று அக்டோபரில் இருந்து திட்டமிடத் தொடங்கினோம். பதினெட்டு பேராக தொடங்கிய எங்கள் குழு சுருங்கி நான்கு நபர்களாக இப்போது இந்தப் பயணத்தை தொடங்கி உள்ளோம்.

ஈரோட்டில் தொடங்கும் எங்கள் பயணம் சென்னை வழியாக ஜம்மளமடுகுவிற்கு சென்று அங்கிருந்து கந்திக்கொட்டா, பிளம் குகைகளைப் பார்த்து விட்டு பின் யாகண்டி கோவில் மற்றும் யாகண்டி குகை, வாரங்கள், ராமப்பா கோவில் ஆகியவற்றை பார்த்து விட்டு விசாகப்பட்டினம் வந்து அங்கிருந்து போரா குகைகள் சென்று அதே ரயிலில் திரும்ப விசாகப்பட்டினம் வந்து பூரி சென்று அங்கு கோனார்க் சூரிய கோயில் மற்றும் சிலிக்கா ஏரி ஆகியவற்றை பார்த்து விட்டு அங்கிருந்து ஒரே ரயிலில் இருபத்தியைந்து மணிநேரம் பயணித்து ஈரோட்டிலியே முடியும். மொத்தமாக சென்று திரும்பும் தொலைவு கிட்டத்தட்ட சுமார் 4000 கிலோ மீட்டர் வருகிறது.

நான், சங்கர், பூபதி, கௌதம் ஆகிய நால்வரும் ஜனவரி 10 இரவு ஈரோட்டில் ரயில் ஏறினோம். கிருஷ்ணன் அவர்கள் ரயில் நிலையம் வரை வந்து எங்களுடன் இரவுணவு உண்டுவிட்டு சென்றார்.

நாங்கள் நால்வருமே இதுவரை ரயிலில் பெரிதாக பயணிக்காதவர்கள். பிளாட்ஃபார்ம் எண் கூட பார்க்கத் தெரியவில்லை. எப்படியோ கூகுளில் ரயில் எண்ணைப் போட்டுத் தேடி கற்றுக்கொண்டோம். எங்களுக்கு இரவு ஒன்பது மணிக்கு ரயில். நாங்கள் 8:30 மணிக்கு சென்றபோது அப்போது அங்கு ஒரு ரயில் இருந்தது. அதில் ஒரு எண் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. எங்கள் ரயிலின் எண்ணுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்து அந்த ரயில் இல்லை என்ற முடிவிற்கு வந்தோம். அது எடுத்துவிடுவார்கள் நாம் செல்ல வேண்டிய ரயில் இதன் பின் வரும் என்று எண்ணிக் காத்திருந்தோம்.

அருகிலிருந்த கடைக்காரரிடம் சென்று "அண்ணா ஏற்காடு எக்ஸ்பிரஸ் இங்கையா வரும்" என்று கேட்டோம். அவர் எதுவும் பேசாமல் வலது கையை தூக்கி அங்கு நின்றிருந்த ரயிலைக் காட்டினார். "அப்பா.. கரக்டா தான்டா வந்துருக்கோம் இங்க தா வருமாமா" என்று சொல்லிக் கொண்டு காத்திருந்தோம். "சேரி வா கொஞ்ச நேரம் இந்த டிரெய்ன் எடுக்கர வரைக்கும் நடக்கலாம்" என்று நின்றிருந்த அந்த ரயிலை ஒட்டி சில தூரம் நானும் சங்கரும் மட்டும் நடந்தோம். அப்போது தான் நான் அந்த ரயிலில் "Erode to MAS Chennai" என்று இருந்ததை பார்த்தேன். சற்று உற்றுப்பார்த்தால் எங்கள் ரயிலின் எண்தான். "அட டேய் இது தான்டா நாம போர ட்ரெய்னு" என்று ஓடிச்சென்று எங்கள் பெட்டியில் ஏறி எங்கள் படுக்கைகளை அடைந்தோம்.

பார்த்தால் மீண்டும் ஒரு சிக்கல். சங்கரின் படுக்கையில் வேறு ஒருவர் படுத்திருந்தார். அவரிடம் அது எங்கள் படுக்கை என்று சொன்னதற்கு அவரின் பயணச்சீட்டை எடுத்து காட்டினார் அது சரியாகத்தான் இருந்தது. எங்களுக்கு மீண்டும் குழப்பம் ரயில் மாறி ஏறிவிட்டோமோ என்று. நான்கு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து திருதிருவென முழித்தோம்.

அதன்பின் அங்கு வெள்ளை சீருடை அணிந்திருந்த பணியாளரிடம் இரண்டு நபர்களுக்கு ஒரே படுக்கை வந்துள்ளது என்று கேட்டு விசாரித்தோம். அவர் வந்து இருவரின் சீட்டையும் வாங்கி சோதித்து விட்டு அவர் வைத்திருந்த திறன்பேசியிலும் சோதித்துப் பார்த்தார். அதில் சங்கருக்குத் தான் அந்த படுக்கை என்று காட்டியது. அப்போது தான் எங்களுக்கு நாங்கள் சரியான ரயில் தான் ஏறியுள்ளோம் என்ற நம்பிக்கையே வந்தது.

அங்கிருந்து சென்னை சென்ட்ரல் அதிகாலை 3:45 மணிக்கு சென்றடைந்தோம். எங்கள் நால்வரில் சங்கரும், கௌதமும் இப்போது தான் முதல்முறையாக சென்னையே வருகின்றனர். நானும் இதற்கு முன் ஓரிரு முறை சென்றிருந்தாலும் பெரிதாக சுற்றியதில்லை. குடும்பத்துடன் வந்து திருப்பியதே. ஒருமுறை மெரினா சென்றுள்ளேன்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எக்மோர் நிலையத்திற்கு ஆட்டோக் காரர்களின் படையெடுப்புகளைத் தாண்டி நடந்தே சென்றோம்.  அங்கிருந்து எர்ரகுண்ட்லாவிற்கு 6:20 க்கு ரயில் பிடித்து 11:40 க்கு வந்தடைந்தோம்.

எர்ரகுண்ட்லா ரயில் நிலையத்தில் இறங்கியதும் பேருந்து நிலையத்திற்கு மேப் போட்டு நடக்கத் தொடங்கினோம். பேருந்து நிலையத்திற்கு நேராக செல்லவேண்டும் ஆனால் எங்களுடன் இறங்கிய கிட்டத்தட்ட நூற்றியைம்பது நபர்களும் இடது புறம் திரும்பி நடந்தனர். அவர்கள் வேறு எங்கோ செல்கின்றனர் என்று நினைத்து நாங்கள் பாட்டிற்கு நேராக நடந்து சென்றோம் ஒரு கட்டத்தில் நாங்கள் மட்டும் தான் அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தோம். கூகுள் மேப் ஒரு கிலோமீட்டர் சுற்றி எங்கள் தலைக்கு மேல் செல்லும் மேம்பாலத்தில் வரச் சொல்லியது. 

"டேய் இது வேலைக்காவாது யாருட்டயாவது கேக்கலாம்" என்று ரோட்டில் நடந்து செல்லும் ஒருவரிடம் பேருந்து நிலையம் எவ்வாறு செல்வது என்று கேட்டோம். தானும் அங்கு தான் செல்வதாகவும் தன்னோடு வாருவதாகவும் அழைத்து நாங்கள் நடந்து வந்த பாதையிலேயே நடந்து சென்றார். "நாம கேட்டது இவனுக்கு புரிஞ்சுதா இல்லையான்னு தெரிலயே டா.. நாம வந்த வழிலயே திரும்ப கூட்டீட்டு போரா" என்று பேசியவாறே பின் தொடர்ந்தோம். நூறு மீட்டர் சென்றதும் வேறு புறம் திரும்பி ரயில் தண்டவாளத்தை தாண்டி நடந்து சென்றோம். ஒரு முக்கால் கிலோ மீட்டரில் பேருந்து நிலையம் வந்து விட்டது. 

இவ்வாறு கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று விசாரித்து பேருந்து ஏறி அமர்ந்தால் அந்த பேருந்து நாங்கள் வந்த வழியிலேயே சென்று ரயில் நிலையத்திற்கு வெளியே அந்த நூற்றியைம்பது பேரும் இடதுபுறம் திரும்பிய சாலையில் இருநூறு மீட்டர் தொலைவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சென்று நின்றது. ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டோம்.

எர்ரகுண்ட்லாவில் இருந்து ஜம்மளமடுகுவிற்கு நேரடியாக பேருந்து இல்லை. புரோட்டாட்டூர் சென்று அங்கிருந்து ஜம்மளமடுகுவிற்கு வேறு பேருந்தில் செல்ல வேண்டும். புரோட்டாட்டூர் பேருந்து ஏறியதும் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் நான் புரோட்டாட்டூர் பேருந்து நிறுத்தம் வந்ததும் சொல்லுமாறு சொல்லியிருந்தேன். கையில் கூகுள் மேப்பையும் போட்டு வைத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர். அதுவரை அவரிடம் ஆங்கிலமும் தமிழும் கலந்து ஏதேனும் பேசிக்கொண்டே வந்தேன். அவர் என்னிடம் தெலுங்கில் பதிலளித்தவாறே வந்தார். நாங்கள் ஜம்மளமடுகு செல்லவுள்ளதாகவும் அங்கிருந்து கந்திக்கொட்டா செல்வதாகவும் அவரிடம் சொன்னேன். கந்திக்கொட்டா நல்ல இடம் என்பது போல ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்.

நீங்கள் கந்திக்கொட்டா சென்றுள்ளீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். உள்ளூர்காரர்களுக்கே உண்டான பிரச்சினை. கூகுள் மேப்பில் புரோட்டாட்டூர் பேருந்து நிலையம் வந்ததும் நாங்கள் எங்களின் பைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானோம். அவர் இருங்கள் நான் சொல்லும் போது இறங்குங்கள் என்று சொல்லி தடுத்தார். கிட்டத்தட்ட மூன்று நிறுத்தங்கள் கழித்து இங்கு இறங்குங்கள் என்றார். அங்கு அவரும் இறங்கி ஒரு ஆட்டோக்காரரிடம் எங்களை ஜம்மளமடுகு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் இறக்கிவிடச் சொல்லிவிட்டு போனார்.

அப்போது தான் நாங்கள் முதல் தேங்க்யூ சொன்னோம். அதன்பிறகு எத்தனை "தேங்க்யூ" சொன்னோம் என்ற கணக்கே கிடையாது. சில "நன்றிகளும்" கூட சொன்னோம். நாங்கள் ஏதேனும் கேட்டு நின்று உதவாமல் போனவர்கள் என்று ஒருவர் கூட இல்லை.

புரோட்டாட்டூரில் இருந்து ஜம்மளமடுகுவிற்கு பேருந்தில் செல்லும் போது தான் ஒன்றை கவனித்தோம் வயதானவர்கள் அனைவரும் நடத்துநரிடம் தங்கள் ஆதார் அட்டைகளை காட்டிக் கொண்டு இருந்தனர். அருகில் இருந்தவரிடம் அது எதற்காக என்று கேட்டேன். "சீனியர் சிட்டிசன், சிக்ஸ்டி பிளஸ், டிக்கெட் ஃபைவ் ருபீ லெஸ்" என்றார். முப்பத்தியைந்து ரூபாய் பயணச்சீட்டு முதியவர்களுக்கு முப்பது மட்டுமே.

முந்தைய நாள் இரவு 7:30 மணிக்கு ஈரோட்டில் நாங்கள் சாப்பிட்ட பின் இதுவரை நாங்கள் சாப்பிடவில்லை. ஜம்மளமடுகு வந்து சேர்வதற்கு மதியம் 2:30 ஆகிவிட்டது. அறையை அடைந்த பின்னரே நாங்கள் சாப்பிட்டோம். சங்கர் நால்வருக்கும் புளிச்சோறு கட்டிக் கொண்டு வந்திருந்தான். நான் சப்பாத்தி கொண்டுவந்திருந்தேன். அன்றைய நாள் இரவு வரைக்கும் அதுவே தாட்டிவிட்டது. 

சாப்பிட்டுவிட்டு மூன்று மணியில் இருந்து ஐந்து மணி வரை தூங்கிவிட்டு சரியாக ஐந்து மணிக்கு மைலாவரம் அணையினை பார்க்கச் சென்றோம்.



-மும்மாநிலப் பயணம் - 2

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ

தீபம் - சிறுகதை

மூன்றாவது மாடி - சிபி